Skip to main content

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் ஸ்டாலின் – நாஞ்சில் சம்பத் நம்பிக்கை!

Published on 28/08/2018 | Edited on 28/08/2018
Stalin

திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று நாஞ்சில் சம்பத்திடம் நக்கீரன் இணையதளம் கேட்டது. அதற்கு அவர் கூறியது…

 

அண்ணா உருவாக்கிய அறிவு இயக்கத்திற்கு, கலைஞருக்கு பிறகு தலைவராகியிருக்கின்ற ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஸ்டாலின் கோடி நிலாக்களுக்கு குளிர்ச்சி தருகிறவர். வியப்பின் புதல்வராக எங்கள் கண்ணுக்குத் தெரிகிறவர். 21ஆம் நூற்றாண்டின் நாசகார பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கு கனவு காணுகிற நேரத்தில் ஸ்டாலின் திமுக தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். 

 

 

 

கலைஞர் அவர்களின் மறைவுக்கு பிறகு நாடு அண்ணன் ஸ்டாலினிடத்தில் நிரம்ப எதிர்பார்க்கிறது. திமுகவில் அங்கம் பெற்றிருப்பவர்கள் எதிர்பார்க்கிற எதிர்பார்ப்பைவிட தீர்ந்துபோகாத திராவிட இயக்கத்தின் மீது தீராத காதல் உள்ளவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

 

கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று கச்சை கட்டிக்கொண்டு தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிடலாம் என்று கருதுகின்ற பயங்கரவாத சக்திகள் இந்த மண்ணில் எந்த நாளிலும் காலூன்ற முடியாது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் அண்ணன் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

 

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இந்திய துணைக் கண்டத்தில், இன்றைக்கு திமுகவின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில், இனிமேல் அந்த இடத்தை இட்டு நிரப்ப வேண்டிய வரலாற்று கடமை ஸ்டாலினுக்கு முன் காத்திருக்கிறது.

 

தமிழகத்தினுடைய உரிமைகளையெல்லாம் பட்டப்பகலில் பறிகொடுக்கக்கூடிய பாவிகளின் ஆட்சியை எப்போது விரட்டுவோம் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிற நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும் ஸ்டாலின் முன் இருக்கிறது.

nanjil sambath

ஏற்கனவே திமுக இளைஞரணி செயலாளராக பல்லாண்டு காலம் பணியாற்றியவர். மிசா என்கிற அக்னியாற்றில் குளித்தெழுந்தவர். ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சென்னை மாநகராட்சி மன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்கிற மதிப்பை பெற்றவர், அதையும் தாண்டி திமுகவின் பொருளாளர், கலைஞர் முதல் அமைச்சராக இருந்த நேரத்தில் துணை முதல் அமைச்சர் என்கிற பொறுப்புகளையெல்லாம் அலங்கரித்த அவருடைய பட்டறிவு, அவருடைய தந்தை பின்பற்றிய பகுத்தறிவு எல்லாவற்றையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுடைய கனவுகளுக்கு சிறகுகள் தயாரிக்கின்ற கடமையில் அவர் கருமமே கண்ணாக இருந்து கடமையாற்ற வேண்டும் என்று உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

திமுக என்கிற அறிவு இயக்கம் அண்ணா உருவாக்கிய ஆயிரங்காலத்து பயிருக்கு தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கின்ற தகுதி அவருக்கு தானாக வந்துவிடவில்லை. அவருடைய விலைமதிக்க முடியாத உழைப்பு அவரை அந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

 

 

 

ஒரு மிகப்பெரிய பொறுப்புக்கு வந்திருக்கிறோம் என்கிற பொறுப்புணர்வை நெஞ்சில் சுமந்துகொண்டு கழகத்தை கட்டிக்காக்கின்ற கடமை மட்டுமல்லாமல் கன்னித் தமிழகத்தை பாவிகளின் பிடியில் சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும், பட்டப் பகலை பட்டா போடுகின்ற ஈனப்பிறவிகளிடம் இருந்து இன்ப தமிழ்நாட்டை மீட்டுத்தரவேண்டிய கடமையும் ஸ்டாலினுக்கு முன் இருக்கிறது.

 

ஏதோ தமிழ்நாடு திறந்து கிடக்கிறது என்று கருதி, திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தகுதியாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை ஆளத்துடிக்கின்ற அந்த செல்லுலாய்ட் பொம்மைகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் நிரூபிக்க வேண்டிய கடமை ஸ்டாலினுக்கு முன் இருக்கிறது.

 

ஆகவே ஒட்டுமொத்த தமிழினத்தின் சுயமரியாதையை, தன்மானத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய பெரும் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று இருந்ததைவிட இன்று, இன்று இருப்பதைவிட நாளை மிக நன்று என்று சொல்லத்தகுந்த வகையில் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து தருகின்ற கடமையில் அவர் வாகைசூட வேண்டும் என்று வண்ணத் தமிழில் எண்ணெமெல்லாம் இனிக்க வாழ்த்தி மகிழ்கிறேன் என்றார்.

சார்ந்த செய்திகள்