விடுதலைப் போராட்ட வீரரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான கக்கன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை பிரபு மாணிக்கம், ரகோத் விஜய் இருவரும் இணைந்து இயக்க ஜோசப் பேபி கதை எழுதி தயாரித்து கக்கன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வெளியிட்டார்.
இப்படம் நாளை (25.08.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நன்றி தெரிவித்து எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவு பகிர்ந்திருந்தார். அதில், "உள்ளாட்சி அமைப்பின் கேளிக்கை வரி சட்டப்படி தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருப்பதைப் பயன்படுத்திக்கொள்கிற வகையில், பெருந்திரளான தமிழக மக்கள் கக்கன் திரைப்படம் வெற்றிகரமாக அமைவதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பாஜக ஆளும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. பின்பு இந்தாண்டு வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.