Skip to main content

ஏ.ஆர்.ரகுமானிடம் நஷ்ட ஈடு கோரிய மனு தள்ளுபடி!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

music composer ar rahman chennai high court

 

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாகக் கூறி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் கடந்த 2000- ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ஆனால் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் நிகழ்ச்சி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏ.ஆர்.ரகுமான் தர வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கில் இசை நிகழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சியின் காப்புரிமையை தனியார் இசை நிறுவனங்களுக்கு விற்று ஏ.ஆர்.ரகுமான் லாபம் அடைந்ததாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு நடைபெற்று வந்தது. ஏ.ஆர்.ரகுமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத் நிகழ்ச்சி நஷ்டம் ஏற்பட்டதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், நிகழ்ச்சிக்காகப் பேசிய தொகையைக் கூட மனுதாரர் தரவில்லை என்றும் போலியாக இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது.

 

எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாசங்கர், இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பிரச்சனை முடிந்துவிட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு ஏ.ஆர்.ரகுமான் தரப்பு வழக்கறிஞரிடம் உத்தரவிட்டிருந்தார். 

 

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஏ.ஆர்.ரகுமான் தரப்பு வழக்கறிஞர் எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றும் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் வாதிட்டார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உமாசங்கரும், தனக்கு மனுதராரரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்