Skip to main content

“நாளை நமதே... நாடு நமதே எனும் அடிப்படையில் 40ம் நமதே...” - ஜெயக்குமார் 

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Ex Minister Jeyakumar addressed press after admk District Secretary meeting

 

அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (17ம் தேதி) மாலை 5.10 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். 

 

இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சிக் காலத்தின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லியாக வேண்டும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முழுமையாக எதிர் நோக்கி, ‘நாளை நமதே.. நாடு நமதே’ எனும் அடிப்படையில் 40ம் நமதே எனும் வகையில் 40 தொகுதிகளை நாம் கைப்பற்ற வேண்டும்.

 

அதற்கேற்றாற்போல், ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில், அதனை மேலும் அதிகரிக்க வேண்டும். எங்கள் இலக்கு இரண்டு கோடி என இருக்கும் நிலையில், அதற்கு மேலும் சேர்த்து அதிமுகவை வலுவடைய செய்ய வேண்டும். அதற்கு ஏற்றார்போல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 

ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கின்ற மாநாடு, இது வரை தமிழ்நாடு வரலாற்றில் எந்தவொரு இயக்கமும் கண்டிடாத வகையில், மிக எழுச்சியான, பிரமாண்டமான, மக்கள் போற்றுகின்ற வகையில், பாராட்டுகின்ற வகையில் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்