Skip to main content

மாணவர்களுக்கு சத்துணவு முட்டை மற்றும் நாப்கின் வழங்குவது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 30/07/2020 | Edited on 31/07/2020

 

High Court directs Tamil Nadu government to explain explanation of providing eggs and nappies to students

 

கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சத்துணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு முட்டைகளைத் தொடர்ந்து வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு நாப்கின் தொடர்ந்து வழங்குவது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்கக் கோரியும், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு,  நீதிபதிகள்  எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், ‘சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம்பெண் குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரிசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று வழங்கி வருகிறோம். இதன்மூலம் இந்த ஊரடங்கு காலக்கட்டத்திலும், 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம்  வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கரோனா தொற்று பரவி வருவதால், மாணவர்களைத் தினமும் பள்ளிகளுக்கு அழைத்து, இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது.’ எனத் தெரிவிக்கப்பட்டது.

 

High Court directs Tamil Nadu government to explain explanation of providing eggs and nappies to students


இதைக் கேட்ட நீதிபதிகள், கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு அரசு ஆசிரியர்கள் பணியின்றி வீட்டில் இருக்கும் இந்தச் சூழலில், அவர்கள் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது? தினமும் இல்லாவிட்டாலும், வாரத்தில் ஒரு நாள் என்ற அடிப்படையில்கூட, மொத்தமாக முட்டைகளை விநியோகிக்கலாம் என யோசனை தெரிவித்து, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நாப்கின்களைத் தொடர்ந்து வழங்குவது தொடர்பாகவும், இவற்றை விநியோகிப்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்