ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்லஸ் எண்டர்பிரைசஸ்'. இப்படத்தை சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்க அஜித் ஜோய் தயாரிக்கிறார். காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சுப்பிரமணியன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
ஊர்வசி பேசுகையில், "என்னை கண்டெடுத்தது தமிழ் சினிமா. என் உயிர் மூச்சு தமிழ் சினிமா. நான் நேசிக்கிற முதல் மொழி தமிழ். தமிழுடைய சகோதரி தான் எனது தாய்மொழியான மலையாளம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் படித்தவர்களுக்கு இருக்காது. தமிழ் என்ற செம்மொழியில் இருந்து வந்த பல மொழிகளில் ஒன்று மலையாளம். இன்றைக்கும் சுத்தமான தமிழ் வார்த்தை மலையாளத்தில் தான் வாழ்ந்துட்டு இருக்கு. உதாரணமாக காண்பது, உண்பது, கிடப்பது என்ற வார்த்தைகளைச் சொல்லலாம். இதெல்லாம் மலையாளத்தில் பேசப்படுவதால் ஒரு மலையாளியாக நான் சந்தோஷப்படுறேன்" என்றார்.
தொடர்ந்து படத்தைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசிய ஊர்வசி, “நட்புதான் இப்படத்தை தூக்கிப் பிடிக்கிறது” என்றார். மேலும், "நட்புக்கு மொழி இல்லை, சாதி இல்லை, ஏன் பணமே இல்லை. காதல்தான் உலகத்தில் மிகப்பெரிய விஷயம் என்று சொல்லுவோம். அது உண்மைதான். ஆனால், அதைவிட நம்முடைய கடைசி காலம் வரை சாகும் வரையில் நட்புக்குத்தான் மரியாதை என்பது இப்படத்தில் வரக்கூடிய மெசேஜ்" என்றார்.