Skip to main content

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

nn

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கீடு செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 100 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 33 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

 

மீதமுள்ள 67 பேருக்கு சித்தோடு அருகே உள்ள மலைப்பகுதியில்  கரடு முரடான பாதையில் இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாது எனத் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்குவதாகக் கூறியது.

 

வெள்ளோடு அருகே உள்ள புத்தூர் புதுப்பாளையம் கிராமத்தில் 67 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் நத்தம் புறம்போக்காக இருப்பதால் அதனை மாற்றம் செய்து வழங்கப்படும் எனக் கூறி பல மாதங்கள் ஆகியும் அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மாற்றுத்திறனாளிகள் வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி வடமுக வெள்ளோடு பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்