Skip to main content

நூற்றாண்டு விழா கொண்டாடுவீர்களா? ஏக்கத்துடன் கேட்கும் தொழுதூர் அணைக்கட்டு!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018


 

வெள்ளாறு சேலம் மாவட்டம் ஏற்க்காடு மலையில் உற்பத்தியாகி 280 கிலோமீட்டர் தூரம் கடந்து பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆறு மூலம் சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பாசனம் குடிநீர் வழங்கி மக்களை வாழவைக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே அணைகளே கிடையாது. 1916-ல் முதல் அணையாக தொழுதூர் அருகே 16 கதவுகள் கொண்ட அணைக்கட்டு கட்ட ஆரம்பித்து 1918ல் பயன்பாட்டுக்கு வந்தது. 

 

 

 

பெலாந்துறை, சேத்தியாதோப்பு, பாக்கம்பாடி, ஆணை மடுவு போன்ற இடங்களில் அணை கட்டப்பட்டன. ஆனால் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் அணை. இந்த அணையின் மூலம் தேக்கப்படம் தண்ணீர் 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதிகள் கொண்ட வெலிங்டன் ஏறி அதன் மூலம் துணை ஏறிகளுக்கும், தொண்டி புறம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒகளுர், அத்தியூர், சீகூர் ஆகிய ஏறிகளுக்கு சென்று விவசாயத்திற்கு உதவுகிறது.
 

100 ஆண்டுகள் பழமையான இந்த அணைக்கட்டு மூலம் நீர் பாசனம் பெற்று வருவது ஒரு பக்கம் இருந்தாலும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை மீது சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் சாலையாகவும் பயன்பாட்டு வாகன போக்குவரத்தும் நடந்துள்ளது. இப்படி மக்கள் பயன்பாட்டுக்கும், வாழ்வாதாரத்திற்கும் மிகவும் பயன்பட்ட இந்த அணையின் வயது 100. இதை ஒரு விழாவாக கொண்டாடலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 

 

 

பெருமுளை விவசாயி தனபால் நம்மிடம் கூறும்போது, உண்மைதான். நூற்றாண்டு விழாவை அரசே கொண்டாட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி நாங்களே விழா எடுக்கும் முயற்சியில் உள்ளோம். தொழுதூர் அணைக்கட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கம்பீரமாக நிற்கும் இந்த அணையை பாதுகாக்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரமே அதை நம்பிதான் உள்ளது என்றார்.

 

 

 

இது பற்றி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சண்முகத்திடம் கேட்டோம். உண்மைதான் பழமையான அணை, இதன் வயது 100. இதன் பலம் எப்படி உள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து அணையின் வலிமையை மேலும் அதிகரிக்க அணையில் உள் - வெளிப்புறங்களில் கான்கிரீட் தளம் உட்பட அணையினை சுமார் ரூபாய் 6 கோடி செலவில் சீர் செய்து வருகிறோம். 100 ஆண்டுகளை நினைவுபடுத்தும் வகையில் அணையின் முகப்பில் பெரிய நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் 100 ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்கிறார் பொறியாளர் சண்முகம்.