Skip to main content

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சர்வதேச மோசடி!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018


dr.annamalai-டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், Ph.D.,
ஆஸ்திரேலியா

உலகிலேயே மிக அதிகமாக வெறுக்கப்படும் நிறுவனம்' அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம்தான். 2004-ல் அனில் அகர்வால் சாம்பியா நாட்டில் உள்ள, கே.சி.எம். (KCM - Konkola Copper Mines) எனப்படும் கொங்கோலா தாமிரச் சுரங்கத்தை ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்திடமிருந்து வாங்கினார். அன்றிலிருந்து, எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து, மக்களுக்கு கொடும் நோயைக் கொடுத்து, தாமிரத்தைக் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கொடூர நிறுவனம் வேதாந்தா ரிசோர்சஸ். இந்த நிறுவனத்தின் 61.9% பங்குகளை அனில் அகர்வாலும் அவருடைய குடும்பத்தினரும் வைத்திருப்பதனால், வேதாந்தா ரிசோர்சஸ் ஒரு பங்குச் சந்தை பொது நிறுவனமாக இருந்தாலும், அகர்வாலின் சொந்த நிறுவனமாகிறது. எந்தப் பங்குதாரரும் இவரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. அதேபோல், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் அகர்வாலும் அவருடைய குடும்பத்தினருமே பொறுப்பாவார்கள்.

sterlite

நதியில் உலோக விஷத்தை கலந்த வேதாந்தா

கே.சி.எம். நிறுவனம் அனில் அகர்வாலின் கட்டுப்பாட்டிற்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலேயே தாமிரக் கழிவு விஷம் நிரம்பிய தண்ணீரை காஃப்யூ நதியில் திறந்து விட்டார்கள். 2006-ல், இரண்டுநாள் முழுக்க விஷத் தண்ணீர் ஆற்றில் கலந்ததால், தெள்ளத் தெளிவாக ஓடிக் கொண்டிருந்த காஃப்யூ நதி நீல நிறமாக, விஷமாக மாறியது. ஆற்று மீன்கள் செத்து மிதந்தன. சாம்பிய மக்கள் தொகையில் 50 விழுக்காடு மக்கள் காஃப்யூ நதி தீரத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய விவசாயத்திற்கு அவர்கள் காஃப்யூ நதி நீரையே நம்பியுள்ளனர். அவர்களின் குடிநீரும் காஃப்யூ ஆற்று நீர்தான். இவற்றையெல்லாம் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் கே.சி.எம். நிறுவனம் தாமிர விஷக் கழிவு நீரை ஆற்றில் திறந்துவிட்டது. காஃப்யூ ஆற்று நீர் விஷமானது. சுற்றுப்புறச் சூழல் மட்டுமல்லாமல் மனித உரிமை மீறல் குற்றத்தையும் சேர்ந்தே வேதாந்தா ரிசோர்சஸ் செய்தது.

மக்கள் கடும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்கள். ஆலைக்கு அருகில் வாழ்ந்த மக்கள் இன்னும் கடும் பாதிப்பிற்கு ஆளானார்கள். சாம்பிய அரசாங்கம் வேதாந்தாவின் மீது குற்றம் சுமத்தியது. ஆனால், வேதாந்தா வழக்கம்போல் அதனை மறுத்தது. சர்வதேச நிறுவனங்கள் ஆய்வை மேற்கொண்டு வேதாந்தா ரிசோர்சசின் மீதே குற்றம் சாட்டின. வேதாந்தாவோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு தொடர்ந்து தன்னுடைய நாசகாரச் செயல்களைச் செய்து வந்தது. இக்கொடுமைகள் வேதாந்தாவில் முதலீடு செய்திருந்த மாபெரும் நிதி நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

sterlite

நார்வே அரசு ஓய்வூதிய நிதியம்

நார்வே நாட்டு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியம் (Norway Government Pension Fund)உலகில் உள்ள பல பெரும் நிறுவனங்களில் மூலதனம் செய்கிறது. இந்நிதியத்தில் உள்ள நிதி 63 லட்சம் கோடி ரூபாய். வேதாந்தா ரிசோர்சசிலும் நார்வே அரசு ஓய்வூதிய நிதியம் முதலீடு செய்திருந்தது. வேதாந்தாவின் செயல்பாடுகள் நார்வே அரசின் “தொழில் நெறிமுறைக் குழுவின்’’ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. 2007-ல் நடத்தப்பட்ட ஆய்வில், தொழில் நெறிமுறைகளைக் கிஞ்சிற்றும் கடைப்பிடிக்காமலும், மனித உரிமைகளை மிதித்தும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளை, குறிப்பாக நிலத்தடி நீர், ஆற்று நீர் ஆகியவற்றை உயிரினங்களின் பயன்பாட்டிற்குத் தகுதியில்லாத வகையில் தொடர்ந்து மாசுபடுத்தி வருவதால், வேதாந்தா ரிசோர்சசில் முதலீடு செய்வது முறையற்றது என்று அறிவித்தது.

இப்பரிந்துரையை ஏற்று, நார்வே நாட்டு நிதி அமைச்சகம் வேதாந்தா ரிசோர்சசை கருப்புப் பட்டியலில் சேர்த்தது. அதனால், நார்வே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியம், 2007-ல் வேதாந்தா ரிசோர்சசில் முதலீடு செய்திருந்த தன்னுடைய மூலதனம் அனைத்தையும் திரும்பப் பெற்றது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தடையை நார்வே அரசின் நிதியமைச்சகம் இன்றுவரை நீடித்தே வருகிறது.

2016ஆம் ஆண்டு நார்வே தொழில் நெறிக்குழு தன் அறிக்கையில் வேதாந்தாவைக் கடுமையாக சாடியது. தன்னுடைய அறிக்கையின் பக்கம் 12-ல் எழுதியுள்ள கருத்து அருகே உள்ள படத்தில் சிவப்பு வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

sterlite

தமிழாக்கம்: “2016ஆம் ஆண்டு தொழில்நெறிக் குழுமம் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை முழுமையாக ஆராய்ந்தது. இவ்வாய்வின் முடிவில், 2007-ல் என்னென்ன காரணங்களுக்காக இந்நிறுவனம் ஒதுக்கி வைக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் தொடர்வதால், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஒதுக்கி வைக்கவே முடிவு செய்துள்ளது’.

இந்த அறிக்கையினைத் தொடர்ந்து, நார்வே தொழில் நெறிக் குழுமத்தின் தலைவர் ஜான் ஆண்டர்சன், 2017ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி, வேதாந்தாவின் தலைமை அதிகாரி டாம் அல்பனீசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், “"வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம், ஸ்டெர்லைட் காப்பர் (தூத்துக்குடி), பாரத் அலுமினியம் கம்பெனி, லாஞ்சிகார் அலுமினா, கொங்கொலா தாமிரச் சுரங்கம் (சாம்பியா) ஆகிய நிறுவனங்களில் தொடர்ந்து திட்டமிட்ட மனித உரிமை மீறலும், சுற்றுப்புறச் சூழல் கேட்டையும் விளைவித்து வருவதால், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தில் மூலதனம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

நார்வே நாட்டில் உள்ள மற்றொரு செல்வச் செழிப்பான நிதியம் நார்வே ஆயில் நிதியம். இந்த நிதியத்தில் இருந்த பணம், 2014 ஆம் ஆண்டு மதிப்பின்படி 56 லட்சத்து 70,000 கோடி ரூபாய். மேலே குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக இந்நிறுவனமும் தன்னுடைய மூலதனத்தை வேதாந்தாவில் இருந்து விலக்கிக் கொண்டது.

sterlite

இங்கிலாந்தும் அதிருப்தி!

இங்கிலாந்தில் உள்ள சர்ச் ஆஃப் இங்லேண்ட், வேதாந்தாவில் பெரும் முதலீடு செய்திருந்தது. ஆக்சன் எய்டு இன்டர்னேஷனல் (Action Aid International)  என்கிற தொண்டு நிறுவனம் ஏழ்மைக்கும் அநீதிக்கும் எதிராகப் போராடி வரும் நிறுவனம். இந்நிறுவனம், சர்ச் ஆஃப் இங்லேண்ட் ஆணையர்களை சாம்பியாவிற்கு அழைத்துக் கொண்டு போய் வேதாந்தாவின் செயல்பாடுகளைக் காட்டியது. நேரில் பார்த்ததற்குப் பின்னர், சர்ச் ஆஃப் இங்லேண்டின் ஆணையர்கள், "வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் மனித உரிமைகளை மதிக்கவில்லை. இந்நிறுவனம் எதிர்காலத்திலும் மனித உரிமைகளுக்கும் தன்னுடைய நிறுவனங்கள் தொழில் செய்கிற இடங்களில் உள்ள உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குக் கொஞ்சமும் இல்லாத காரணத்தால், வேதாந்தா ரிசோர்சசில் முதலீடு செய்திருந்த 38 கோடி ரூபாய் மூலதனத்தைத் திரும்பப் பெறுகிறோம்' என்று அறிவித்து, அந்த முதலீட்டைத் திரும்பப் பெற்றது.

சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனமான ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ (Amnesty International)  நிறுவனம் வேதாந்தாவின் மனித உரிமை மீறல் குற்றங்களையும், சுற்றுப்புறச் சூழல் குற்றங்களையும் கண்டித்து ஒரு கடுமையான அறிக்கை வெளியிட்டது. அதை அடுத்து, இங்கிலாந்தில் உள்ள ரௌண்ட்ரீ ட்ரஸ்ட் என்னும் சேவை நிறுவனம் வேதாந்தாவில் தான் முதலீடு செய்திருந்த 15 கோடி ரூபாய் மூலதனத்தை 2010-ல் திரும்பப் பெற்றது. அதேபோல், மார்ல்பரோ எதிகல் ஃப்ண்ட் மற்றும் மில்ஃபீல்ட் ஹவுஸ் ஃபவுண்டேஷன் (Marlborough Ethical Fund and Millfield House Foundation) என்னும் நிறுவனம், தன்னுடைய மூலதனமான 2.5 கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றது. இவை அனைத்தும் 2010-ல் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

 

sterlite-closedsterlite

சாம்பியாவில் குடிநீர் மோசடி!

வேதாந்தா நிறுவனத்தினர் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும், தேனை விட இனிப்பாகப் பேசுவதிலும் வல்லவர்கள். ஆனால், உலகத்தில் உள்ள மோசமான அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் சாப்பிட்டு ஏப்பம் விடக்கூடிய அளவிற்கு மிக மோசமான அரசியல்வாதிகள். சாம்பியாவில் தங்கள் தாமிரச் சுரங்கத்திற்கருகே வாழும் மக்களுக்கு தங்களின் செலவிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று நீட்டி முழக்கியது வேதாந்தா. ஆனால், அதையும் சரிவரச் செய்யாமல் மக்களுக்கு நஞ்சு கலந்த தண்ணீரையே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று வழங்கியது. சர்வதேச தண்ணீர் சாட்சியம் (Water Witness International) என்கிற பொதுச் சேவை நிறுவனம், கே.சி.எம். சுரங்கத்திற்கருகே வாழும் மக்களுக்கு வழங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, 2010ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை பரிசோதித்து ஓர் அறிக்கை தயாரித்தது. அந்த அறிக்கையில் தரப்பட்ட விவரங்களின்படி, தாமிரம், கோபால்ட், ஆர்சனிக், மேங்கனீஸ், இரும்பு உள்ளிட்ட எல்லா உலோகங்களுமே, சாம்பிய தண்ணீர்த் தரக் கட்டுப்பாட்டின்படி எல்லாமே அனுமதிக்கப்பட்ட அளவிலிருந்து 5 முதல் 25 மடங்கிற்கும் மேல் அதிகமாகவே உள்ளன.

குடிநீரில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட தாமிரத்தின் அளவு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மி. கிராம். வேதாந்தா வழங்கி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் சராசரியாக 4.5 மி. கிராமும் அதிகபட்சமாக 28 மி.கிராம் தாமிரமும் இருந்துள்ளன.

மேங்கனீஸ் என்னும் உலோகம் அனுமதிக்கப்பட்ட அளவு ஒரு 0.1 மி. கிராம். ஆனால், வேதாந்தா வழங்கி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்ததோ 1.5 மி.கி. அதாவது 15 மடங்கு அதிகம்.

சாம்பியா குடிநீர்த்தரக் கட்டுப்பாட்டின்படி கே.சி.எம். நிறுவனத்தைச் சுற்றிஉள்ள குடிநீரில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட இரும்பின் அளவு, 2010-2012 வரை ஒரு மி.கிராம். 2013லிருந்து 0.25 மி. கிராம். ஆனால் சராசரியாக வேதாந்தா வழங்கிய சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் 1.5 - 2.0 மி.கிராம் இரும்பு இருந்துள்ளது.

தூத்துக்குடியின் நிலை!

vendantaஇதே போன்ற நிலையில்தான் தற்போது தூத்துக்குடி உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தாமிரக் கழிவுகளில் (Copper slag) தாமிரம், ஆர்சனிக், குரோமியம், நிக்கல், காரீயம், சிங்க் போன்ற உலோகங்கள் உள்ளன. தாமிரம் பிரித்தெடுக்கப்படும் பொழுது, மிக அதிகமாக வெளியேறும் வாயு கந்தக வாயு (Sulphur dioxide) என்று சென்ற கட்டுரையில் எழுதியிருந்தோம். இந்த கந்தக வாயு மேகத்தில் செறிவோடிருக்கும் பொழுது மழை பொழியுமானால் அந்த மழை கந்தக அமில மழையாக இருக்கும். மழைத் தண்ணீர் அமில நீராக இருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளில் உள்ள நச்சு உலோகங்கள் வேகமாகக் கரைக்கப்பட்டு நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடி நீரை விஷமாக்கும்.

உலகில் இவ்வளவு ஆய்வுகள் வேதாந்தாவின் மனித உரிமை மீறல்களைப் பற்றியும், சுற்றுப்புறச் சூழல் கேடுகளைப் பற்றியும் நடத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவின் கிரீன் கவுன்சில் அனுமதித்தது என்கிறார்கள். அதை விடக் கொடுமை நூறு கோடி ரூபாய் பணத்தை டெபாசிட்டாகப் பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர், இந்த நாசகார ஆலையைச் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பதுதான்.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த ஆணையை வழங்குவதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும். 1) நாம் இங்கே தந்திருக்கின்ற ஆய்வுத் தகவல்களையும், மக்களையும் சுற்றுப்புறச் சூழலையும் கொல்வதையே தன் குணநலன்களாகக் கொண்டிருக்கும் அனில் அகர்வால், அவர் குடும்பத்தினர், அவருடைய நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரின் செயல்பாடுகளை, வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்காமல் இருந்திருக்க வேண்டும். 2) அப்படி இந்த வாதங்களை எல்லாம் எடுத்து வைத்திருந்தும் வேதாந்தாவிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் குமாரசாமிகள் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கடமை!

தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை நீதி மன்றத்தில் நிற்காது என்று பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். தமிழக அரசிடம் ஏராளமான அறிவியல் புள்ளிவிவரங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் நிலத்தடி நீர் பிரிவு என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் பல திறமை வாய்ந்த புவியமைப்பியலாளர்களும், பொறியாளர்களும் இன்னமும் பணியாற்றி வருகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 1970களில் இருந்து தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், நிலத்தடி நீர் மாதிரிகளை ஒவ்வொரு மாதமும் சேகரித்து பரிசோதனை செய்து வைத்துள்ளனர். அந்த புள்ளிவிவரங்களின் மூலம், தூத்துக்குடியின் நிலத்தடி நீரின் தரத்தை அன்றிலிருந்து இன்றுவரை ‘வடிவமைத்தால்’  (Modelling)  தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கியதற்கு முன்னரும், பின்னரும் நிலத்தடி நீர் எந்த அளவிற்கு கெட்டுப் போயுள்ளது என்பதை அறிவியல் ரீதியாக நீதி மன்றங்களில் நிரூபிக்க முடியும். செய்வார்களா? செய்வார்களா?