Skip to main content

அதிமுக பிரமுகருக்கு 4 ஆண்டுகள் சிறை!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

Panchayat leader jailed in his 52 years for taking bribe in before 6years

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது தேவதானம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகரான 52 வயது ஆறுமுகம். இவர் 2011 - 2016ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் அந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று பதவி வகித்து வந்துள்ளார்.

 

அதே ஊரைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி சுதா என்பவருக்கு அரசு சார்பில் இந்திராகாந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதிகாரிகளால் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சார்பில் சுதாவிடம் வழங்கியுள்ளனர். அரசு சார்பில் தமக்கு வீடு கிடைக்கப் போகிறது என்று சந்தோஷத்தில் சுதா இருந்துள்ளார். ஆனால் இந்த திட்டத்தில், பயனாளிகளுக்கு முதல் தவணையாக 59 ஆயிரத்து 541 ரூபாய்க்கான காசோலையை (சுதாவிடம்) வழங்குவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 

ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர் சுதாவிடம், தமக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால்தான் அரசு ஒதுக்கீடு செய்துள்ள வீடு கிடைக்கும் என்று ஆறுமுகம் கூறியுள்ளார். அரசு ஒதுக்கீடு செய்துள்ள வீட்டிற்கு இவருக்கு எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என நினைத்த சுதா, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து கடந்த 21.08.2014 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாயை சுதாவிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதை ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

 

அதேபோன்று அந்தப் பணத்தைக் கொண்டு சென்று ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திடம் சுதா கொடுத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்தைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மோகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், அரசு ஒதுக்கீடு செய்த இலவச வீட்டிற்கு லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்திற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

இதையடுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்தை நீதிமன்றத்தில் இருந்தபடியே கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்துள்ளனர். இதேபோன்று பல ஊராட்சிமன்றத் தலைவர்கள் லஞ்சமாகப் பணம் கொடுத்தால்தான் ஊராட்சிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் கிடைக்கும் என்றும் இல்லையென்றால் அரசு சலுகைகள் கிடைக்காது என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீதான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்