Skip to main content

6ஆயிரம் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

DMK MLA's 6000 petitions submitted to the Collector

 

கரோனா  நிவாரண உதவி எண் மூலம் பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.


கரோனா எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் அவ்வப்போது வெளியே வந்து போகிறார்கள். இதனால் பெரும்பாலான மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை. இந்தநிலையில்தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தினை துவங்கி அதற்கான தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்ட பொதுமக்களுக்கு  நிவாரண உதவிகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட திமுக சார்பில் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

 

 


திண்டுக்கல் மாவட்ட திமுக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நிவாரண உதவியாக  வழங்கி வருகிறார்கள். அப்பொழுது பொதுமக்கள்  குறைகளையும் கோரிக்கைகளையும்  மனுக்களாகவும் வழங்கினார்கள்.

அதை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவின்பேரில், மேற்கு மாவட்ட செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் ஆகியோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி சந்தித்து அந்த மனுக்களை எல்லாம் வழங்கினார்கள்.

 


அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியோ, "தலைவர் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்கள் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, தம்பி செந்தில்குமார், ஆண்டி அம்பலம் மற்றும் நானும் இணைந்து அரிசி பலசரக்கு மற்றும் காய்கறிகளுடன் மருத்துவ பொருட்களும் பல லட்சம் பேருக்கு வழங்கியிருக்கிறோம். அதை தொடர்ந்துதான் தலைவர் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை உருவாக்கினார். அதன் மூலம் 21 ஆயிரம் பேருக்கு மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு லட்சம் பேருக்கு உணவு வழங்கி இருக்கிறோம். இப்படி நாங்கள் எவ்வளவு செய்துவந்தாலும்கூட, அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதை மனுவாக எங்களிடம் கொடுத்தனர். அப்படி ஏழை, எளிய பொதுமக்களால் கொடுக்கப்பட்ட 6000க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது துறை ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திதான் அந்த மனுக்களை எல்லாம் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறோம். இப்படி எங்க தலைவர் கொண்டு வந்துள்ள 5 அம்ச திட்டத்தின் மூலம் பல லட்சம் பேருக்கு மேல் தொடர்ந்து  பயனடைந்து வருகிறார்கள்" என்று கூறினார்.

 

 

 


இதில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன். திண்டுக்கல் நகர செயலாளர் ராஜப்பா. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட சில கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்