Skip to main content

நக்சல் பூமியில் மீண்டும் ஏற்படுமா புரட்சி? – எட்டுவழிச்சாலை பயண தொடர்ச்சி

Published on 01/07/2018 | Edited on 01/07/2018

1970களில் தமிழக நக்சலைட்களின் தலைமை பீடமாக இருந்த மாவட்டம் தருமபுரி. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மாவட்டம், வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது. தருமபுரி மாவட்டத்துக்கு மிக அருகில் உள்ள பகுதி ஜோலார்பேட்டை, திருப்பத்தூர். வடமாநிலங்களோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் பகுதியாக இருந்தது ஜோலார்பேட்டை இரயில்வே ஜங்சன்.

 

salem chennai



இதனால் இடதுசாரி கருத்துக்கள் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற பகுதிகளில் வேகமாக பரவியது. புரட்சி பேசியவர்கள் விவசாயிகளை துன்புறுத்திய, அடிமையாக வைத்திருந்த விவசாய முதலாளிகளை எதிர்த்து போராடினர். அவர்களை நக்சலைட் என்றது அரசாங்கம். விவசாயிகளை வஞ்சித்த பெரு விவசாய முதலாளிகள் கொல்லப்பட்டனர். இந்த உக்கிரம் 1975ல் தொடங்கி 1980களில் உச்சத்துக்கு சென்றது.

அக்காலகட்டத்தில் தமிழகத்தில் அதிமுகவின் எம்.ஜி.ஆர் ஆட்சி நடைபெற்றுவந்தது. நக்சல் ஒழிப்புப் படை என்கிற பெயரில் காவல்துறை அதிகாரி 'வால்டர்' தேவாரம் தலைமையிலான படை, தருமபுரி, வேலூர் மாவட்டத்தில் மனித வேட்டையாடி 13 நக்சலைட்களை நேரடியாகவும், மறைமுகமாக நூற்றுக்கும் அதிகமானவர்களை சுட்டுக்கொன்றது. அந்த அதிர்வுக்குப்பின் இந்த மாவட்டங்கள் இடதுசாரி சித்தாந்தத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகியது. தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரியை பிரித்து அது தனி மாவட்டமாக்கப்பட்டது. 

 

 


இந்நிலையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளபடி தருமபுரி – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 வழி பசுமைச்சாலை 58 கி.மீ பயணமாகிறது. தருமபுரி மாவட்டத்தில் தாம்பல், கூடலூர், கட்டவடிச்சாம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, ஈட்டியம்பட்டி, கம்மாளம்பட்டி, மாவேரிப்பட்டி, நாச்சினாம்பட்டி, மாலகபாடி, புலிதியூர், வேட்டகடமருவு, தரகம்பாடி, ஆலங்குட்டை, தாம்பல் என பயணமாகிறது இந்தச் சாலை.
  dharmapuri



சாலைக்கான இடத்தை நிலங்களில் அளந்து கல் நட்டுவிட்டார்கள். அம்மக்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிய அந்த வழியில் பயணித்ததோடு, விவசாயிகளோடு பேசினோம்.

"மலை சார்ந்த பகுதி, முழுக்க விவசாயத்தையே நம்பி வாழ்கிறோம். மழையில்லாத காலங்களில் விவசாயம் கைவிடும்போது இங்குள்ள பழங்குடி மக்களில் ஒரு குறிப்பிட்ட வகையினர் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் செல்கிறார்கள். சட்டத்துக்கு புறம்பான வழியென பெரும்பான்மை மக்கள் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து பிழைக்கிறார்கள். மாம்பழம் அதிக உற்பத்தி, நெல் உற்பத்தி, கரும்பு, வாழை தான் முக்கிய பயிர்.

ஒரு காலத்தில் நில உடைமையாளர்களிடம் அடிமையைப்போல் உழைத்தனர் ஒடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர். அந்த மக்களுக்காக 1970களில் முற்போக்கு கருத்துக்கள் கொண்ட நக்சல் படை உருவாகி, மக்களை வஞ்சித்த பெரு நில உடைமையாளர்களை தண்டித்தது. நக்சல்களை வேட்டையாடி அழித்த பின்பும் இந்த மண் இடதுசாரி சித்தாந்தத்தோடுதான் இருந்தது. ஆண்டுகள் கடந்தாலும் மனதின் ஓரத்தில் எங்களிடம் போராடும் குணம் இன்னும் உள்ளது. அதனால் தான் எங்களை வாழவைக்கும் விவசாயத்தை அழித்து சாலை போடுகிறோம் என்றதும் எதிர்த்து நிற்கிறோம். அரசாங்கத்தை எதிர்த்தா மாவோயிஸ்ட்ன்னுவாங்க, பயங்காரவாதின்னுவாங்க, தேசதுரோகின்னு சொல்லுவாங்க. சொல்லிட்டு போகட்டும். நான் வாழ்ந்த பூமியில் இருந்து என்னை அப்புறப்படுத்தும்போது ஏற்படும் வலி எங்களுக்குதாங்க தெரியும். தூர நின்னு வியாக்யானம் பேசறவங்களுக்கு தெரியாது" என்றார் வேதனையான குரலில்.

 

 


மனோகரன் என்கிற விவசாயி, "அரூர் தாலுக்காவுக்குள் வர்ற லிங்காபுரம் ஏரி, முத்தனூர் ஏரிகள் வழியாத்தான் இந்த சாலை போடப்போறதா அளவு கல் நட்டிருக்காங்க. இந்த ஏரிகள் 5 ஆயிரம் ஏக்கருக்கான கிணறுகளுக்கு நிலத்தடி நீர் தந்த ஏரிகள். இதை சாலைக்காக தூர்க்கும்போது இந்த 5 ஆயிரம் ஏக்கரும்  கட்டாந்தரையாகுமே தவிர விவசாயம் செழிப்படையாதுங்க" என்றார்.

மஞ்சவாடி என்கிற பகுதியில் மிக சமீபத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி 2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அந்த பள்ளி இன்னும் திறக்கப்படக்கூடயில்லை. அந்த பள்ளி கட்டிடம் முற்றிலும் இடிக்கப்படவுள்ளது என்பதை அறிந்தபோது விவசாயத்தை மட்டுமல்ல கல்வியையும் சேர்ந்து இந்தப் பகுதியில் அழித்துள்ளது இந்த சாலை என்பது புரிந்து சற்று அதிர்ச்சியாக இருந்தது.

  naxal memorial

 

தர்மபுரி நாயக்கன்கோட்டை கிராமத்தில் நக்சல் தலைவர்கள் அப்பு, பாலனுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் 



தீர்த்தமலை என்ற பகுதி வனங்கள் நிறைந்த காட்டுப்பகுதி, பாதுகாக்கப்பட்ட வனம். தீர்த்தமலையில் உள்ள சிவன் கோயிலும், மலையடிவாரத்தில் உள்ள கோயிலும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டு தோறும் அக்கோவில்களுக்கு வருவார்கள். வற்றாத சுனை உள்ளது, அந்த மலை மீதிருந்து வரும் தீர்த்தம் நோய் தீர்க்கும் மருந்து என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அந்த இரண்டு கோவில்களுக்கு மத்தியில் சாலை அமைக்கப்படுகிறது. அதிலும் தீர்த்தமலை சாலைக்காக உடைக்கப்படபோவதால் மலை மீதுள்ள சிவன் கோவில் என்னவாகுமோ என பக்தர்கள் பயப்படுவதாகக் கூறினார் அங்கு கடை வைத்துள்ள குமார் என்பவர்.

 

 


தங்களுக்காக யாரும் போராட முன்வரமாட்டார்கள், நமக்கு நாமேதான் போராடிக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில்தான் இம்மக்கள் உள்ளார்கள். நிலத்தில் கற்களை நட வந்த அதிகாரிகள் முன்பு மண்ணெண்ணய் கேன்களோடு தீ குளிக்க முயன்றனர். அங்குயெல்லாம் பின்வாங்கிய அதிகாரிகள் சிலப்பல ஆசை வாக்குறுதிகள் தந்து நிலங்களில் கற்களை நட்டுள்ளதை சம்மந்தப்பட்டவர்களின் பேச்சுகளின் மூலம் அறிய முடிந்தது.

முன்னாள் நக்சல் ஆதரவாளரும், இப்போது விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளவருமான அந்த பிரமுகரிடம் பேசியபோது, "நக்சல்கள் உருவானதற்கான காரணங்கள் சமூக வெளியில் மறைந்திருக்கலாம். ஆனால் இப்போது அரசாங்கமே அந்தக் காரணங்களை உருவாக்குகிறது. விவசாயத்தை அழிக்கிறது, வாழவழியில்லாத என்னைப் போன்ற நடுத்தர வயதை கடந்த விவசாயிகள் வேண்டுமானால் பழைய நக்சல் கொள்கை வேண்டாம் என ஒதுங்கலாம். வருங்கால தலைமுறை அப்படியிருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. கடந்த கால கொள்கை மீண்டும் உயிர்  பெறலாம், பெறாமலும் போகலாம். உயிர் பெற்றால் அது அரசாங்கத்துக்கு எதிராகத்தான் நிற்கும் என்பது என் கருத்து" என்றார்.

தொடரும்…

 

முந்தைய பகுதி:

ஏழரையான எட்டு வழிச்சாலை. – மக்கள் மனம் அறிய 8 வழிச்சாலையில் ஓர் பயணம்

அடுத்த பகுதியில்...

தொழிற்துறையில், கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் வரப்போகும் 8 வழிச்சாலை பற்றி என்ன நினைக்கிறார்கள், தொழில்துறையில் வளர்ந்த மாவட்டமாகவுள்ள காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் இந்த 8 வழிச்சாலையை வரவேற்கிறார்களா, எதிர்க்கிறார்களா?