செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் சிவசங்கர் பாபாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர் நேற்று (16.06.2021) சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
பாலியல் வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா மீது பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "ஆன்மீகம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டிருக்கும் பிசாசுகளை ஒழிக்க வேண்டும். இவர்களால், ஆன்மீகத்துக்கு இழுக்கு. நல்ல ஆன்மீகவாதிகளுக்கும் இழுக்கு. உண்மையான ஆன்மீகவாதிகள் சொல்லும் விஷயங்களுக்கு மார்க்கெட் இல்லை. பூச்சாண்டி காட்டினால், கை தட்ட காத்திருக்கும் சமூகத்தை என்ன சொல்வது?" என கூறியுள்ளார்.