Skip to main content

”குற்றப்பரம்பரை சட்டத்தில் இந்த இரண்டு சாதிகளும் இருந்தன” - பின்னணி விளக்கும் ரத்னகுமார் 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

writer rathnakumar

 

 

"வேப்பூர் பறையர்கள் ஏன் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள்? திருச்சி துறையூருக்கு அருகே வேப்பூர் என்ற ஊர் உள்ளது. அங்கு எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் உள்ளனர். பெரும்பாலும் காவல் காக்கும் வேலையை அவர்கள் செய்துவந்துள்ளார்கள். போர்க்காலத்தில் படையில் சேர்ந்து சண்டை செய்வார்கள். போர் இல்லாத சமயத்தில் அந்த ஊர் பகுதியில் காவல் காத்து அங்குள்ள மக்களிடம் பணம் வாங்கிக்கொள்வார்கள். அந்தப் பகுதியெல்லாம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலிருந்தது. அவர்கள் வெள்ளைக்காரனை எதிர்த்துத்தான் சண்டை போட்டிருக்கிறார்கள். பிரெஞ்சின் தலைமையாக இருந்த துறையூர் ரெட்டியார் படையில் கூட பறையர் சமூக மக்கள் இருந்துள்ளார்கள். இது கி.பி 1758 காலகட்டத்தையொட்டி நடந்தது. 

 

குற்றப்பரம்பரைச் சட்டம் கி.பி 1856-ல் கொண்டுவரப்படுகிறது. வரலாற்றில் யார் யாரெல்லாம் நமக்கு எதிரிகளாக இருந்துள்ளார்கள் என்று பார்த்த வெள்ளைக்காரன், அவர்கள் அனைவரையும் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கிறான். பூலித்தேவன், வேலுநாச்சியார் எந்தச் சமூகம் என்று பார்த்து அந்தச் சமூக மக்களை அந்தச் சட்டத்தில் சேர்க்கிறான். வீரபாண்டிய கட்டபொம்மன் எந்தச் சமூகம் என்று பார்த்து அந்தச் சமூக மக்களையும் அந்தப் பட்டியலில் சேர்க்கிறான். காவல் தொழில் செய்து போர்க் காலத்தில் பிரெஞ்சு படையில் இணைந்து பிரிட்டிஷை எதிர்த்து சண்டை செய்ததால் வேப்பூர் பறையர் மக்களும் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.

 

குற்றப்பரம்பரை சட்டத்தில் 89 சாதிகளின் இருந்தன. அந்த 89 சாதிகளில் ஒன்றாக வேப்பூர் பறையர் சாதியும் உள்ளது. தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலிருந்த பறையர் சமூக மக்களும் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இதேமுறையில்தான் சில இடங்களிலிருந்த வன்னியர்களும் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்".