Skip to main content

" பாஜகவின் கணக்கு முடித்து வைக்கப்படும்" - வாக்களித்த பினராயி விஜயன் அதிரடி!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021
PINARAYI VIJAYAN

 

 

தமிழகத்தை போலவே கேரளாவிலும் சட்டப்பேரவை தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஐக்கிய முன்னணி முன்னணிக்கும், காங்கிரஸிற்கும் இடையே நேரடி போட்டி இருக்குமென கருதப்படுகிறது. இந்தநிலையில் காலை முதலே கேரள அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர். 11 மணிவரை கேரளாவில் 28.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

பினராயில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வாக்களித்த பினராயி விஜயன், இடது ஐக்கிய முன்னணி வரலாற்று வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "இது ஐக்கிய இடது முன்னணிக்கு ஒரு வரலாற்று வெற்றியாக இருக்கும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கேரள மக்களால் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் எவ்வாறு நிராகரிக்கபட்டதோ அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் நிராகரிக்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அந்த உணர்ச்சியை நாங்கள் கண்டோம். தீர்க்கமான வெற்றியை எதிர்பார்க்கிறோம். 2016 முதல், அது நலத்திட்ட நடவடிக்கைகளானாலும், மேம்பாட்டு நடவடிக்கைகளானாலும் அல்லது பேரழிவுகளை எதிர் கொண்டபோதும் மக்கள் எங்களுக்கு ஆதரவாக நின்றனர். எல்லா நேரங்களிலும் எங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள், தங்களது கட்டளையை பதிவு செய்கிறார்கள். கடந்த சட்டப்பேரவை தேர்தலைவிட, இந்த சட்டப்பேரவை தேர்தலில் இடது ஐக்கிய முன்னணி அதிக தொகுதிகளில் வெல்லும்" என தெரிவித்தார்.

 

தொடர்ந்து அவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற ஓரே ஒரு சட்டமன்ற தொகுதியான நெமோமில் பாஜக தோற்கடிக்கப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர், " நெமோமில் பாஜகவின் கணக்கு முடித்து வைக்கப்படும். ஆனால் வேறு சில தொகுதிகளில் பாஜகவுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி) ரகசிய ஒப்பந்தத்தில் இறங்கியுள்ளதா என்பது எனக்குத் தெரியாது" என கூறினார்.

 

தேர்தல் பிரச்சாரத்தின்போது சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த நிலையில், அரசு மக்களோடு நிற்பதால், ஐயப்பன் உள்ளிட்ட அனைத்து கடவுள்களும் தங்கள் அரசாங்கத்தோடு உள்ளது என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்