Skip to main content

"தரையில் தவழ்ந்து பதவி வாங்கும் போது சின்னம்மாவிடம் இந்த பஞ்ச் டயலாக்கை கூறியிருக்கலாமே.."!! - தேனி கர்ணன் கேள்வி

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

hk


சேலத்தில் சசிகலா தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி,  "அதிமுகவில் சசிகலா என்ற பேச்சுக்கே இடமில்லை, வீட்டில் சும்மா இருக்க முடியாமல் அங்கே இங்கே அவர்கள் செல்கிறார்கள், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது, சூரியனைப் பார்த்து... உங்களுக்கே புரியும், நான் சொல்லத் தேவையில்லை" என்று காட்டமாகப் பதிலளித்தார்.

 

இவரின் இந்த கருத்துக்குக் கட்சி கடந்து பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாகப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எந்த பதவியிலிருந்தாலும் நிதானம் குறையாமல் மரியாதையாகப் பேச வேண்டும் என்று மறைமுகமாக எடப்பாடிக்குக் குட்டு வைத்தார். இந்நிலையில் இது தொடர்பாக சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்..

 

சசிகலா தொடர்பான நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு...

 

"அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் எதையும் நிதானமாகப் பேசக்கூடியவர், டிடிவி கூறியது போல் யோசித்துத்தான் பேசுவார், அதிமுகவில் எடப்பாடி, அண்ணன் ஓபிஎஸ் இணைப்புக்குப் பிறகு பழைய மாதிரியே பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த இணைப்புக்குப் பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலாவது அதிமுக வெற்றி பெற்றுள்ளதா, அனைத்து தேர்தலிலும் தோல்வியே கிடைத்தது, 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் படுதோல்வி, தேனியில் மட்டும் அண்ணன் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் வெற்றி பெற்றார். இந்த இரட்டை தலைமை என்பது ஒரு தோல்வி பாதை என்பதை அதிமுக பலமுறை உணர்ந்துள்ளது. இந்த இரண்டை தலைமையைக் கட்சித் தொண்டர்கள் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அப்பட்டமான உண்மை, இதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அவ்வாறு மறுத்தால் அவர்கள் ஆதாயத்துக்காகப் பொய் கூறுகிறார்கள் என்று பொருளே அன்றி அதைத்தவிர வேறு எதுவுமில்லை.

 

சட்டமன்ற தேர்தலைப் பார்த்தீர்கள் என்றால், திமுகவை விரும்பாத மக்கள் கூட அந்த கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம், கட்சியின் தலைமை சரியில்லை, தொண்டர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள், அதைச் சரிசெய்யத் தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை, அதன் வெளிப்பாடே தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கிறது. அதனால் தான் கடந்த கால தேர்தலில் கட்சியின் வியூகம் சரியில்லை என்று அண்ணன் ஓபிஎஸ் தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கிறார். அதனால் தான் அண்ணன் ஓபிஎஸ் செல்லும் இடங்களில் சின்னம்மாவைக் கட்சியில் சேருங்கள், தலைமை ஒரு உத்தரவு போட்டால் கடைசி தொண்டன் வரை கேட்கும் வகையில் அப்போதுதான் கட்சி நல்ல வழியில் செல்லும் என்று அவரிடம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

 

இன்றைக்குச் செய்தியாளர்கள் சின்னம்மா தொடர்பாக எடப்பாடியிடம் கேள்வி கேட்டால், அவரிடம் தவழ்ந்து தவழ்ந்து பதவி பெற்ற அவர், சூரியனைப் பார்த்து ஏதோ ஒன்று... நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார், எடப்பாடியின் இந்த பேச்சை அவரின் சமூகம் சார்ந்த மக்களே மன்னிக்க மாட்டார்கள், அவர்கள் உழைப்பாளிகள், இவரின் பேச்சை மதிக்கமாட்டார்கள். எடப்பாடி நிச்சயம் இதற்கெல்லாம் வருத்தப்படுவார், அதற்கான காலநேரம் விரைவில் வரும்" என்றார்.