Skip to main content

'சோப்பு' கம்பெனியில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020


சோப்பு கம்பெனியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீசார் அதற்காகப் பயன்படுத்திய லாரி உட்பட 3 வாகனங்களை பறிமுதல் செய்ததோடு ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற 9 பேரை கைது செய்தனர்.
 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரகுரு. இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் சோப்பு கம்பெனி வைத்து நடத்தி வந்தார். அந்தக் கம்பெனி சரிவர வைக்கப்பட முடியாத நிலையில் அவர் விழுப்புரத்தைச் சேர்ந்த கில்லி சுகர்ணா என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த நிலையில் கில்லி சுகர்ணா அந்தக் கட்டிடத்தில் வியாபாரம் செய்வதாகக் கூறி வாடகைக்கு எடுத்திருந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்திற்குக் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். 
 

 


அதன்பேரில் உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் தனிப்படை போலீசார் ரகுநாதபுரம் கிராமப்பகுதியில் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சோப்பு கம்பெனியில் இருந்து ஒரு லாரி வெளியே வந்தது. லாரியை மடக்கி நிறுத்திய போலீசார், அதில் இருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். 

அப்பொழுது லாரியிலிருந்து ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த கில்லி சுகர்ணா மற்றும் 8 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் லாரியிலிருந்து ரேஷன் அரிசிதான் என்பதும் இந்த ரேஷன் அரிசி கிராமப்புறப் பகுதியில் உள்ள தனிநபர்கள் மற்றும் ரேஷன் கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி வரப்பட்டு அவைகள் தனித்தனியாக தரம் பிரித்து ஆந்திர மாநிலத்திற்குக் கடத்தப்பட்டு வருவது தெரியவந்தது.
 

http://onelink.to/nknapp


இதையடுத்து உடனடியாக கடலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆரோக்கிய ஜான்சி தலைமையில் போலீசார் விரைந்து வந்து சோப்பு கம்பெனியில் ஆய்வு செய்தனர். அப்பொழுது அங்கிருந்த 15 டன் எடை கொண்ட 240 அரிசி மூட்டைகள் மற்றும் லாரி உட்பட 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி வரும் கில்லி சுகர்ணா மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் உள்பட 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்