Skip to main content

மணிப்பூரில் பகுதியளவில் இணையச் சேவைக்கு அனுமதி

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

nn



மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது.

 

பல பேர் கொல்லப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் மாநிலத்திலேயே வெவ்வேறு இடங்களுக்கு இடம் மாறி வருகின்றனர். இதற்கிடையே, மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பான கொடூர வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தொடர்ந்து நேற்று மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ஒன்றிய அமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீடு மீது மணிப்பூர் வன்முறை விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி  கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதே நேரம் மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். கடந்த மே 3 ஆம் மூன்றாம் தேதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள இண்டர்நெட் வசதியை மீண்டும் வழங்கக் கோரி மாணவர்கள் தங்களது வலியுறுத்தல்களைப் பேரணி மூலம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மணிப்பூரில் பகுதியளவில் இணையச் சேவையைக் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

கலவரம் குறித்த வதந்திகள் பரவுவதைத் தவிர்க்க இணையச் சேவை முடக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள மணிப்பூர் அரசு, பகுதியளவு இணையச் சேவைக்கு ஒப்புதல் வழங்கியதோடு செல்போன் இணையச் சேவைக்கான தடை தொடரும் என அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்