Skip to main content

தீவட்டிப்பட்டி சம்பவம்; விசிக போராட்டம்

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
The deevattipatti incident; vck struggle

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது கோவிலுக்குள் ஒரு தரப்பினர் நுழைய அனுமதி மறுத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக திருவிழாவானது நிறுத்தப்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வட்டாட்சியர்  தலைமையில் இரு தரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை உடன்படாத நிலை உருவானது. இந்நிலையில், கோவிலுக்கு அருகில் உள்ள கடையில் ஒரு தரப்பு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தனர். அன்று மாலையே சிறுவர்கள், பெண்களை போலீசார் தாக்கியதாக விசிக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை வழங்கக் கோரி கோட்டை மைதானத்தில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  வழிபாட்டு உரிமையை மீட்க  முயன்ற பட்டியலினத்தவர் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாகவும் விசிக குற்றச்சாட்டு வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

சார்ந்த செய்திகள்