Skip to main content

அதிமுகவின் பிளவு... ஆட்டோசங்கருக்கு லாபம்! - ஆட்டோசங்கர் #9  
auto sankar 9அந்த அதிகாரிக்குத் தங்கய்யா என்பதற்குப் பதில் தகரய்யா என்று பெயர் வைத்திருக்கலாமோ!'. மனசுக்குள் அருவருப்பு. விபச்சாரத் தொழிலை   நான் நடத்துவதாவது? குமட்டிக்கொண்டு வந்தது! போலீஸ் அதிகாரி பேசினது நெஞ்சுள் நெருப்பு மூட்டினது. கொடிய விஷம் கொண்ட பாம்பை 'நல்ல (!) பாம்பு' என்பது மாதிரிதானோ தீயவர்களை உற்பத்தி பண்ணும் கொடிய ஸ்தலத்தை காவல்(?)துறை என்பதும்?

போலீசே ஆரம்பத்திலே இரண்டு பெண்களைக் "கருணையோடு' தந்து கலர்ஃபுல் தொழிலுக்கு உதவி புரிந்தது. போதையில்லாமலே தலை சுற்றினது. அந்த இரண்டு பெண்கள் உதவியுடன் தேடினோம். ராதாகிருஷ்ணன் ரோட்டில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் இரண்டு பெண்கள்  கிடைத்தார்கள், பெத்தடின் ஊசிக்காக... வழி தவறிப்போன இவர்களோடு இரண்டு, மெள்ள நான்கானது. அப்புறம் எண்ணிக்கை பத்தானது... 88ஆம் வருடம் நான் கைது செய்யப்பட்டபோது என் வசம் இருந்த பலான பெண்கள் இருபத்தி ஐந்து பேர்கள்! வந்து போனவர்கள் எண்ணிக்கை பல  நூறுகள்.

 

 


உபத்திரா தேவி! பெயருக்கு ஏற்ப பார்ப்பவர் மனசை உபத்திரவம் செய்கிற பேரழகி... என்னிடம் இருந்த பெண்களில் ஒருத்தி! நெஞ்சைச் சீண்டுகிற அழகு; சிரிக்கும்போது தென்படும் அடுக்கு தவறாத பல்வரிசை அவள் எழிலுக்கு ஜீவன். அந்த உபத்திராதேவி சுடலையின் மனதை ரொம்பவும்  சோதித்திருக்கிறாள். தனது காதலை அவளிடம் சொல்வதா, வேண்டாமா? - சுடலையின் மனதுக்கும் மனசாட்சிக்கும் மத்தியில் மல்யுத்தமே  நடந்திருக்கிறது. ஒரு நாள் தயங்கித் தயங்கி சொல்லியே விட்டான் சுடலை.

 

 

sudalai"உ... உபத்திரா ஒன்று சொன்னா கோவிச்சுக்க மாட்டியே..?''

அவள் குறும்பாகச் சிரித்தாளாம்.

"கோவிச்சிக்கிற மாதிரி எதுவும் சொல்ல மாட்டீங்களே?''

அவன் காதலை தெரிவிக்க விழுந்து விழுந்து சிரித்த அவள்,

"காதலிக்கிறீங்களா...! என்னையா? நல்லகூத்து!''

"விளையாட்டா தெரியுது உனக்கு! நான் சீரியஸா சொல்றேன்!''

அவளை மெள்ள மெள்ள மூளைச் சலவை செய்திருக்கிறான் சுடலை.

"அதெல்லாம் சரி... நான் எப்படி இங்கேயிருந்து வரமுடியும்? ஐயாயிரம் ரூவா அட்வான்ஸ் வேற சங்கரண்ணா கிட்ட வாங்கியிருக்கேன். அதைக் கழிக்காம எப்படி வரமுடியும்?''

"சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிடுவோம்''

"வெளியே போய் பிழைக்கிறதுக்கு பணம்?''

"திருட வேண்டியதுதான்... சங்கர்கிட்டேயிருந்து!'' என்று நன்றி மறந்து சொல்லியிருக்கிறான் சுடலை. இதெல்லாம் எனக்கு அப்போது தெரியவே தெரியாது.

 

 


தெரிந்திருந்தால் விபச்சாரத் தொழிலுக்கு இறக்கிய போலீஸ் அதிகாரிக்கு ராகம் தாளத்தோடு பல்லவியும் தேவைப்பட்டதால் அந்த நடிகையை  ஏற்பாடு செய்வதற்காக சுடலையைக் கூப்பிட்டிருப்பேனா?

"அவளுக்கு ரேட் என்ன?''

"பத்தாயிரம் ரூபா''

"சரி... நீ போய் பணம் கொடுத்து அவளை சவேரா ஓட்டலுக்கு நாளைக்கு வரச்சொல்லிடு!'' என்றேன் சுடலையிடம். சுடலையின் கண்களில் சந்தோஷச்சுடர் தெரிந்ததை கவனிக்கத் தவறிவிட்டேன்.

 

 

mgr deathசுடலை பணத்தைத் திருடிக்கொண்டு ஓடினதைவிட, என்னிடமிருந்த ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு சென்றதைவிட, அதிகாரிக்கு நடிகை  அனுப்பப்பட்டிருக்க வேண்டிய கடமையில் மண் விழுந்து கெட்டபெயராகிவிட்டதே என்ற ஆத்திரம். "ராஸ்கல்... அவனைத் தேடுங்கடா...' என  எடுபிடிகளுக்குக் கட்டளையிடத்தான் முடிந்தது.

பாபுவின் தலைமையில் ஒரு பட்டாளம் எங்கெங்கோ தேடிற்று. சுடலையைப் பிடிப்பதில் என்னைவிட தீவிர ஆர்வமாயிருந்தான் பாபு. பாபுவுக்கும்  சுடலைக்கும் சாதாரணமாகவே அடிக்கடி உரசல் வரும். முதல் தளபதியாக இருப்பது யார் என்பதில் பதவிச் சண்டை... இப்போது சுடலை பொது எதிரி. என்னைவிட அவனோட கணக்கைத் தீர்த்துக்கொள்ள துடித்தான். எவ்வளவு தேடியும் சுடலை கிடைத்தபாடில்லை!

எம்.ஜி.ஆர். மரணத்தின்போது தமிழ்நாடே திமிலோகப் பட்டது. அரசியல் சதுரங்கத்தில் கன்னா பின்னாவென காய் நகர்ந்தது. ரெண்டு பக்கமும் 'ராணிகளின்' ராட்சத ஆட்டம்! எம்.எல்.ஏ.க்களை பங்கு போட்டுக்கொள்வதில் பயங்கர அமளிதுமளி. ஆர்.எம்.வீ. தொண்ணூறுக்கு மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர ஓட்டல்களில் கட்டிக்காத்தார். மற்றொருபுறம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கோஷ்டி. பணம் தண்ணீராக வாரியிறைக்கப்பட்டது.

 

 


நேற்றுவரை ஒரே தலைமையின் கீழ் இயங்கிய ரத்தத்தின் ரத்தங்கள் இன்று வேண்டாதவர்களாகிப் போனார்கள். ஒருவர் மீது மற்றவர் அழுக்கு அறிக்கைகளை வாரி இறைத்தனர். அந்த யுத்தகளத்தில் ஒரேயொருவரை ரெண்டு கோஷ்டியிலுமே மதித்தனர். அந்த நபரைப் பார்த்ததும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடினர். ரெண்டு பக்கமும் வேண்டியவரான அந்த நபர்...? அடுத்த பகுதியில் சொல்கிறேன்... 

முந்தைய பகுதி:

விலை மாதுக்களை காக்கப் போய், நான் விபச்சாரியான கதை... ஆட்டோ சங்கர் #8

அடுத்த பகுதி:

"எங்களை மனுஷங்ககிட்ட அனுப்புங்க அண்ணா..." - கதறிய விலைமாது! - ஆட்டோ சங்கர் #10 

  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்