Skip to main content

“25 லட்சம் பேரம் பேசுகிறார்கள்” - அன்புமணி பகிரங்கக் குற்றச்சாட்டு

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

Anbumani accuses the Tamil Nadu government in the NLC issue

 

நிலத்தை கையகப்படுத்த ஏக்கருக்கு 25 லட்சம் என பேரம் பேசுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

 

அரியலூரில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேவையில்லாமல் ஈரோடு இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்தி வரும் சூழலில் பாமக மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது. என்எல்சி, செய்யாறு சிப்காட், வேலைவாய்ப்பு, டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பிரச்சனை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களை நோக்கி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது.

 

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி பிரச்சனை காரணமாக பல போராட்டங்களை நடத்தினோம். எங்கள் கோரிக்கை என்னவென்றால் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை என்எல்சி கையகப்படுத்த திட்டம் தீட்டி இருக்கிறது. வருவாய் அதிகாரிகள்  அப்பகுதிகளுக்குச் சென்று உன் பிள்ளைகளுக்கு வேலை கொடுப்பார்கள். 25 லட்சம் வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லி பேரம் பேசி வருகிறார்கள். இவர்களுக்கு என்ன பிரச்சனை; இவர்களுக்கு என்ன அதனால் ஆகிவிடப்போகிறது. 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் என்பது சாதாரண எண்ணிக்கை கிடையாது. மற்றொன்று என்எல்சிக்கு என்று அந்த நிலம் தேவையில்லை.

 

ஏனென்றால் 1983ல் கையகப்படுத்திய பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை அப்படியே வைத்திருக்கிறார்கள். அந்த பத்தாயிரம் ஏக்கர் நிலத்திலிருந்து பழுப்பு நிலக்கரி எடுத்தால் இன்னும் 45 வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இன்னும் கூடுதலாக 25 ஆயிரம் ஏக்கர் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் இந்த என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் விற்கப்போகிறார்கள். இதை நான் கூறவில்லை மத்திய அரசு சொல்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் என்எல்சியை தனியாருக்கு விற்கப் போகிறீர்கள். பத்தாயிரம் ஏக்கர் நிலம் ஏற்கனவே இருக்கிறது. உங்களுக்கு இன்னும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் ஏன்? என கேள்வி எழுப்பினால்  இதற்கு தமிழக அரசு ஏன் அவ்வளவு துடிக்கிறது. 

 

நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பாமக தொடர்ந்து போராடி வெற்றி பெறும். அது மட்டுமில்லாமல் இப்பொழுது புதிய வீராணம் நிலக்கரி திட்டம் என்று ஒன்றை அறிவித்துள்ளார்கள். அத்திட்டம் என்னவென்றால் வீராணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கரி எடுப்பது அதற்கு ஒரு நிறுவனம் ஆய்வு நடத்திக் கொண்டு உள்ளது. இவற்றை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முதலில் என்எல்சி வெளியேற வேண்டும். மக்களை, மண்ணைக் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்