Skip to main content

நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் கார் - திருச்செந்தூரில் பரபரப்பு

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
car

 

 

தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த செல்வன் குடும்பத்தினருக்கும் அந்த பகுதியின் உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செல்வன், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார். இதேபோல் திருமணவேலுவும் புகார் செய்ததாகவும், திருமணவேலு புகாரின் அடிப்படையில் செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

 Anitha Radhakrishnan

 

தனக்கு நியாயம் வேண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டிருக்கிறார் செல்வன். செப் 16 அன்று அதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணனுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது பைக் மீது கார் மோதியதில் அவர் கீழே விழ வரைக் காரில் கடத்திச் சென்ற ஒரு கும்பல் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே 17ம் தேதியன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட செல்வனின் உடலை அவரது உறவினர்கள் வாங்கவில்லை. திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும். கணவனைப் பறி கொடுத்த அவர் மனைவி செல்வஜீவிதாவிற்கு உரிய நிவாரணம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராடினர். 

 

திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், செல்வன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களது போராட்டத்திலும் கலந்து கொண்டார். நான்காவது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடருகிறது. 

 

இந்தநிலையில் தண்டுபத்து கிராமத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் தனது காரை தாக்கியுள்ளதாக அனிதா ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களோடு குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் காரை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகளையும் பதிவிட்டுள்ளார். 

 

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக்கொண்டு மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததோடு, சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திமுக எம்எல்ஏ கார் தாக்கப்பட்ட சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்