Skip to main content

தேர்தல் கால நடவடிக்கை தொடங்கியது; சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் பட்டியல் சேகரிப்பு!

Published on 30/12/2018 | Edited on 30/12/2018

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை டிஜிபி அலுவலகம் தொடங்கியுள்ளது.

 

e

 


மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை துவக்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் தேர்தல் ஆயத்தப்பணிகளை தொடங்கியுள்ளது. 

 


தேர்தல் காலங்களில், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களை சொந்த மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

 


சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, ஒரே மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகளும் இடமாறுதல் செய்யப்படுவர். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் தண்டிக்கப்பட்டோ, குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தாலோ அவர்களுக்கு மீண்டும் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் ஒதுக்கப்பட மாட்டாது. 

 


இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைக்கப்படும். இந்தமுறை தமிழ்நாடு டிஜிபி அலுவலகமே முன்கூட்டியே, இதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. மேற்சொன்ன வரையறைக்குள் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர்கள், டிஎஸ்பிக்கள், ஏடிஎஸ்பிக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் குறித்த பட்டியலை விரைவில் சேகரித்து அனுப்புமாறு டிஜிபி அலுவலகம், அனைத்து மாவட்ட, மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

 


தேர்தல் பணிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, கியூ பிரிவு, ஓசிஐயு உள்ளிட்ட சிறப்புப்பிரிவுகளில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

 


அதனால், வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்வதை விரும்பாத காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சொந்த மாவட்டத்திற்குள்ளேயே சிறப்புப் பிரிவுக்கு இடமாறுதல் கேட்டு வரிசைகட்டி நிற்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறுகின்றனர். 
 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்