Skip to main content

ஏழரையான எட்டு வழிச்சாலை. – மக்கள் மனம் அறிய 8 வழிச்சாலையில் ஓர் பயணம்.

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
land alavu

8 என்கிற எண்ணை அரசாங்கமே ராசியில்லாத எண்ணாக பார்க்கிறது. அதனால் தான் அந்த எண்ணை போக்குவரத்துறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட எண்ணை அடிப்படையாக வைத்து தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எட்டுவழிச்சாலையை சேலம் டூ சென்னைக்கு அமைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த சாலை தான் அரசாங்கத்துக்கும் ஏழரையாகியுள்ளது, விவசாயிகளுக்கும் ஏழரையாகியுள்ளது. ஆனாலும் எட்டுவழிச்சாலை அமைத்தே தீருவேன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் எடப்பாடி.


சேலம் டூ சென்னைக்கு புதியதாக 279 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள பசுமைவழிச்சாலையில் ஒரு பயணத்தை மேற்க்கொள்ள சேலத்தில் இருந்து தொடங்கினோம். சேலம் வளரும் ஒரு தொழில் நகரம். ஆனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. 8 வழிச்சாலை தொடக்கப் பகுதியான கஞ்ச மலையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் விவசாய பூமியாக காட்சியளித்தது.

 

 

 


நெடிந்துயர்ந்த பாக்குமரங்கள், குலைகுலையாய் காய் வைத்திருந்த தென்னை மரங்கள் என அப்பகுதியே பசுமையாக காட்சியளித்தன. அந்த பசுமையெல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு தான் என நாம் எண்ணியபோது வேதனையாக இருந்தது. அந்த பசுமையான நிலங்கள் மீதுதான் சாலை அமைக்கப்படவுள்ளது. இத்தனைக்கும் இந்த சேலம் மாவட்டம் முதல்வராகவுள்ள எடப்பாடி பழனிச்சாமி பிறந்த மாவட்டம். அவரும், அவரது மூதாதையர்களும் விவசாயிகள். விவசாயிகள் நிலத்தில் செருப்பு அணிந்து நடக்கமாட்டார்கள். சோறு போடற தெய்வம் என்பார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த எடப்பாடி தான் முதல்வரானதும் விவசாய நிலத்தின் மீது சாலைகள் போட உத்தரவிட்டுள்ளார்.


அதற்கு காரணம், தொழில் வளர்ச்சி என சொன்னாலும் பெரும் திட்டமிடமான இதன் வழியாக முதல்வர் தரப்புக்கு கிடைக்கும் கமிஷன் என சுட்டிக்காட்டுகிறார்கள் பாமர மக்கள் முதல் கட்சி தலைவர்கள் வரை. அரசு ஒப்பந்தங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் சேர்ந்து 30 சதவிதம் வரை இன்று கமிஷன் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. 8 வழிச்சாலை 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் அமைக்கப்படுகிறது. இதில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. இதில் எவ்வளவு கமிஷன் வரும் என கணக்கிட்டபோதே மயக்கம் தான் வந்தது. சாலை அமைக்கும் பணியை அவர்களே எடுத்து சாலை அமைத்தால் இன்னும் எவ்வளவு கிடைக்கும் என கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்றார் அயோத்தியாப்பட்டினத்தில் நாம் சந்தித்த விவசாயி செல்வராஜ்.


அவருடன் இருந்த மற்றொரு விவசாயி, சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை அரியானூர், நலிக்கல்பட்டி, கஜலாலிக்கன்பட்டி, வீரப்பாண்டி, சித்தனேரி, மாசியனக்கப்பட்டி, மின்னம்பள்ளி, வெள்ளயைன்பட்டி, குட்டூர், மஞ்சவாடி, குப்பனூர் போன்ற கிராமங்கள் வழியாகவே செல்கின்றன. இதனால் சேலம் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. இந்த பகுதியில் வன்னியர், கொங்குவேளார் சாதியினர் தான் அதிகம். கொங்கு வேளாளர் சாதியோட பிரதான தொழிலே விவசாயம் தான். அந்த விவசாயத்தை கொங்கு வேளான் சாதியில் பிறந்த எடப்பாடியே அழிக்கறாருங்க. இனிமே எந்த மூஞ்ச வச்சிட்டுக்கிட்டு நான் உங்க சாதின்னு சொல்லிக்கிட்டு வந்து ஓட்டுக்கேட்பார் என்றார் கோபத்தோடு.

 

 



சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை பயணமாகும் 36 கி.மீ 300 மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்களிடம் இந்த கோபத்தை காண முடிந்தது. இந்த கோபமும், விரக்தியும் தான், விவசாய நிலங்களில் சாலைக்காக அளவு கற்களை நடவரும் அதிகாரிகளை நோக்கி எதிர்க்க வைக்கிறது. அந்த எதிர்ப்பை சாம, தான, தண்டத்தை வைத்து நசுக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி. அரசன் ஏவிய ஏவலர்களை போல மக்கள் மீது பாய்ந்து பிராண்டுகிறார்கள் காவல்துறையினர். திட்டத்தை பற்றி பேசினாலே சிறை என்கிறது அரசாங்கம்.

  manik




மாணிக்கம் என்கிற இளைஞரோ, என்னோட குடும்பம் விவசாய கூலி குடும்பம். வேலைக்கு போனாதான் சாப்பாடு. வீடுக்கட்ட சொந்தம்மா நிலம்மில்லை. நீண்டகாலமாக என் குடும்பம் கால்வாய் பொறம்போக்கில் வீடுக்கட்டி வாழ்ந்துக்கிட்டு இருந்தது. அந்த பொறம்போக்குல கட்டப்பட்ட வீட்டில் தான் நானும் பொறந்து, வளர்ந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அந்தயிடத்துக்கு பட்டா தர்ற மாட்டன்னு அரசாங்கம் சொல்லிடுச்சி. இப்பயிருக்கற இந்தயிடம் என்னைக்கும் நமக்கு சொந்தம்மில்லை, நாளைக்கு அதிகாரிங்க வந்து இடிச்சா என்னன்னு கேட்க முடியாது, என் புள்ளைங்க கஸ்டப்படக்கூடாதுன்னு 4 சென்ட் வீட்டுமனையை சொந்த இடத்தில் வீடுக்கட்டி வாழலாம்ன்னு 2015ல் வாங்கனோம், வீடுக்கட்ட லட்சங்களில் பணம் வேணும்கிறதால் அப்படியே விட்டுவச்சியிருந்தோம். இப்ப அந்தயித்தையும் ரோட்டுக்காக எடுக்குது அரசாங்கம். ஒரு கூலிக்காரன் சொந்தமா வீடுக்கட்ட கூடாதுன்னு அரசாங்கம் கூட முடிவு செய்துடுச்சிப்போல என கண் கலங்கினார். இப்படி நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர் இந்த மாவட்டத்தில்.


இந்த சாலைக்காக அமைக்க 2791 ஹெக்டர் நிலங்கள் அரசாங்கம் எடுக்கிறது. இந்த சாலை வந்தால் சுமார் 4 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் மறைமுகமாக பாதிக்கப்படும் என்பதை அரசாங்கம் வெளியே சொல்ல மறுக்கிறது என அதிர்ச்சியை தந்தார் விவசாயி அகில இந்திய விவசாயிகள் சபையை சேர்ந்த விவசாயி ஒருவர். எப்படியென கேட்டபோது, சென்னை – பெங்களுரூ தங்க நாற்கர சாலையை பாருங்கள், சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையை கவனியுங்கள் இப்படி எந்த தேசிய நாற்கர சாலையை பார்த்தாலும் சாலையின் இருமருங்களிலும் எந்த விவசாயமும் நடைபெற்றுயிருக்காது, பொட்டல் காடுபோல் நிலங்கள் காட்சியளிக்கும். அதற்கான காரணம், தொடர்ச்சியான வாகன போக்குவரத்தால் சாலையை ஒட்டியுள்ள நிலங்களில் என்ன பயிர் செய்தாலும் அதன் மகசூல் என்பது 50 சதவிதமாக குறைந்துவிடும். அது விவசாயியை பெரும் நட்டத்துக்கு ஆளாக்கும். அதனால் தான் சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்வதில்லை. அதோடு இந்த நாற்கர சாலையை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் மிக மிக மிக குறைவாக இருக்கும். நான்கு வழிச்சாலைக்கே இந்த நிலையென்றால் 8 வழிச்சாலை வந்தால் என்னவாகும் என நினைத்துப்பாருங்கள்.


அரசாங்கம் கையகப்படுத்தும் நிலத்துக்கு இழப்பீடு தருகிறது, மறைமுகமாக பாதிக்கப்படும் அதை விட இரண்டு மடங்கான விவசாயிக்கு யார் நட்டயீடு தருவது என கேள்வி எழுப்பினார் ?.


சேலம் மாவட்டத்தில் பயணமாகவுள்ள 36 கி.மீ தூரமும் வாழும் பொதுமக்கள் அழுதும், தீக்குளிக்க முயன்று தங்களது எதிர்ப்புகளை விவசாயிகள் காட்டியும்  வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களை மிரட்டிவிடு இடங்களை அளந்து அளவு கற்களை நட்டுவிட்டு சென்றுள்ளனர். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பரிதாபமாக அளவு கற்களை பார்த்துக்கொண்டுள்ளனர். 

 

 



சேலம் மாவட்டத்தில் அயோத்தியப்பட்டினம் தாண்டி அரூர் சாலையில் பயணம் செய்துக்கொண்டுயிருந்தபோது பசி எடுத்தால் மதிய நேரம் இருளம்பட்டியில் சாலையோர உணவம் ஒன்றில் வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிட அமர்ந்தோம். 60 ரூபாய்க்கு சாதத்தை அள்ளி அள்ளி வைத்தார்கள். இவ்வளவு சாப்பாடா என மலைத்தபோது, நல்லா சாப்பிடுங்க என ஒவ்வொரு டேபிளாக சென்று சாப்பிடுபவர்களை ஊக்கப்படுத்தினார்கள். குறைவாக சாப்பிட்ட நம்மிடம், என்னங்க சாப்பாடு சாப்பிடறிங்க என வருத்தப்பட்டார் ஒரு தொழிலாளி. வியாபாரமாக இருந்தாலும் இப்படி சக மனிதர்கள் மீது அன்பை பொழியும் இந்த மக்களையா இந்த அரசாங்கம் வஞ்சிக்கிறது என நினைத்தபடி தருமபுரி மாவட்டத்தை நோக்கி பயணத்தை தொடங்கினோம்.


தொடரும்..........


அடுத்த பகுதியில்………


1970களில் தமிழக நக்சலைட்களின் தலைமை பீடமாக இருந்த மாவட்டம் தருமபுரி. இந்நிலையில் தருமபுரி – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 வழி பசுமைச்சாலை 58 கி.மீ பயணமாகிறது. தற்போது அந்த மாவட்ட மக்கள் இதனை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

 

சார்ந்த செய்திகள்