Skip to main content

எடப்பாடியார் புகழ் வாழ்க எனச் சொல்வதற்கும் அமைச்சர் செங்கோட்டையன் தயார்...!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

ADMK MINISTER SENGKOTTAIYAN

 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தில் புதிதாகக் கட்டப்படும் ஊராட்சி மன்றக் கட்டிட கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை செய்யும் நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டனர்.

 

மேலும், அதே ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் விவசாய பயிர்கடன் மற்றும் சிறுவணிக கடனுதவியை வழங்கினர். அதேபோல, கொங்கர்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாவும், வீடுகள் கட்டுவதற்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஆணையும், நலத்திட்ட உதவிளையும் இருவரும் கூட்டாக வழங்கினர். தாசப்பகவுண்டன்புதூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கிளையை ரிப்பன் வெட்டியும் திறந்துவைத்து சில நலத்திட்ட உதவிகளையும் வழங்கியதோடு 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு முகாமையும் தொடங்கிவைத்தனர்.


அதனைத்தொடர்ந்து செய்தியாளார்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளிகூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளாங்கோம்பையில் காற்றாற்று பள்ளத்தை மேம்படுத்த வேண்டுமென்றால் அங்கு வசிக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆய்வுசெய்ய வேண்டும். அதன்பிறகு,  அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்கப்பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்குவதற்கு, தமிழக முதல்வரின் ஒப்புதல் அவசியம். அதன்பிறகு, இப்பயிற்சி நடைமுறைப்படுத்தப்படும்" என செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

"அண்ணே இன்றும் 7 மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வரும் என... செய்தியாளர் கேள்வியை முடிக்கும் முன்னே "வணக்கம் நல்லாயிருக்கீங்களா?" என புதிதாக யாரையோ பார்த்துக் கேட்பதுபோல் கேட்டுவிட்டு வேகமாக நடக்க தொடங்கினார்.
 

Ad

 

"ஏப்பா அமைச்சர் தான் அரசியல் பேச மாட்டாருனு தெரியுமல்ல.. மறுபடியும் கேட்டா? முதல்வர் எடப்பாடிக்கே சீனியர்தான் இவர். ஆனால், எடப்பாடியார் புகழ் வாழ்கவென சொல்றதுக்கும் இப்ப தயாரா இருக்கார். அரசியல்லே இதுவெல்லாம் சகஜமப்பா." என உடன்வந்த சீனியர் ர.ர.ஒருவர் அந்தச் செய்தியாளரிடம் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்