Skip to main content

இதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்! டுலெட் - விமர்சனம் 

Published on 22/02/2019 | Edited on 23/02/2019

வீடு... மனிதனின் அடிப்படை அத்தியாவசிய தேவையாகவும் ஆகப்பெரும் லட்சியமாகவும் இருப்பது. பிழைப்புக்காக நகரத்துக்கு இடம்பெயர்பவர்களின் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த நிலை இருந்தாலும் உலகமயமாக்கலின் விளைவாக தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்து அதில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கத்தொடங்கிய அந்த காலகட்டத்தில் வேறு வேலைகளில் இருந்தவர்களுக்கு வீட்டு வாடகை என்பது மிகப்பெரும் சுமையானது. இதைத் தாங்க முடியாமல் நகரத்தை விட்டு வெளியேறி புறநகர் பகுதிகளுக்கு சென்றவர்கள் அதிகம். அந்த 2007 காலகட்டத்தில் வாடகை உயர்வால் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலைக்கு வரும் இளங்கோ - அமுதா தம்பதி தங்கள் குழந்தை சித்தார்த்துடன் வீடு தேடும் படலமும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் விதவிதமான கேள்விகள், சவால்கள், அவமதிப்புகள், அனுபவங்களும்தான் இயக்குனர் செழியனின் 'டுலெட்'.

 

tolet movie family



உலகமெங்கும் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு 80 விழாக்களில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 34 விருதுகளைப் பெற்றுள்ள படம்... தேசிய விருதையும் வென்று பின்னர் திரைக்கு வந்திருக்கிறது. பின்னணி இசை கிடையாது, பாடல்கள் கிடையாது, விறுவிறுப்பு, பொழுதுபோக்குக்கான எந்த அம்சங்களும் கிடையாது, அழகழகான கோணங்கள், ஃப்ரேம்கள், லொகேஷன்கள் கிடையாது. ஒரு ஒளிப்பதிவாளர், தான் இயக்கும் முதல் படத்துக்கு எந்த ஒரு மேக்-அப்பும் சேர்க்காமல், சொல்ல வந்த கதைக்கு முழுமையாக உண்மையாக இருக்கும்படி இயக்கியதற்காகவே அவரை ஆரத்தழுவி வரவேற்கலாம். அப்படியென்றால் படத்தில் எதுவும் இல்லையா, வறட்சியாக இருக்குமா? இல்லை. படமெங்கும் நாம் புன்னகைக்க, நெகிழ, அதிர்ச்சியடைய பல தருணங்கள் இருக்கின்றன. கதை நடக்கும் இடத்தின் சத்தங்களே இசையாகி காட்சிகளுடன் சேர்ந்து கதை சொல்கின்றன. படம் முடிந்து நெடு நேரத்திற்கு பெரிய தாக்கத்தையும் சிந்தனையையும் நமக்குள் உண்டாக்குகிறது டுலெட். ஈரானிய சினிமாக்களையே எத்தனை நாட்களுக்கு உதாரணம் சொல்வது, நாம் அந்த அளவுக்கு ஒரு படமெடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் செழியன்.

IT துறையின் வளர்ச்சி பிற சாதாரண எளிய பணிகளில் இருந்த மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை விவரித்துத் தொடங்கும் படம், IT ஊழியர்களின் மீதான காழ்ப்பாகவோ குற்றச்சாட்டுகளாகவோ செல்லாமல் இருப்பது மிகப்பெரும் ஆறுதல். வீடு தேடும் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் ஒவ்வொரு வகை. ஜன்னலே இல்லாத ஒரு வீடு, கறுப்பு சட்டையெல்லாம் போடாதீங்க என கண்டிக்கும் ஒரு வீட்டுக்காரர், ஒரு வீட்டை காலி செய்யும் முன்பே அந்த வீட்டை வாடகைக்குக் கேட்டுப் பார்க்க வருபவர்கள் முன்பு கூனிக்குறுகி நிற்கும் தருணம், வீட்டை வாடகைக்குக் கொடுக்க முடிவு செய்யும் முன் உரிமையாளர் செய்யும் பின்புல விசாரணை என 'டுலெட்' நம்மில் பலர் கடந்த வந்துள்ள உண்மை அனுபவங்களின் தொகுப்பு. வறட்சியான உண்மைகள் மட்டுமில்லை, கவிதையான பல காட்சிகளும் உண்டு. அப்பா சட்டையை அயர்ன் செய்யும்போது சுவற்றிலிருந்து பிய்த்து கசக்கி எறியப்பட்ட தன் ஓவிய காகிதத்தையும் அயர்ன் பண்ண சிறுவன் சித்தார்த் கொடுப்பது, வீடு தேடும்போது ஒரு வீட்டில் வயதான ஒரு தம்பதியும் மூன்று பூனைகளும் வாழ்வதைப் பார்த்து 'நம்மால் அவர்கள் வேறு இடம் தேடும் நிலை ஏற்படக்கூடாது' என அந்த வீட்டை வேண்டாம் என்று சொல்வது... இப்படி கவித்துவமான தருணங்கள் பல உண்டு.

 

tolet santhosh sreeram



சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், சிறுவன் தருண்... மூவரும் ஒரு எளிய குடும்பத்தை மிக இயல்பாகப் பிரதிபலிக்கிறார்கள். இளங்கோ என்ற உதவி இயக்குனராக, சினிமாவில் வெற்றி பெற முயலும் இளைஞராக, அதுவரை சினிமாவுக்குள்ளேயே கிடைத்த வேலையெல்லாம் செய்து செலவுக்கு பணம் ஈட்டும் குடும்பஸ்தனாக துளி விலகலுமில்லாமல் நம் முன் வாழ்கிறார் சந்தோஷ். இயலாமை, வறுமையிலும் அவ்வப்போது நடக்கும் சிறிய நகைச்சுவை என அந்தப் பாத்திரத்தின் அத்தனை உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். சந்தோஷ், தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. ஷீலா, கணவனின் இயலாமை மீது கோபம், அதே நேரம் அவனை விட்டுக்கொடுக்காத காதல் என மிக இயல்பாக நடித்திருக்கிறார். 'எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லப்பா, எனக்கு ஒரு வீடு மட்டும் வாங்கித்தா' என்று கூறி வீட்டில் என்னவெல்லாம் வேண்டுமென்று விளக்கும் இடம் கவிதை. சிறுவன் தருண், நம் புன்னகைகளுக்கு முழு பொறுப்பு. க்யூட்டாக இருக்கிறான் என்று கூறி முடித்துவிட முடியாது, நன்றாக நடித்திருக்கிறான். வீட்டு உரிமையாளராக ஆதிரா, வீடு காட்டும் நண்பராக அருள் எழிலன் ஆகியோரும் சிறப்பு.

ஒளி உட்பட எந்த வித எக்ஸ்ட்ரா விஷயங்களும் இல்லாமல் படத்தை தூய்மையாகக் கொடுத்திருக்கிறார் செழியன். அந்த சிறிய வீட்டுக்குள்தான் கிட்டத்தட்ட பாதி படம் நடக்கிறது. ஆனாலும் விதவிதமான கோணங்களால் சலிப்பு ஏற்படாமல் கொண்டுசென்றது ஒளிப்பதிவாளர் செழியனின் வெற்றி. வசனங்கள், மிக இயல்பான உரையாடல்களாக அமைந்துள்ளன. வீடு கிடைத்துவிடவேண்டும் என்று நமக்குள் உண்டாகும் பதற்றம், படம் நம்முள் உறவாடுவதை உணர்த்துகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு தொழில்நுட்ப ரீதியில் எளிமையாக, இந்தப் படத்தின் ஜீவனுக்கேற்ப இருக்கிறது. அதே நேரம் வீடு கிடைக்குமா என்ற பதற்றத்தை உருவாக்குவதிலும் பங்குவகித்துள்ளது.

சிறு வட்டத்துக்குள் சுற்றும் கதை, காட்சிகள், வீடு கிடைப்பது என்பதைத்தாண்டி முக்கிய பாத்திரங்களின் வேறு எந்த விஷயங்களும்  பெரிதாகப் பேசப்படவில்லை என்ற குறைபாடெல்லாம் வழக்கமான சினிமா படங்களை ரசிக்கும் நமக்கு ஏற்படலாம். ஆனால், 'டுலெட்' இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படம். இசை, ஆக்ஷன், திருப்பங்கள், விறுவிறுப்பு என எல்லாம் எதிர்பார்ப்பவர்கள் இதெல்லாம் படமா என்று கேட்கலாம். பொறுமையான, உண்மையான திரைப்பட அனுபவத்துக்கு திறந்த மனதோடு செல்பவர்கள் இதுதான் படம் என்று சொல்லலாம்.                                                 

 

 

 

சார்ந்த செய்திகள்