Skip to main content

தொடர்ந்து ஒலிக்கும் நக்கீரன் அலுவலகத் தொலைபேசி!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

ஒரு இடைவேளைக்குப் பிறகு இன்று நக்கீரன் அலுவலகத்தின் தொலைபேசி தொடர்ந்து ஒலிக்கிறது, மின்னஞ்சல்பெட்டி நிறைந்துள்ளது. தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரும் நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவை குறிப்பிட்டுப் பேசுகின்றனர்; பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்று இன்று உலகுக்குத் தெரியவந்திருக்கும் கொடூரத்தை திரும்பிப்பார்க்க வைத்ததில் நக்கீரனின் பங்கை பாராட்டுகின்றனர்; அந்தப் பாவிகளுக்கு என்ன தண்டனை வழங்கவேண்டுமென்று கொந்தளிக்கின்றனர்; அரசியலும் அதிகாரமும் சேர்ந்து முந்தைய பல வழக்குகளைப் போல இதையும் விட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றனர்; நக்கீரன் இந்தப் பிரச்சனையை விட்டுவிடக் கூடாதென்று கேட்டுக்கொள்கின்றனர்.

பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடந்து, ஒரு தைரியமான பெண்ணின் புகாரால் வெளிவந்திருக்கும் இந்தக் கொடுமை அமைதியாகக் கடந்து போய்விடப்படும் அபாயம் இருந்தது. இதில் தொடர்புடைய முக்கிய அரசியல் புள்ளிகளின் உறவுகள் தப்பிக்க, மேல் அடுக்கில் இருந்த சில குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மட்டும்தான் குற்றவாளிகள் என்பதுபோல் காட்டுகிறது காவல்துறை. அவர்களுக்குப் பின் இருப்பவர்கள் பெயர் உச்சரிக்கப்படாமலேயே இருந்தது. நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இந்தக்  கொடூரத்தில் இருக்கக்கூடிய தொடர்பு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். நம்மை தொலைபேசியில் அழைத்த சிலர் அதையும் குறிப்பிட்டு வாழ்த்துகின்றனர். இன்னும் சிலர், இந்தக் குற்றத்தில் இன்னும் பலருக்குத் தொடர்புள்ளது என்றும் பல கோடி ரூபாய் பணம் சார்ந்த விஷயமாக இது நடைபெற்றுள்ளது என்றும் தகவல்களைத் தருகின்றனர்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்குக் கொண்டு செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவருக்குப் பின் இருக்கும் பெரும்புள்ளிகளை வெளிக்கொண்டுவரவும் நிர்மலாதேவியின் உயிருக்கு இருக்கும் ஆபத்தை உலகுக்குத் தெரியப்படுத்துவதில் நக்கீரன் காட்டிய வேகமும் அதனால் எதிர்கொண்டதும் அனைவரும் அறிந்ததே. இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் உண்மைகளைப் பேசினால், பல பெருந்தலைகள் இந்தப் பிரச்சனையில் உருளலாம்.

நக்கீரனின் இந்த வீடியோவின் வீச்சு, சமூக ஊடகங்களில் இந்தக் கொடுஞ்செயலுகெதிரான தீயைப் பற்றவைத்துள்ளது. பிரபலங்களை இது குறித்துப் பேச வைத்துள்ளது. மதியம் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய அரசு, மாலை சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஆலோசிக்கிறது. இன்னொரு புறம் இந்த வழக்குக்குப் பொறுப்பான கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், 'இந்த வழக்கில் அரசியல் பின்புலம் எதுவும் இல்லை, வெறும் நான்கு வீடியோக்கள் மட்டுமே கிடைத்துள்ளது' என்று உறுதியாகக் கூறுகிறார். பாண்டியராஜன், திருப்பூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு பெண்ணை முரட்டுத் தனமாகத் தாக்கி ஆள்வோரின் அபிமானத்தைப் பெற்றவர். சமீப ஆண்டுகளில் தமிழகத்தின் கல்லூரி மாணவிகளும் இளம் பெண்களும் எதிர்கொண்டு வரும் இத்தகைய புதிய வகை அச்சுறுத்தல்கள், கொடுமைகளின் பின்னணியில் உள்ளவர்களின் முகத்தை நக்கீரன் உலகுக்குக் காட்டும். இதற்குக் கிடைக்கும் வாசகர்களின் ஆதரவு மட்டுமே நக்கீரனின் பலம்.

support@nakkheeran.in   

 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.