Skip to main content

'எவ்வளவோ எடுத்துக் கூறியும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது'-எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
nn

தமிழக அரசுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைத்து விட்டது என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூரில் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், 'நேற்றைய தினம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதை குறித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவே, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த பிறகு, வேகவேகமாக முழுமையாக பணிகள் முடிக்காமல் அவசரகதியில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய சொந்த ஊக்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே தங்கி இருந்த சூழ்நிலை ஊடகங்களில் வெளியிடப்பட்டது. எனவே திமுக அரசு எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. அதன் காரணமாக மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்ததிருந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக அரசு உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை  உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக என்னுடைய உதவியாளர் வீட்டில் கூட இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆறு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து திருவிட முயன்றுள்ளனர். இதனுடைய சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது நாய்கள் சத்தம் போடவே மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் ஊடகங்களில் வராத நாளே இல்லை. இந்த அரசுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைத்து விட்டது. இன்று தமிழகத்தில் போதை பொருள் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதைத்தடுக்க இந்த அரசு தயாராக இல்லை. இதன் காரணமாக கஞ்சா போதையில் உள்ள நபர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இனியாவது தமிழக அரசு போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சார்ந்த செய்திகள்