Skip to main content

இரவு இரண்டு மணிக்கு 'பெண்' கேட்ட தேசிய தலைவர்! - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் #15  

Published on 25/08/2018 | Edited on 03/09/2018
autosankar #15



புதைத்து மூடி விட்டால் விஷயம் வெüயே தெரியாது என நம்பினது எங்களது அறியாமை! இரண்டு விஷயங்கள் புதைத்த பிறகுதான் முளைத்து வெளிக் கிளம்பும் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது! அந்த இரண்டில்- ஒன்று விதை! இன்னொன்று ரகசியம்!  

வடபழனி புரோக்கர் போன் போட்டு கூப்பிட்ட போது முதலில் ஆர்வமே காட்டவில்லை நான்! லலிதா மரணம் நடந்து ஒரு வாரம், பத்து நாள்தான் ஆகியிருந்தது... துக்கத்தின் வலி கணிசமாகவே நெஞ்சில் தேக்கம் கண்டிருந்தது. நடிகை ஒருத்தியை உடனே ஏற்பாடு செய்யும்படி சொன்னான் எதிர்முனையில் இருந்தவன் அவர் பெயரைச்   சொன்னான்.   கேட்டதும் பெரும் பரபரப்பானேன்.

"நி... நிஜமாவா...? அவருக்கே வா?''

ரத்தத்தில் சுறுசுறுப்பானேன்.

மணியைப் பார்த்தேன். பெருமூச்சு ஒன்று பயணமானது! ராத்திரி ரெண்டு மணிக்கு எந்த நடிகையைக் கூப்பிட முடியும்? ஆனால் வி.ஐ.பி.யை திருப்திப்படுத்தியும் ஆகவேண்டும்! வளசரவாக்கம் அம்மாவுக்கே போன் செய்தேன்! அவர்   வீட்டில்தான் இருவர் இருந்தார்கள். ஒருத்தர் இல்லாமல் போனாலும் இன்னொருத்தராவது கிடைப்பாரே!

"எந்த சங்கர்! மணி ரெண்டு ஆயிட்டல்லே... இப்போ போய் பெண்குட்டிகளை எழுப்பி பறையணுமல்லே...?'' என்று   சிணுங்கி மறுத்தது தாய்க்குலம்.

"அம்மா... கூப்பிடறது யாரு தெரியுமா?" வி.ஐ.பி.யின் பெயரைச் சொல்ல... அந்தம்மாவின் ஆச்சர்யம் அவளையும் மீறி   போனில் கேட்டது.

"ஓ... ஆயாளோ?''
 

auto sankar 15 2



அவர் சற்று விபரமான தாய்க்குலம். நட்சத்திரங்களான மகள்களை பெரிய மனிதர்களிடம் மட்டுமே அனுப்புவார் (அந்தத் தொகையைக் கட்ட அவர்களால்தான் முடியும் என்பது வேறு!) முதல் தடவை அனுப்பும் போது மட்டும்தான் என்   போன்ற புரோக்கர்கள் தேவைப்படுவார்கள். அந்த வி.ஐ.பி.க்கள் அடுத்த தடவை டைரக்டாக வீட்டுக்கே போன்   அடிப்பார்கள். அந்தளவுக்கு நெருக்கம் காட்டிவிடுவார்கள். 'தொழிலில்' அவ்வளவு சமர்த்து! இந்த விஷயம் எனக்கும் தெரியும்!

வேறொரு பெரிய மனிதரிடம் முன்பு ஒரே தடவைதான் கொண்டுவிட்டேன்! அப்புறம்   எத்தனை தடவை அவர்களாக போய்விட்டு வந்தார்களோ! தோட்டம், பங்களா என   எல்லாமே சடுதியில் சேகரமாயிற்று அந்த பெரிய மனிதர் உறவால்! நடித்து சம்பாதித்ததை விட அவர்கள் இப்படி சம்பாதித்தது அமோகம்.

 

 


நான் சொன்ன வி.வி.ஐ.பி.யின் பெயர் கேட்டதும் புளகாங்கிதப்பட்டுப் போனார் தாய்க்குலம். பின்னே மாட்டாரா? நான் முன்பு பழக்கப்படுத்தி வைத்த ஒரு நபரிடமே   லட்சக்   கணக்கில்    கறந்து   ஒரு   தலைமுறைக்கு    சொத்து   சேர்த்தாயிற்று. இப்போது நான் சொல்வது பழைய வி.ஐ.பி.யை விட பராக்கிரமசாலி! டெல்லி வரைக்கும் தங்கள் கொடி பறக்குமே...

டெல்லிக்கும், காஷ்மீருக்கும், அஸ்ஸாமுக்குமாக பொழுதுக்கும் பறந்து கொண்டிருக்கும் அவருக்கு இதற்கெல்லாம்   நேரமும் விருப்பமும் வருவதே அபூர்வம்! அது வந்து, அந்த வாய்ப்பு தன் பெண்களுக்கே கிடைக்கிறதென்றால் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! அதை உபயோகித்துக் கொள்ள தவறுமா தாய்க்குலம்.

வாசலில் கார் போய் நிற்க, எட்டிப்பார்த்தார்கள்.

"பெண்ணுக்கு எவ்வளவு ரூவாம்மா?'' என்றேன்.

"சங்கர் அறியுமல்லே? எப்போதும் போல்!'' - தமிழ் பேச திணறினார் அம்மா.

"எப்பவும் பதினைந்தாயிரம் தருவேன்... ஆனா இந்த தடவை ஒரு மாறுதலுக்கு நீங்க எனக்கு பதினைந்தாயிரம் தரீங்க!'' என்றேன்.

"எந்தானு?'' -நெற்றி சுருங்கினார்.

 

book ad



"ஆமா! ஏன்னா அடுத்த தடவை அவர்கிட்டே போக என் தயவு தேவையிருக்காதே உங்களுக்கு? அது மட்டுமில்லாம...   அவர்கிட்ட இன்னும் எவ்வளவு லட்சோப லட்சம் சம்பாதிக்கப் போறீங்களோ... யாருக்குத் தெரியும்...''

"ஓ'' -

முகத்தில் கோபம் மொய்த்தது. இவ்வளவு புகழ் வாய்ந்த தன் மகளுடன் இருக்க அவனவன் தவம் கிடக்கிறான். இவன்   என்னடாவென்றால் ராத்திரி எழுப்பிக் கூட்டி செல்வதுமல்லாமல் தங்களிடமே பணம் கேட்கிறானே... என்ன கொழுப்பு? என்றுதான் நினைத்திருப்பார்.


"மிஸ்டர் சங்கர்! வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்?'' என ஆத்திரம் பொங்க சொன்னது ஒரு மகள்.

"வித் ப்ளஷர்!'' -சிரித்தேன்.

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 


முந்தைய பகுதி:

குழி தோண்டிப் புதைத்து... சிமெண்ட் பூசி மறைத்து... ஆட்டோ சங்கர் #14
 

அடுத்த பகுதி:

உன்கிட்ட கொடுக்குறேன், தலைவரிடம் கறந்துக்கிறேன்... முடிவோடு வந்த நடிகை! - ஆட்டோசங்கர் #16