Skip to main content

சீனாவின் பிடியிலிருந்து கொரியாவை மீட்டது ஜப்பான்!!! -கொரியாவின் கதை #6

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையிலான ஒப்பந்தம் மிரட்டி போடப்பட்ட ஒப்பந்தம் என்றே கொரியர்கள் நினைத்தார்கள். கொரியாவை மிரட்டுவதற்காக கொரியாவுக்கு சொந்தமான காங்வா தீவில் ஜப்பான் தனது ராணுவத்தை இறக்கியது.

 

koriyavin kathai


 

அந்தத் தீவு, ஏற்கெனவே வெளிநாட்டினருக்கும் கொரிய ராணுவத்துக்கும் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த தீவு. அந்தத் தீவில் நிறுத்தப்பட்டிருந்த கொரிய ராணுவம், தீவை நெருங்கும் எந்தக் கப்பலையும் தகர்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது.

 

 

 

இந்நிலையில்தான், 1875 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி காலை இனர் யோஷிகா என்ற ஜப்பானிய தளபதியின் தலைமையில் கொரியாவின் கடலோர பகுதியில் ஜப்பான் கப்பல்படை அணிவகுத்தது. தங்களுக்கு தண்ணீரும் உணவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை ஏற்காமல் ஜப்பானிய கப்பல்கள் மீது கொரியா ராணுவம் கடும் தாக்குதலை தொடுத்தது.

 

koriyavin kathai


 

உக்கிரமான சண்டையில் கொரியாவின் தடுப்புகளையும், எதிர்த்தாக்குதலையும் முறியடித்துவிட்டு காங்வா தீவில் இறங்கிய ஜப்பான் ராணுவம், கொரிய ராணுவத்தினரின் பல வீடுகளுக்கு தீ வைத்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தே, கொரியா – ஜப்பான் ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஜப்பானிய வியாபாரிகள் புஸான் நகருக்கு வந்தனர். அந்த நகரம் வெளிநாட்டு வர்த்தகத்தின் மையமாகியது. 1881ல் ஜப்பானிய அதிகாரிகள் கொரியாவின் முதல் செய்தித்தாளை வெளியிட்டனர். கொரியாவின் படித்த சமூகத்தை கவரும் நோக்கில் சீன மொழியில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அந்தக் கட்டுரைகள் அரசியல் சட்டரீதியான அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்தன. பேச்சு சுதந்திரம், மக்களுடைய சட்டப்படியான உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான வலுவான சட்டத்தின் ஆட்சியையும், கொரியாவை தொழில்மயமாக்குவதையும் அந்தக் கட்டுரைகள் வலியுறுத்தி எழுதப்பட்டன. இந்தக் கட்டுரைகளின் நோக்கங்களில் சில தேறின. ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்ட கட்டுரைகள், ஜப்பானிய வர்த்தக விவரங்களை தெரிவித்தன. இந்தப் பத்திரிகை 1882 மே மாதவாக்கில் தடை செய்யப்பட்டது.

 

 

 

கொரியாவில் ஜப்பானின் ஆதிக்கத்தையோ மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தையோ கொரியாவின் இளவரசர் டேவோன்கன் விரும்பவில்லை. அரசி மின்னுக்கு எதிராக 1882 ஆம் ஆண்டு ஒரு கலகம் நடத்துவதற்கு அவர் தூண்டுதலாக இருந்தார். கொரியாவின் பழைய ராணுவம் ஜப்பானிய பயிற்சிபெற்ற ராணுவ வீரர்களை கொன்று, ஜப்பானிய தலைமை அலுவலகத்தையும் தாக்கியது. ஜப்பானிய அதிகாரிகள், போலீஸார், மாணவர்கள், ராணியின் உறவினர்கள் பலரையும் கொன்றது. இதைத்தொடர்ந்து, டேவோன்கன் கொஞ்சகாலம் அதிகாரத்தை கைப்பற்றினார். ஆனால், சீன வீரர்கள் டேவொன்கன்னை வலுக்கட்டாயமாக சீனாவுக்கு அழைத்துச் சென்றனர். ஜப்பானியர்களால் சியோல் நகரம் மேலும் கலகபூமிமயாகிவிடக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கலகம் காரணமாக 1882 ஆம் ஆண்டு கொரியா – ஜப்பான் இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பானியர்கள் கொல்லப்பட்டதற்கும், ஜப்பானுக்கு ஏற்பட்ட இழப்புக்கும் அபராதமாக 5 லட்சம் யென் வசூலிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, சியோலில் உள்ள ஜப்பான் தலைமை அலுவலகத்தில் ஒரு கம்பெனி ஜப்பான் ராணுவத்தினரை நிறுத்திக்கொள்ளவும் கொரியா ஒப்புக்கொண்டது.

 

koriyavin kathai


 

கொரியாவின் இளவரசர் டோவொன்கன் ஆதரவாளர்களுக்கும் ராணி மின் ஆதரவுப் படையினருக்கும் நெருக்குதல் ஏற்படுத்தும் வகையில் கொரிய விடுதலையை வலியுறுத்தும் முன்னேற்றக் கட்சி உருவாகியது. அதற்கு போட்டியாக பிற்போக்குவாத குழுவும் தோன்றியது. முன்னேற்றக் கட்சி ஜப்பானின் ஆதரவையும், பிற்போக்குவாத குழு சீனாவின் ஆதரவையும் கேட்டன. 1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஜப்பான் ஆதரவுடன் முன்னேற்றக்கட்சி ராணுவ கலகத்தில் ஈடுபட்டது. இதன் விளைவாக சீனாவின் பிடியிலிருந்து விலகி, ஜப்பான் ஆதரவு அரசாங்கம் அமைக்கப்பட்டதாக அறிவித்தனர். ஆனால், சீனா ஆதரவைப் பெற்ற பிற்போக்குவாத குழு கலகத்தை முறியடித்தது. கொரிய மக்கள் ஜப்பானிய அதிகாரிகளையும், ஜப்பான் குடியிருப்புகளையும் தாக்கி அழித்தனர். முன்னேற்றக் கட்சியின் கிம் ஓக்-க்யுன் ஜப்பானுக்கு தப்பி ஓடினார். சிக்கிய அந்தக் கட்சியின் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். அடுத்த 10 ஆண்டுகள் கொரியாவில் ஜப்பானின் ஆட்டம் ரஷ்யாவின் முயற்சியால் மட்டுப்படுத்தப்பட்டது.

 

 

 

ஆனால், 10 ஆண்டுகளில் கொரியாவில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ந்தன. போலியான சட்டங்களை உருவாக்கினார்கள்.  விவசாயிகளின் நிலத்தை பறித்தார்கள். அணைகளைக் கட்டும்படி விவசாயிகளை நிர்பந்தம் செய்தார்கள். அரசாங்கத்தின் அட்டூழியத்திற்கு எதிராக ஜியோன் போங்ஜுன், கிம் கயேனம் ஆகியோர் தலைமையில் அணிவகுத்தனர். புரட்சியைத் தொடங்கினார்கள். ஆனால், அந்த புரட்சி ஒடுக்கப்பட்டது. தலைமை வகித்த ஜியோன் தப்பினார். சில காலம் கழித்து அவர் ஒரு படையைத் திரட்டி மீண்டும் கோபு பிரதேசத்தை கைப்பற்றினார். அதையடுத்து புரட்சிக்காரர்கள் அரசுப் படைகளுக்கு எதிராக அணிவகுத்தனர். இந்த புரட்சியின் மூலம் புரட்சியாளர்கள் கைப்பற்றிய பகுதிகளை அவர்களே நிர்வகிக்கும் வகையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், நிலையான அமைதி எட்டப்படவில்லை. அரசாங்கம் இந்தப் புரட்சியால் அஞ்சியது. சீனாவின் குய்ங் பேரரசின் உதவியை நாடியது. அதன்பேரில், 2,700 வீரர்களை கொரியாவுக்கு அனுப்பியது சீனா. ஜப்பானுடனான ஒப்பந்தத்தை மீறி சீனா வீரர்களை அனுப்பயதால் ஜப்பான் அரசு ஆத்திரமடைந்தது. இது சீனா – ஜப்பான் போருக்கு வழி வகுத்தது. 1894 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர் மிக உக்கிரமாக நடைபெற்றது. போர் தொடங்கியதில் இருந்து சீனாவுக்கு எதிராக ஜப்பான் ராணுவம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றது. நிலத்திலும், நீரிலும் நடைபெற்ற போர்களில் ஜப்பான் ராணுவத்தின் நவீனத்தன்மைக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீன ராணுவம் திணறியது. அதைத்தொடர்ந்து, 1895 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனா வெள்ளைக்கொடி காட்டி சமாதானம் பேசியது.

 

koriyavin kathai


 

குய்ங் பேரரசு தனது ராணுவத்தை நவீனமயப்படுத்தாமல் தவிர்த்ததால் ஏற்பட்ட இந்தத் தோல்வி சீனாவிலும் மிகப்பெரிய மாற்றங்களுக்கு அடித்தளம் அமைத்தது. கொரியா தீபகற்பம் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு ஜப்பான் பேரரசு வசம் கைமாறியது. ஜப்பான் மட்டுமின்றி, கிழக்கு ஆசியா முழுக்க ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இது சீனாவுக்கு மிகப்பெரிய அடியாக கருதப்பட்டது. சீனாவிலோ, முடியாட்சி ஒழிக்கப்பட்டு சன் யாட் சென், காங் யுவேய் ஆகியோர் தலைமையில் ஸின்ஹாய் புரட்சி ஏற்படவும் காரணமாகியது.

 

சீனப் புரட்சிக்கு காரணமானது இருக்கட்டும். கொரியா முழுக்க ஜப்பானின் கட்டுப்பாட்டில் வந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு புரட்சிகளை ஒடுக்க ஜப்பான் முயற்சிகளை எடுத்தது. டோங்காக் புரட்சிக்காரர்களை கொரிய அரசுப்படை உதவியுடன் முற்றாக நசுக்கியது. ஜப்பான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொரியா முழுமையாக வந்தது.

 

முந்தைய பகுதி:

ஜப்பானிடம் கொரியா அடிமைப்பட்டது எப்படி? கொரியாவின் கதை #5