Skip to main content

கடலூர் மாவட்டத்தில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
Sudden rain in Cuddalore district; People are happy

கடலூர் மாவட்டத்தில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடைவெயில் வாட்டி வந்தது.100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பகலில் வெளியே வர சிரமப்பட்டனர். பலர் குடை பிடித்தபடி வெளியே சென்று வந்தனர். கடும் வெயிலால் மாவட்ட மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி  நேற்று கடலூர் மாவட்டத்தில் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர்,நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நடுவீரப்பட்டு, சிதம்பரம், குமராட்சி, வடலூர், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலையில்  பலத்த மழை பெய்தது. கடலூரில் சாலைகளில் மழை தண்ணீர் ஆறு போல ஓடியது.

விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லேசாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்று அடித்தது. விருத்தாசலம் சாவடிகுப்பம் 33 வது வார்டு பகுதியில் மின் கம்பம் விழுந்ததில் பாஸ்கர் என்பவரின் 9 மாத சினை பசு உயிரிழந்தது. சிதம்பரம் அருகே உள்ள கிழக்கு பின்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் உதயகுமார். புதன்கிழமை வீட்டில் இருந்து அவரது இருசக்கர வாகனத்தில் பின்னத்தூர் கடை வீதிக்கு வந்து  கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று அடித்தது லேசாக மழை பெய்தது. அதில் சாலையில் இருந்த தென்னை மரம் முறிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சார்ந்த செய்திகள்