Skip to main content

திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு!

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
caonference1


திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு சென்னை சைதாப்பேட்டையில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நாள் முழுவதும் நடைபெற்று வருகிறது.

மாநாட்டு தொடக்க அரங்கில் ஆ.சிங்கராயர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மாநாட்டை திறந்துவைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஆர்.நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், வழக்கறிஞர் அருள்மொழி, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் பங்ககேற்று சிறுப்புரையாற்றினர்.

இதையடுத்து மதியம் 12மணி அளவில், இளையோர் அரங்கம் நடைபெற்றது. சிற்பி செல்வராசு தலைமையில் மருத்துவர் தாயப்பன் தொடக்க உரையாற்றினார். பின், தோழர்கள் கவுசல்யா, சபரி மாலா, கிரேஸ்பானு, மணிரத்தினம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இதனையடுத்து, பிற்பகல் 2 மணியளவில் எழில்.இளங்கோவன் தலைமையில் கலையரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் தொடக்கவுரையாற்றினார். எழுத்தாளர் டான் அசோக் வாழ்த்துரையாற்றினார்.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,

தீர்மானமுகவுரை:

பரந்துபட்ட மானுடத்தை சமூகத்தின் விடியலுக்கும், சிறந்த வாழ்வியலுக்கு சமூகநீதித் தேவைகளை ஆய்ந்தறிந்து சமுகநீதித்தத்துவத்தை முன்னிறுத்திய தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் மொழி, இனம், மதம், சாதி, பாலினம், வர்க்கம், வர்ணம் ஆகிய எவ்வித வேறுபாட்டையும் பாகுபாடாய் மாற்றுகிற, சுரண்டுகிற பார்ப்பனியத்தின் ஒடுக்குகிற ஆதிக்க மேலாண்மைச் சிந்தனையை எதிர்த்து, ஒடுக்கப்படுகிற மக்களோடு நிற்பதையும், அதற்கான களத்தில் எவ்வித சமரசமுமின்றி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை எந்நாளும் சமர்புரியும் என இம்மாநாடு மூலம் அறை கூவல் விடப்படுகிறது.

இச்சமூக நீதிக் கோட்பாட்டைப் பாதுகாக்கிறவகையில் போராடவும், பங்கேற்கவும், திராவிட இயக்கத் தத்துவ அரசியலை உணர்ந்து கனமாடவும், ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும், குறிப்பாக, இளையதலைமுறையினரையும், ஒடுக்கபட்டமக்களையும் இம்மாநாடு இருகரம்நீட்டி அழைக்கிறது.

தீர்மானம் 1
இந்து சமய அறநிலையத் துறை


நீதிக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையைக் கலைப்பதற்கான பெருமுயற்சி ஒன்று, தன்னலம் மிக்க கூட்டம் ஒன்றினால் இப்போது  தொடங்கப்பட்டுள்ளது.இந்தக் கோவில்களைக் இந்துக்களிடம் கொடுத்து விடுங்கள் என்பதாக அக்கோரிக்கை முன் வைக்கப்பட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை. இந்துக்கள் என்னும் பெயரில், வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர், மொத்தக் கோவில் சொத்துக்களையும் தாங்கள் மட்டும் அபகரித்துக் கொள்வதற்கான திட்டமே இது.

எனவே தங்களைக் இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வெகுமக்களின் சொத்துக்களைப் பார்ப்பனர்கள் பறித்துச் சென்றுவிடாமல் பாதுகாக்கும் கடமை, கடவுளின் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமின்றிப் பகுத்தறிவாளர்களும் உள்ளது. இந்துக்களும் பார்ப்பனர்களும் இடையில் தொடங்கியுள்ள இப்போரில் நாம் இந்துக்களின் பக்கம் நின்று, அறநிலையத் துறையை காப்பாற்றிட வேண்டும். மேலும், அரசின் பொறுப்பில் கோவில்கள் இருந்தால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் நிலை, கேராளவைப் போலத் தமிழ்நாட்டிலும் அடுத்து திமுக ஆட்சி வந்ததும் வந்துவிடும் என்பதாலும், அவ்வாறு கோவில்களை ஜனநாயகப் படுத்துதல் கூடாது என்று அவர்கள் கருதுவதாலும். அறநிலையத் துறையை அடியோடு கலைத்து விட வேண்டும் என்று கருதுகின்றனர்.

இச்சூழலில், கோடிக்கணக்கான இந்துக்களையும், நம் அனைவருக்கும் பொதுவான கோவில் சொத்துக்களையும் பார்ப்பனர்களிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டும்.

ஆதாலால், எக்காரணம் கொண்டும் இந்து அறநிலையத் துறை கலைக்கப்பட கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துவதுடன், தில்லை நடராசர் கோவிலையும் தீட்சீதர்களிடம் இருந்து மீண்டும் அரசு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை முன்வைத்து, வரும் நாள்களில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.         

தீர்மானம் 2
ஆணவப்படுகொலை எதிர்ப்பு

உலக உயிர்களின் இயற்கைப் போக்கான காதலை எதிர்த்தும், தன் வாழ்க்கைத்துணையை நானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனிமனித உரிமைகளை மறுத்தும், சாதியின் பெயரால் நடத்தப்படும் ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.

ஆணவக் கொலையின் பெயரில் நடக்கும் சாதிய வன்முறைகளைத் தடுக்கும் சட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற கொடூர செயல்களைக் கடுமையாகக் கண்டிக்கும் வகையில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்.

சாதி மறுப்புத் திருமணம் புரிவோருக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 3
திருநங்கையர்/திருநம்பியர்கான உரிமைகள்


சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் திருநங்கையர்/திருநம்பியர்க்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு மற்றும் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும், அவர் தம் குறைகளைக்களையவும் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4
நீட் நிரந்திரவிலக்கு


ஒரு நூற்றாண்டு காலப்போரட்டத்தின் மூலம் திராவிட இயக்கம் கல்வித்துறையில் நிகழ்ந்திருக்கும் சாதனைகளைத் தகர்க்கும் வகையில், நடுவண் அரசு கொண்டு வந்திருக்கும் நீட் எனும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்திர விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதற்காக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்மொழிவிற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை விரைந்து பெற்றிடத் தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இனி வரும் காலங்களில் கல்வித்துறையில் நடுவண் அரசின் தலையீட்டால் இது போன்ற சமூக அநீதிக்கு இடம் கெடாமல் தமிழக மாணவர்களின் நலனைக்காக்க மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கல்வி கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5
பெண்ணுரிமை


நில உடமைப் பிற்போக்குத் தனங்களிலும், சாதி. மதக்கட்டுபாடுகளிலும் ஊறிப்போன சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமத்துவ நிலையில் சமூகம் முன்னேறுவதற்கு உரிய வகையில் பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் கல்வி, வேலைவாய்ப்புகளிலும், அரசியல் அதிகாரத்திலும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 6

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாரிடம் தாரைவார்த்து கொடுக்கப்படும் இன்றைய சூழலில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாநில மற்றும் நடுவண் அரசுப் பணியிடங்களில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் முறையைக் கண்காணித்து, அரசிற்கு ஆண்டு தோறும் அறிக்கை அளிக்கும் வகையில், அதிகாரமிக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7
பொதுமயானம்


பிறப்பின் வழி திணிக்கப்பட்ட சாதி  இழிவை, இறப்பிற்குப் பின்னரும் சுமந்து செல்லும் இழி நிலையை ஒழிக்கும் வகையில் தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் அரசு பொது மயானங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மக்களும் அந்த மயானத்தை மட்டுமே பொதுவானதாகப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும்.

சாதிக்கொரு மயானம் என்பது சட்டப்படி தடை செய்யப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 

caonference 2


இதன்பின், மாலை 4 மணியளவில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. புலவர் செந்தலை ந.கவுதமன் தொடக்கவுரையாற்றுகிறார். தோழர் ஓவியா, எழுத்தாளர்கள் இமையம், மதிமாறன் கருத்துரையாற்றுகிறார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடக்கவுரையாற்றுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, காங்கிரஸ் கட்சி பீட்டர் அல்போன்ஸ், மனிதநேயமக்கள் கட்சி ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றுகிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் மாநாட்டு மலரைப் பெறுகிறார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மலரை வெளியிட்டு மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றுகிறார்.

 

சார்ந்த செய்திகள்