என்னுடைய ஈருருளிக்குப் பொருத்தமான பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது வண்டியின் முகப்பிலும் பின்புறத்து எண்பலகையிலும் ஏதேனும் விருப்பமான சொற்றொடர்களை எழுதிக்கொள்வது வழக்கமாக இருந்தது. இன்றைக்கும் அவ்வழக்கம் தணிந்துவிடவில்லை. வாங்கிய புதிதில் என்னுடைய பல்சர் ஈருருளி நன்கு பாய்ந்து சென்றது. அந்தப் பாய்ச்சலுக்குப் பொருத்தமான பெயரைத் தலைவிளக்கின் முகப்பில் எழுதவேண்டும் என்று நினைத்தேன்.
வண்டிக்கு எண் ஒட்டச் சென்றபோது கடைத்தம்பியே முன்வந்து முன்னும் பின்னும் எழுதி ஒட்டவேண்டிய சொற்றொடர்களைக் கூறுமாறு கேட்டான். “புலிப்பறழ்” என்று தலைவிளக்கில் ஒட்டுமாறு கூறினேன். தம்பி என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான்.
“புலிப்பறழா… என்ன சார் அது ?” என்று விழித்தான்.
“புலிப்பறழ்னா புலிக்குட்டிப்பா” என்று சொன்னேன்.
“புலிக்குட்டின்னே எழுதலாம்ல… என்ன அது பறழ்னு ?” என்றான்.
“தமிழ் மரபின்படி ஒவ்வொரு விலங்கினத்தின் இளமைக்கும் தனித்தனிப் பெயர்கள் இருக்குப்பா… அதன்படி புலியின் குட்டியைப் பறழ் என்று சொல்லணும். யானை, எருமையைக் கன்றுன்னு சொல்லணும். சிங்கத்தைக் குருளைன்னு சொல்லணும். புலியைப் பறழ்னு சொல்லணும்….” என்றேன்.
தம்பி மகிழ்ச்சியாகிவிட்டான். மிகுந்த விருப்போடு அவ்வெழுத்துகளைச் செதுக்கி ஒட்டித்தந்தான். அன்று தொட்டு அப்பெயரைக் காண்போர் ஒவ்வொருவரிடமும் அவ்விளக்கத்தைத் தொடர்ந்து கூறி வருகிறேன். அப்பெயர் விளக்கத்தைக் கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள். நானும் அப்பெயரின்கண் மயக்குற்றவனாகி அண்மையில் வெளிவந்த என் கவிதைத் தொகுப்புக்குப் “புலிப்பறழ்” என்றே தலைப்பிட்டேன். நிற்க.
தமிழில் ஒவ்வோர் உயிரின் இளமைக்கும் தனித்தனியான பெயர்கள் இருக்கின்றன. விலங்கினங்களின் தவழும் நிலையிலான இளமையைத் தனித்துக் குறிக்கும் அப்பெயர்கள் குழவிப்பெயர்கள் எனப்படும். மரஞ்செடிகொடிகளுக்கும் அத்தகைய இளமையைக் குறிக்கும் தனிப்பெயர்கள் இருக்கின்றன. தென்னை மரம் சிறிதாக இருக்கையில் அதனை மரம் என்று சொல்ல முடியுமா ? கன்று என்று சொல்ல வேண்டும். தென்னங்கன்று என்று சொல்கிறோம். தென்னங்கன்றினைத்தான் வாங்கி வந்து நட முடியும். தென்னை மரத்தை வாங்கி வந்து நடமுடியுமா ? அதனால்தான் தென்னங்கன்று, தென்னம்பிள்ளை என்று வழங்கிறோம். தென்னை, வாழையின் இளமைப்பெயர் கன்று என்றால் நெல்லம் பயிரின் இளமைப்பெயர் நாற்று.
தொல்காப்பியத்தில் இளமைப் பெயர்கள் குறித்துத் தெளிவான வரையறை இருக்கிறது.
மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்
றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே.
என்கிறது அந்நூற்பா. பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்கின்ற ஒன்பது பெயர்களும் இளமைப் பெயர்கள் என்று அந்நூற்பா வரையறுக்கிறது. ஒவ்வொன்றையும் பார்ப்போம்.
பார்ப்பு என்பது பொதுவாக மரக்கிளைகளில் தொற்றியும் உறங்கியும் வாழும் உயிரினங்களின் இளமையைக் குறிக்கும். “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” என்கிறது நூற்பா. கிளையில் தவழ்வனவற்றின் கிளையமர்ந்து பறப்பனவற்றின் இளமைக்குப் பார்ப்பு என்று சொல்லலாமாம். குரங்குப் பார்ப்பு. கிளிப் பிள்ளை.
நாய், பன்றி, புலி, முயல், நரி ஆகியவை பறழ் எனப்படும். இவற்றில் நரி தவிர்த்து மீதமுள்ள நான்கினையும் குருளை என்றும் கூறலாம். கீரி, காட்டுப்பூனை, எலி, அணில் ஆகிய நான்கும் குட்டிக்குரியவையாய் இருந்து பிறகு பறழென்றும் வழங்கப்பட்டன. மேற்சொன்னவற்றில் நாய்தவிர்த்து அனைத்தையும் பிள்ளை என்றும் சொல்லலாம் என்கிறது தொல்காப்பியம். அதனால்தான் கீரிப்பிள்ளை, அணிற்பிள்ளை என்கிறோம்.
ஆடு, குதிரை, கலைமான், புள்ளிமான் ஆகியவற்றின் இளமைக்கு மறி என்று பெயர். அதனால்தான் ஆடுகளின் ஓரினத்திற்குச் செம்மறி என்றே பெயர் வந்தது.
குரங்கின் இளமையைப் பற்பல பெயர்களாலும் வழங்கலாம் என்கிறார் தொல்காப்பியர். மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்றும் அதற்கு மேலும் ஏதேனும் பெயராலும் வழங்கலாம் என்கிறார்.
யானை, குதிரை, காட்டு மான், கடமா, எருமை, மரை, கவரிமான், கரடி, ஒட்டகம் ஆகியவற்றின் இளமைக்குக் கன்று என்று பெயர்.
குழவி, மகவு ஆகிய இரண்டும் மட்டுமே மக்களுக்குரிய குழந்தைப் பெயர்கள்.. பிற்காலத்தில் பிள்ளை என்ற சொல்லும் மக்களுக்குரியதாயிற்று.
இங்கே சொல்லப்படாதவற்றில் ஒன்றுக்குரியவை இன்னொன்றுக்கும் வழங்கப்படும். சிங்கத்தைப் புலியைப்போல் கருதலாம். கழுதையை மறி என்றும் சிங்கத்தைக் குருளை என்றும் வழங்க வேண்டும். உடும்பு, ஓந்தி, பல்லி ஆகியவற்றை அணிற்குரிய சொற்களால் வழங்கலாம்.
முந்தைய பகுதி:
தென்னை இலையா? தென்னை ஓலையா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 17
அடுத்த பகுதி:
ஆயுள் எந்த மொழிச்சொல் தெரியுமா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 19