அறிமுக நாயகன் விஹான் ஜாலி நைடபிள் நடிப்பில், 900 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லாக் டவுன் டைரி'. படத்தின் ஹீரோவான விஹான் ஜாலி, படத்தின் இயக்குநரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஜாசி கிஃப்ட் மற்றும் ஏபி முரளி.
இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன், பெப்சி விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் முத்துக்காளை, எம்.எஸ்.பாஸ்கர், நடிகை பிரவீனா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகரன், எஸ்.முரளி மற்றும் படக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ஜாலி பாஸ்டியன் பேசுகையில், "900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம் இயக்கி இருக்கிறேன். 2வது படமாக லாக் டவுன் டைரி என்ற படத்தை தமிழில் இயக்கி உள்ளேன். கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில் மக்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்குச் சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அதையெல்லாம் ஆராய்ச்சி செய்து தொகுத்திருப்பதுடன், இளம் காதல் ஜோடி ஒன்று இந்த இக்கட்டான நேரத்தில் சிக்கி எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து லாக் டவுன் டைரி படம் உருவாகியிருக்கிறது" என்றார்.
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியதாவது, "ஜாலி மாஸ்டர் என்னை அழைத்து நீங்க எப்படி வேண்டுமென்றாலும் பேசி நடிங்க என்று சுதந்திரம் தந்தார். ஹீரோவின் வளர்ப்பு தந்தையாக மெக்கானிக் ஷெட் ஓனராக என்னை நடிக்க வைத்திருக்கிறார். நல்ல கதை அம்சம் கொண்ட படம். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி எல்லாம் இதில் உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டிக்கொள்கிறேன்" என்றார்.