Skip to main content

நான் திருட்டுத்தனமா பாலை கறந்தேன், அவன் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் கறந்தான்! ஆட்டோ சங்கர் #7

Published on 08/06/2018 | Edited on 16/06/2018
auto sankar 7



அவ்வளவு சாராயத்தோட கோட்டைக்குப் போன மொத ஆள் நானாகத்தான் இருக்கும். கோட்டையிலே போய் யாரை பார்த்தேன் தெரியுமா? முனு ஆதியை! முனு ஆதியைப் பற்றி பின்னாடி சொல்றேன்.

நான் இப்ப வேணா இத்தனை பழிகளை சுமந்துக்கிட்டிருக்கேனே தவிர அப்போல்லாம் மாசு  மருவற்றவன். அப்படி இருந்தும் இப்ப ஏன் இந்த கஷ்டம்? எங்கே பிசகு நடந்துச்சு? புரியல... புரியாது. அதுதானே வாழ்க்கை. உண்மைன்றது கற்பனையைவிட வேடிக்கையாவும் விபரீதமாகவும் எத்தனையோ தடவை தோற்றம் தருவது! என் வாழ்க்கையிலேயே அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்!

சாராய வியாபாரமும் அமோகமா  நடந்துச்சு... என் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துகிட்டே போச்சு.  கல்லா கட்டி, 4 ஷிப்ட் போட்டு   வியாபாரம் செய்யவேண்டிய அளவுக்குப் பெருகிப்போச்சு. முப்பத்தைஞ்சு லிட்டர் கேன் வாங்கி எடை கட்டினா நாலு மடங்கு லாபம் பார்க்கலாம்.   எழுநூறு ரூபா சரக்குக்கு ரெண்டாயிரத்து எண்ணூறு வரை சம்பாதிக்கலாம்...

 

 


நல்ல சரக்குக்கு அடையாளம்... கையை சாராயத்துக்குள்ளே முக்கி தீயிலே காட்டினதும் குப்புன்னு கையை சுத்தி தீப்பிடிக்கும். ஆனா கையிலே  சுடாது... அந்த நல்ல சரக்கிலே நாலு பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு கேனை நாலு கேன் ஆக்குவதற்குப் பேர்தான் 'எடை கட்டுவது' சும்மா பேருக்கு  அப்பப்ப ரெய்டு வருவாங்க. அதுவும் முதல் நாளே என்கிட்டே வந்து இன்ஸ்பெக்டர் தலைமலை சொல்லிடுவாரு...  தலைமலைன்னு  சொன்னதும்   ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. போலீஸைப் பத்தி சரியா புரிய வைக்க இதைவிட நல்ல சம்பவத்தைச் சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்.

ஒரு நாள் ஸ்டேஷனுக்கு அவரைப் பார்க்கப் போனப்ப, லாக்-அப்  ரூமிலே தலைமலையும், கூட நாலு போலீஸ்காரங்களுமா சேர்ந்து ஒரு ஆளை நையப்புடைச்சுக்கிட்டிருந்தாங்க... ஸ்டேஷன்ல இது வழக்கமா நடக்கிற விஷயம்தான்னு கண்டுக்காம வந்துட்டேன் முதல்நாள். ரெண்டாவது நாளும் அந்த ஆளை, ஆள்மாற்றி ஆள் பந்தாடிக்கிட்டு இருந்தாங்க... உடம்பெல்லாம் ரத்தம் ஒழுக அவனைப் பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு.

"இனிமே ஒழுங்கா இருப்பியா?”ன்னு ஆள் மாற்றி ஆள் கேள்வி கேட்டுக்கிட்டே அக்கக்கா கழற்றினாங்க. ஆள் செத்துடுவானேன்னு பயமாப்போச்சு. மூன்றாவது நாளும் அவன் தொடர்ந்து அடி வாங்கறதைப் பார்த்துட்டு என்னன்னு விசாரிச்சேன்... "எதாவது ரௌடித்தனம் பண்ணினானா?'

 

 



station torture

 

"ம்ஹும்... அதெல்லாமில்லை! இவனும் ஒரு சாராய வியாபாரிதான். நல்லா சம்பாதிச்சுக்கிட்டிருந்தான். எங்களுக்கு மாமூல் தந்துக்கிட்டிருந்தான்.   இப்ப திடீர்னு வந்து "இனிமே நான் சாராய வியாபாரமெல்லாம் பண்ண மாட்டேன். திருந்திட்டேன்”றான். அதற்குத்தான்  இந்த ஸ்பெஷல் பூஜை''

எனக்கு திக்குன்னு ஆயிருச்சு. எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் போலீஸ் ஜாதிக்கு நன்றி மறந்துடும். பாவம் அந்த வியாபாரி. இந்த  இன்ஸ்பெக்டருக்கு எவ்வளவு பணம் கொடுத்திருப்பான்... அதையெல்லாம் சுத்தமா மறந்துட்டு இப்ப மாமூல் வரலைன்னதும் இப்படி அடிச்சு  நொறுக்குகிறாரே... கொஞ்சம்கூட நெஞ்சிலே ஈரமே இருக்காதோ?

திருந்தினால் கூட திருந்த விட மாட்டேன்றாரே. இப்ப எனக்கு மரியாதை தந்தாலும் எதிர்காலத்திலே நான் மனசு மாறினாலும் இந்த கதிதான்!போலீஸ்காரங்களை ரொம்ப நெருங்கினாலும் போச்சு. ரொம்ப பகைச்சாலும் போச்சு. மனசுக்குள்ள ஒரு எச்சரிக்கை விளக்கு எரிஞ்சது.  அடிவாங்கின அந்த ஆளோட ஏரியா இது கிடையாது. அவன் பெயில்ல போயிரக்கூடாதுன்றதுக்காக ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் மூணு நாளைக்கு  மேலே வச்சுக்காம இடம் மாற்றிக்கிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும் மண்டகப்படிதான்!

மாதா மாதம் திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அறுபதாயிரம், எழுபதாயிரம் மாமூல் வெட்டுவேன். ஒவ்வொரு போலீஸ்காரரும் வாங்கற  சம்பளத்தை விட, ரெண்டு மடங்கு தொகை நான் தருவேன். அந்த ஸ்டேஷனைப் பொறுத்தமட்டிலும் நான்தான் கவர்மெண்ட். ஏட்டு, ரைட்டர், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், எஸ்.பின்னு... அத்தனை பேருக்கும் "கேட்டகரி”யைப் பொறுத்து சம்பளம் தந்தேன்.

 

 


நான் ஸ்டேஷனுக்குப்போய் மாமூல் கட்டின நிலைமாறி, என்னைத்தேடி வரும்படி வச்சேன். வீடு தேடி வர ஒவ்வொரு போலீஸ்காரரும், ஐ.ஜி.க்குத் தர்ற மரியாதையை எனக்குத் தந்தாங்க. சோபாவிலே கால் மேல கால் போட்டு தர்பாரா உட்கார்ந்திருப்பேன். இடப்பக்கம் வாள் சொருகிக்காத இளவரசன் கணக்கா செம பந்தா! கையிலே விஸ்கி கிளாஸ் வேற... கைகட்டி, வாய் பொத்தி நிப்பாங்க சுகுமாரும், மற்ற போலீஸும். திருவான்மியூர்லே  கொடிகட்டிப் பறந்தேன்.

சாராயத்தை ஒரு இடத்திலே கொடுத்துட்டு வியர்வையும் களைப்புமா திரும்பி வந்திருந்தேன். தம்பி மோகன் வந்து, யாரோ எனக்காக ரொம்ப  நேரமா காத்திருப்பதாகச் சொன்னான். போய்ப் பார்த்தேன். அவன் எழுந்து நின்றான். அப்ப மெட்ராஸ்லே இருந்த பெரிய பெரிய தாதாக்கள்  பேரெல்லாம் சொன்னான். பேரைக் கேட்டாலே நான் மிரளுகிற பெயர்கள். அவர்களெல்லாம் தனக்கு மிகவும் நெருக்கமென்றான்.

"நீங்க என்னைப் பார்க்க வந்திருக்கிற காரணம்?''

"இந்த வட்டாரத்திலேயே நீங்கதான் பெரிய சாராய வியாபாரின்னு சொன்னாங்க... அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்! நான் உங்களுக்கு ரொம்ப உபயோகப்படுவேன்!''

"எப்படி?''

அவன் சொன்ன பதில்கள்ல எனக்கு செம அதிர்ச்சி. கொஞ்சம்கூட எதிர்பாராத மிருகத்தனமான யோசனைகள் சொன்னான் அவன்.

"இப்படி மனிதாபிமானமில்லாம இருக்கீங்களே''ன்னு  சொல்லிட்டு சிரிச்சேன்.

நான் செய்த சாராய வியாபாரம் ஒன்றும் புனிதமான பணி இல்லே! அதே சமயம் சன்னமா ஒரு தொழில்தர்மம் வச்சிருந்தேன் நான்.

ரெண்டு பேரோட குணமும் பொல்லாததுதான்! அதே சமயம் நான் திருட்டுத்தனமா மாட்டுகிட்டேயிருந்து பாலை கறந்தேன்... அவன் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் கறந்தான்னு சொல்லலாம். விரிவா எல்லாத்தையும் பின்னாலே சொல்றேன். பேரைக்கேட்டேன். "பாபு”ன்னு சொல்லி சிரிச்சுகிட்டே கை குலுக்கினவன் மெல்ல "என் மேலே ஒரு கொலைக் கேஸ்... நடந்துக்கிட்டிருக்கு'' என்றானே பார்க்கலாம். பதறிப்போனேன்.

"கொ...கொலை....கேஸா?'' -எனக்குக் குலை நடுங்கியது.

பின்னாளில் என் மீதே ஆறு கொலைகள் பண்ணினதா கேஸ் வரப்போகுது, அதற்கு இந்த பாபுதான் அப்ரூவராகி எனக்கெதிரா சாட்சி  சொல்லுவான்னு அப்ப சுத்தமா எதிர்பார்க்கல!
 

 

அடுத்த பகுதி:

விலை மாதுக்களை காக்கப் போய், நான் விபச்சாரியான கதை... ஆட்டோ சங்கர் #8

முந்தைய பகுதி:

சாராயத்தோடு செக்ரட்டேரியட்டுக்குப் போன கதை! - ஆட்டோ சங்கர் #6