Skip to main content

சாவர்க்கரால் வந்த சிக்கல் - வருத்தம் தெரிவித்த சுதா கொங்கரா!

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
sudha kongara savarkkar issue

துரோகி படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். கடைசியாக சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழில் இப்படம் சூப்பர் ஹிட்டாகி 5 தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சாவர்க்கர் பற்றி பேசியிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் பேசியதாவது, “நான் வரலாறு பட்டப்படிப்பை முடித்துள்ளேன். என்னுடைய டீச்சர் ஒன்னு சொன்னாங்க. சாவர்க்கர் ஒரு பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். கல்யாணம் பண்ணிட்டு, அவரது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அந்த பெண்ணிற்கு வீட்டில் இருப்பதற்குத் தான் விருப்பம். ஏனென்றால் அந்த காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள். பின்பு அவங்க படிக்க போகும் போது, அந்த தெருவில் உள்ளவர்கள் அவர்களை அசிங்கப்படுத்தினர். அந்த அம்மா அழுது கொண்டு, ஸ்கூலுக்கு போகமாட்டேன் என சொல்வார்கள். அப்போது சாவர்க்கர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு படிக்க வைக்கச் சென்றார். இது சரியா தப்பா. அங்கிருந்து என்னுடைய கேள்விகள் எழுந்தது” என்றார். 

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சுதா கொங்கராவிற்கு எதிராக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விமர்சனம் குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்