சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் பொங்கலை முன்னிட்டு வரும் (நாளை) 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் வில்லனாக நடித்த ஜெகபதி பாபு அஜித் குறித்தும், பட அனுபவம் குறித்தும் பேசியபோது....
"அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான் என்ன சொல்ல முடியும்...? அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர். மக்களுக்கு பல நல்ல விஷயங்களை நிறைய செய்திருக்கிறார். மற்ற நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது அஜித் சார் போன்ற ஒரு நடிகர், அவர் ரசிகர்களிடம் இருந்து பெறும் மரியாதை மற்றும் ஆராதனைக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். 'விஸ்வாசம்' படத்தில் ஹீரோ, வில்லன் என இருவருமே "சால்ட் 'என்' பெப்பர்" தோற்றத்தில் தோன்றுவதால், ஆரம்பத்தில் இருந்து நேர்மறையாக அதை உணர்ந்தேன். அஜித்தை ரசிகர்கள் அத்தகைய நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் மாஸ் மற்றும் கிளாஸ் என ஒரு கலவையை கொண்டிருக்கும். குறிப்பாக மாஸ் காட்சிகளை, அவரது அலப்பறையை, அப்பாவிதனத்தை அவருடைய ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் நன்றாக அனுபவிப்பார்கள். உண்மையில், என்னுடைய சிந்தனையுடன் அந்த கதாப்பாத்திரம் ஒத்துப் போனதால், அவரது கதாபாத்திரத்தை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன்.
குறிப்பாக இந்த படத்தில் ஹீரோ, வில்லன் மோதல் மிக முக்கியமாக, அவர்களின் வித்தியாசமான, வேறுபட்ட சிந்தனைகளால் நடப்பது தான். நான் என்ன நினைக்கிறேனோ, என்ன செய்கிறேனோ அது தான் சரி என நம்புகிறவன் நான். அதனால் தான் "என் கதையில நான் ஹீரோ டா" என்று வசனம் பேசுகிறேன். சிவா மிகவும் இனிமையானவர், அவரது புன்னகை எப்போதும் உண்மையானது. சில சமயங்களில், அவர் உணர்வுகளை தனக்குள்ளே மறைத்துவிட்டு வெளியில் பாஸிட்டிவாக நடந்துகொள்கிறாரா என நான் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறேன். இருப்பினும், அவரது மனது மிகவும் தூய்மையானது. அது தான் அவர் செய்யும் படங்களில் பிரதிபலிக்கிறது. நயன்தாரா ஒரு அழகிய பெண், எப்போதும் எளிமையாக இருப்பவர். எனக்கு 'விஸ்வாசம்' அணியுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வேலை செய்யும் வாய்ப்பு வந்தால் நான் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்வேன். இந்த குழுவில் உள்ள எல்லோரும், நேர்மறையான, தூய்மையான, நல்ல இயல்பை பகிர்ந்து கொள்கிறார்கள். சத்யஜோதி ஃபிலிம்ஸ் எல்லோரையும் சமமாக மதிக்கின்ற, தொழில்முறை தயாரிப்பாளர். என் தந்தை தயாரிப்பாளராக இருந்த நாட்களிலிருந்தே அவர்கள் புகழ்பெற்ற பிராண்ட் என்று நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் என்னை அன்போடும், பாசத்தோடும் நடத்தியது அவர்கள் மீதான மரியாதையை மேலும் அதிகரித்தது" என்றார்.