சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களைக் கடந்து வழக்குகளாகவும் போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாகப் பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்தச் சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்துத் தெரிவிப்பார்கள்.
அந்த வகையில் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் பிரசன்னா இதற்குத் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதுபோல இசையமைப்பாளர் ஷால் ரோல்டன் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “ஞான முருகனை மக்கள் நாடுவது அவன் கருணையை மட்டும் வேண்டி அல்ல. அவன் அன்பில் குளிப்பதற்காக. அறிவு மட்டும் போதுமானால் எல்லோரும் ஞானியாகிவிடலாமே! அனுபவித்தால்தானே புரியும்! எல்லாம் அவனுக்குத் தெரியும். தூற்றுவார் தூற்றட்டும். விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.