Skip to main content

பந்திப்பூர் காட்டில் ரஜினி! விமானத்தில் கோளாறு; முட்கள் குத்தி காயம்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020
r

 

பந்திப்பூர் காட்டில் ஒரு நாள் பயணம் சென்று திரும்பியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.   ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்கிற உலகப்புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிக்காக இந்த பயணத்தை மேற்கொண்டார் ரஜினி.

 

’காடும் மனிதனும்’ என்கிற இந்த டிவி நிகழ்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் காடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வருகிறது.   அமெரிக்க அதிபராக இருந்தபோது ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, ஹாலிவுட் நடிகைகள் கேத்தே வின்ஸ்லெட், ஜூலியா ராபர்ட்ஸ், லீனா ஹெட்டே உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

 

ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்காக பந்திப்பூர் காட்டில் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.   உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் ஒரே காட்டுப் பகுதி எ பந்திப்பூர்தான்.  இங்கு 382 புலிகள் வரை இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  கர்நாடகம், கேரளம், தமிழகம் என மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது இந்த பந்திப்பூர் காடுகள்.   காட்டின் பெரும்பான்மை பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குள் வருவதால் பந்திப்பூர் காடுகள் கர்நாடக காடு என்றே கூறப்படுகிறது.  நாகர்ஹோல், முதுமலை, சத்தியமங்கலம், வயநாடு என பல காடுகளை அருகருகே எல்லைகளாக பெற்றுள்ளது பந்திப்பூர் காடுகள்.

 

r

 

இந்த காட்டில் ரஜினிகாந்த் 6 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றார்.  பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர் பியர் கிரில்ஸ் எனும் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  படப்பிடிப்புக்காக நேற்று முன் தினமே ரஜினிகாந்த் மைசூர் சென்றுவிட்டார்.  மைசூர் செல்வதற்கு முதலில் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.  இதனால் சென்னையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.  இதன் பின்னர் மீண்டும் வேறொரு விமானத்தில் மைசூருக்கு சென்றார் ரஜினிகாந்த்.

 

படப்பிடிப்பின் போது ரஜினிக்கு காட்டில் முட்கள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது.  படப்பிடிப்பு முடிந்ததும் நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி.