இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம்.எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி.வி.எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு எம்.எஸ். பாஸ்கர் பேசுகையில், ''வெள்ளித்திரை படத்திற்கு பிறகு இனிய நண்பரான சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும் நானும் விவாதிப்போம். இதனை இயக்குநரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ் தான் எறும்பு.
இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் புகைப்படம் வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய வேடம் இது. இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. அந்த இரண்டு குழந்தைகள் வட்டி கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பு எப்படி இருந்தது என்றால்... மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே... அப்படி இருந்தது.
அந்த வகையில் ‘எறும்பு’ நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சம் யாரும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம். அப்படி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கடனை அடைப்பதற்கான வருவாயை ஆண்டவன் நமக்கு அருள வேண்டும். இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.'' என்றார்.