Skip to main content

சாராயத்தோடு செக்ரட்டேரியட்டுக்குப் போன கதை! - ஆட்டோ சங்கர் #6  

Published on 01/06/2018 | Edited on 01/06/2018
auto sankar 6 title



சாராய வியாபாரம் ஆரம்பிச்சு சீக்கிரத்திலேயே வியாபாரத்தோட நெளிவு, சுளிவுகளைத்  தெரிஞ்சுகிட்டேன். நாவலூர், விருகம்பாக்கம், திருநீர்மலை இப்படி அத்தனை ஏரியாக்கள்ளயும் இருக்கிற சாராயங்களையும் தரம் பிரிக்கிற அளவு வெவரமாயிட்டேன்.

முதல்ல எல்லாம் பஸ்ஸிலே போய்தான் சாராய கேனை எடுத்துக்கிட்டு வருவேன். பஸ்ஸிலே என் பக்கத்திலே கேனை   வச்சுக்கமாட்டேன். பின்புறமா அதை வச்சுட்டு நான் டிரைவர் வரைக்கும் நகர்ந்திடுவேன். வழியிலே செக்கிங் வந்தா   சரக்கை அம்போன்னு விட்டுட்டு இறங்கி ஓடிரலாமே! தூரத்திலே அவங்க நிற்கறப்பவே மோப்பம் பிடிச்சு இறங்கிடுவேன்....

மின்னல் வேகத்திலே வியாபாரம் வளர்ந்துச்சு! இந்த மாதிரி வியாபாரங்களே இப்படித்தானே... வளர்ந்தா மின்னல்   வேகத்திலே இருக்கும். விழுந்தாலும் இடி விழுந்தது கணக்கா விழும்! பஸ்ஸிலே போய் கொண்டு வந்தா போதாதுன்ற அளவு சரக்கு டிமாண்ட் ஆச்சு. வேனைப் புடிச்சேன்... பிறகு லாரி! பஸ், லாரி, ஆட்டோன்னு பல வாகனங்களில் சரக்குகளைக் கொண்டுவந்தேன்னு ஒற்றை வரியிலே சொல்லிட்டாலும் அப்ப நான் சந்திச்ச அனுபவங்களும் போராட்டங்களும் பயங்கரமானது.

 

 

ஒரு தடவை திருநீர் மலைல இருந்து சரக்கை எடுத்துக்கிட்டு வேன்லே வர்றப்ப மதுவிலக்கு போலீஸ் ஜீப்புலே   துரத்திக்கிட்டு வந்துடுச்சு. இங்கிலீஷ் படத்திலே வரமாதிரி பயங்கர சேஸிங்! குறுக்கு வழியிலே தப்பிக்கிறதுக்கும் காரை சாமர்த்தியமா விரட்டி ஓட்றதுக்கும் சரியான வேன் டிரைவரைத்தான் எப்பவும் பக்கத்திலே வச்சிருப்பேன்! ஆனா, அன்னிக்கு அவங்களுக்கு நல்ல நேரம். ஹைவேஸ்ல எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டோம். டிரைவர் இறங்கி ஓடியே போயிட்டான்... நான் இறங்குறதுக்குள்ளே வந்து மொய்ச்சுட்டாங்க

மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், பின்னாடி மிகப்பெரிய போலீஸ் அதிகாரியா சென்னையிலேதான் இருந்தாரு... என்னை நெருங்கி வந்து... "ஏண்டா... சரகத்துக்கு மட்டும்தான் மால் வெட்டுவியா? நாங்களெல்லாம் என்ன பழத்தை வச்சுகிட்டுப்போறதா?''ன்னு கேட்டார். அவர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க. ஒருத்தர் பாக்கியில்லாம எல்லா பெரிய   மனுஷங்களையும்... பெரிய மனுஷங்களோட சின்ன மனசுகளையும் இனி வரப்போற அத்தியாயங்களில் சொல்றேன்!

 

secretariat


அந்த அதிகாரியோடு பேரம் பேசினேன். அப்பாடா! இனிமே இந்த வழியிலே ஆபத்திருக்காது. ஏழு எட்டு வருஷ கிரிமினல் வாழ்க்கையிலே எத்தனையோ போலீஸ் ஆபீஸர்களைப் பார்த்துட்டேன்... நான் போட்ட எலும்புத் துண்டுகளை தின்றவங்களும் நான் குற்றவாளியாகக் காரணமானவங்களும் பெரிய பெரிய பதவிகளுக்கு ப்ரமோஷன் கிடைச்சுப்போனாங்க... ஆனா நான்? என்னை மட்டும் "சிவலோகப்பதவி'க்கு அனுப்பிட்டாங்க!

எல்லா போலீசுக்கும் இந்த முகம்தான்னு சொல்ல மாட்டேன். நேர்மையா வேலை செய்தவர்களும் உண்டு... அவங்க ரொம்ப அபூர்வம்ன்றது மட்டுமில்லை... எந்த பதவி உயர்வும் கிடைக்காதவங்கன்றதும் எனக்குத் தெரியும். நான் நேர்மையை பத்தி நம்பிக்கை இழந்ததெல்லாம் இந்த இடத்திலேதான்.

சாராய வியாபாரத்துக்காக ஒதுங்கியிருந்த புறம்போக்கு நிலத்தை -ஜெயந்தி தியேட்டர் பின்புறம்- எனக்கே எடுத்துக்கிட்டேன்! போலீஸ்தான் துணை இருக்கே. அந்த இடத்துக்கு 'பெரியார் நகர்'னு பேர் சூட்டினேன். 216 பிளாட்டுகளா பிரிச்சு, சுற்றி குடிசைகள் போட்டேன்.

 

 


"எப்படியாவது இந்த இடத்துக்குப் பட்டா வாங்கிடு சங்கர்''ன்னு சுகுமார் யோசனை சொன்னார்.

நேரமில்லாததாலே அதைக் கவனிக்காமலே இருந்தேன். ஒருநாள் ஆட்டோவிலே சரக்கை எடுத்துக்கிட்டு வர்றப்ப கார்ப்பரேஷன்லேருந்து ஆட்களெல்லாம் வந்திருக்கிறதா சொன்னாங்க. பெரியார் நகரைச் சுத்தி கூட்டம் கூட்டமா ஜனம். புறம்போக்கை ஆக்கிரமிச்சிருக்கிறதாலே அப்புறப்படுத்த அதிகாரிங்களெல்லாம் வந்திருந்தாங்க

எனக்கு பரபரப்பாயிடுச்சி! தொழில் நடத்த இடம் வேணுமே... சட்டுனு ஆட்டோவை எடுத்துக்கிட்டு 'கோட்டை'க்குப் போனேன், அவரைப் பார்க்க... செகரட்டேரியட்டை நெருங்குறப்பதான் தெரிந்தது... ஆட்டோவுக்குள்ளே இருந்த 'சரக்கை' இறக்காமலே கொண்டுவந்திருக்கேன்னு. அவ்வளவு சாராயத்தோட கோட்டைக்குப்போன மொத ஆள் நானாகத்தான் இருக்கும். கோட்டையிலே போய் யாரை பார்த்தேன் தெரியுமா?           
 

முந்தைய பகுதி:

சப் இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்த சாராய வியாபாரம்... ஆட்டோ சங்கர் #5   

 


    

சார்ந்த செய்திகள்