Skip to main content

வளர்ச்சி கண்ட சினிமா கவர்ச்சி! -ரசனை மாறாத ரசிகர்கள்!

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

‘அந்தமாதிரி விஷயங்களை இப்போது அலசி ஆராய வேண்டிய அவசியம் என்ன?’ என்று முகம் சுளித்துக் கேள்வி கேட்பவராக நீங்கள் இருந்தால், இக்கட்டுரையைத் தாரளமாக தவிர்த்துவிடுங்கள். அதேநேரம், ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஆராய்ச்சியானது,  ஆதாம்-ஏவாள்  காலத்திலேயே தொடங்கப்பட்டு, இன்னும் நீடித்தபடியே உள்ளது. 

ஓட்டம் பிடித்த பெண் ரசிகைகள்!  

சரி, விஷயத்துக்கு வருவோம்!, அழகிய அசுரா என்ற பெண் இயக்கி, ஓவியா  நடித்து கடந்த வாரம்  ரிலீஸானது 90 ml திரைப்படம். ஆண்களே பார்க்கத் தயங்கும் படம் என்ற விமர்சனம் எழுந்தாலும், ‘என்ன கருமம்டா இது’என்று  சிலர் கழுவிக்கழுவி ஊற்றினாலும்,   தெரிந்தோ தெரியாமலோ,  இத்திரைப்படத்தைக் காண்பதற்கு ஆண் துணையுடன் பெண்களும்  வருகின்றனர். மதுரை வெற்றி – லக்‌ஷன் திரையரங்கத்தில்,  கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி காட்சியின்போது அரங்கம் நிறைந்தது. 206  இருக்கைகள் கொண்ட அத்திரையரங்கிற்கு வந்த பெண் ரசிகைகள் 5 பேர் மட்டுமே. படம் திரையிடுவதற்கு முன்பாக, குஷி மூடில் ரசிகர்கள் 
கூச்சலிட்டபடியே இருந்தனர். டைட்டில் கார்டில் ஓவியா பெயரைக்  காட்டியவுடன், இருக்கையை விட்டு ரசிகர்கள் எழுந்து ஆடிய உற்சாகமும்,  விசிலடித்த  ஆரவாரமும் பன்மடங்கானது.  வழக்கத்துக்கு மாறாக  திரையரங்கில் ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் எரிச்சலூட்ட, படத்தின்  தன்மையை யூகித்து உஷாரான இரு தம்பதியர் வேகவேகமாக தியேட்டரை விட்டு வெளியேறினர். காட்சியின்போது, காது கூசும் அளவுக்கு, ஆளாளுக்கு சத்தமாகக் கமெண்ட் அடித்தனர்.    எஞ்சியிருந்த மூன்று பெண்களும்  அவர்களோடு வந்திருந்த ஆண்களும், இடைவேளையின்போது சீட்டை விட்டு  நகரவில்லை. ஆனாலும், ‘இந்தப் படத்துக்கெல்லாம் பெண்களைக் கூட்டிக்கொண்டு ஏன் வந்தீர்கள்?’என்று கேட்பதுபோல், சிலர் ஏளனப் பார்வையால்,  அம்மூன்று ஜோடிகளையும் மொய்த்தனர். படம் முடிந்ததும்,  ஆண்களெல்லாம் தியேட்டரை விட்டு வெளியேறும்வரை அந்த மூன்று ஜோடிகளும் காத்திருந்து, பத்திரமாக வெளியேற வேண்டிய பரிதவிப்புக்கு  ஆளானார்கள்.
 

90ml film

கெட்டவை அத்தனையும் ஒரே சினிமாவில்! 

90 ml – இல் அப்படி என்னதான் காட்டக்கூடாததைக் காட்டி விட்டார்கள்? ஸ்னீக்பீக்கில்,  கிர்ணி, ஆரஞ்சு, சப்போட்டா, திராட்சை, வாழைப் பழங்களின்  அளவை  வைத்து  ஏ’ காமெடி செய்து  ‘இது அந்தமாதிரி படம்தான்’என்று விளம்பரப்படுத்தியதே, தியேட்டர்களுக்கு இளைஞர்களை இழுக்கும் உத்திதான்.  டிரைலரிலும் பெண்கள் தம்மடிப்பது, தண்ணியடிப்பது, கஞ்சா புகைப்பது, படுக்கையறை லிப்லாக் என  ‘அடல்ட்ஸ் ஒன்லி’ காட்சிகளையே நிறைத்திருந்தனர். ’இதைக்காட்டிலும் அதிகம் இருக்கும்’ என்று  தியேட்டருக்கு நம்பிக்கையோடு வந்த இளம் ரசிகர்களுக்கு, ஒரு குறையும் வைக்கவில்லை  இந்தப் படம்.  படம் முழுவதும் அரைகுறை ஆடையில் தோன்றும் ஓவியா “எனக்குப் பிடிச்சிருக்கு. நான் இப்படியிருக்கேன்.” என்று டயலாக் பேசுகிறார். பாய்  ஃப்ரண்ட் அன்சன் பாலுடன்  ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை நடத்தும் அவர், செக்ஸ்  வைத்துகொள்வதெல்லாம் சர்வசாதாரண காட்சிகளாக வந்து போகின்றன.  ஹீரோயின் ஓவியா உள்ளிட்ட ஐந்து பெண்  கதாபாத்திரங்கள் குடியும்  கும்மாளமுமாக, படுக்கையறை அந்தரங்க விஷயங்களை கூச்சமே இல்லாமல்  பகிர்ந்துகொள்வதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். கெட்ட விஷயங்கள் என்று இந்த சமூகம் எதை எதை நினைக்கிறதோ, அதையெல்லாம் இந்த ஒரே படத்தில்  வலிந்து காட்டி விடுகின்றனர். அட, லெஸ்பியன் சமாச்சாரம்கூட சட்டபூர்வமானதுதான் என்று அதற்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது 90 ml.இது போதாதா? கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம், படத்தின் போக்கு அறிந்து தியேட்டருக்கு ஜாலியாகப் படையெடுப்பதால்,  படம்  நன்றாகவே கல்லா கட்டுகிறது. தம்மடிப்பது, தண்ணியடிப்பது, போதையில் பெண்கள் குறித்து புலம்புவது என, பல சினிமாக்களில் ஆண்களை வைத்து எடுத்த அதே காட்சிகளை, பெண்களை  வைத்து எடுத்தால் என்ன தப்பு? என்று கேட்பதுபோல், டிசைன் டிசைனாக காட்சிகளை அமைத்திருக்கின்றனர். செக்ஸ் பேச்சில் பெண்கள்  ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் சேலஞ்சிங்காக வசனங்கள், பெண் கதாபாத்திரங்கள் வாயிலாகத் தெறித்து விழுகின்றன. 

பெண்களென்றாலே உத்தமிதானா? 

90 ml குறித்து, அதன் இயக்குநர் அனிதா உதீப் என்ற அழகிய அசுரா  “இதுவரையிலும் பெண்கள் மனசுக்குள்ளே இருக்கிற உணர்ச்சிகளைப் பற்றி எந்தப்படமும் சரியாகப் பேசியதில்லை. பெண்களுக்கே உரித்தான ஆசைகள், உணர்ச்சிகளை எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படம் பேசியிருக்கிறது. பெண்கள் என்றாலே உத்தமியாகத்தான் இருக்க வேண்டும் என்ற பொதுவான பார்வை உண்டு. அப்படி பார்க்காதீங்க. பெண்களுக்குள்ளே இருக்கின்ற கனவுகளையும் பாருங்க என்று இந்தப்படத்தின் மூலமாக நான் சொல்லியிருக்கிறேன். மனதுக்குள்ளே இருக்கும் ஆசைக்கு எதுக்கு பூட்டு போட வேண்டுமென்று, ஓவியா மூலமாகச் சொல்லியிருக்கிறேன்.” என்று பேசி, பெண்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். 

கலாச்சாரத்திற்கு எதிராக தூண்டப்படும் இளம் பெண்கள்! 

இந்தப் படத்தில் நடித்த ஓவியா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர் அனிதா உதீப் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்யவேண்டும் என்று  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் முறையிட்டிருக்கும் இந்திய  தேசிய லீக் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி ஆரிபா ரசாக், தனது புகார் மனுவில் ’இந்தப்படம் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. இந்தப்படத்தில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளைத் தங்களது கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட தூண்டும் வகையில் காட்சிகள் உள்ளன. படுக்கையறை ரகசியங்களை அம்பலப்படுத்துவது, ஆபாச வசனங்கள் போன்றவை,  பாலியல் குற்றம் நடப்பதைத் தூண்டும் வகையில் இருக்கின்றன. இதுபோன்ற திரைப்படங்கள்தான் குற்றவாளிகளை உருவாக்குகின்றன.’என்று கூறியிருக்கிறார்.  

கட்டுப்பாடற்ற பெண்கள் என்றாலே ஆண்களுக்கு உறுத்தல்தான்!

“90 ml அப்படி ஒன்றும் மோசமான படமல்ல..” என்று நம்மிடம் கருத்து சொன்ன கல்லூரி மாணவி சைலபுத்திரி “இதற்குமுன் வந்த பல சினிமாக்களிலும் ஆண் கதாபாத்திரத்துக்கு ஒரு பிரச்சனை என்றால், நண்பர்கள் ஒன்றுகூடி தண்ணியடித்து, கண்டதையும் பேசி, நண்பனைச் சமாதானப்படுத்தி, பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள். அதையேதான், இந்தப் படத்தில் பெண்கள் பண்ணுகிறார்கள். படத்தில் வரும் ஐந்து பெண்களுக்கும் ஐந்துவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன. இவை, பொதுவாக பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்தான். படத்தில் சைக்கியாட்ரிஸ்ட் ஆக ஒரு பெண் வருகிறார். அவரும்கூட, இதுபோன்ற நட்பு தனக்கு அமையவில்லையே என்று ஏக்கமாகத்தான் பார்க்கிறார். பெண்களுக்கு வரும் இயல்பான பிரச்சனைகளை மிகைப்படுத்திக் காட்டியிருக்கின்றனர். பெண்கள் என்றாலே குடும்பப் பொறுப்பு உள்ளவர்கள். அவர்கள் இப்படி பண்ணலாமா? என்பதே பொதுவான பார்வையாக இருக்கிறது. ஆனாலும், ஆண்கள் போலவே, பெண்களுக்கும் மனதில் எல்லா ஆசைகளும் உண்டு. ரியல் லைஃபில், அதையெல்லாம் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் பெண்கள். இந்தப் படத்திலோ, எந்தக்  கட்டுப்பாடும் இல்லாமல், ஆசைகளையும், கோபத்தையும் அவரவர் இஷ்டத்துக்கு வெளிப்படுத்துகிறார்கள். இதுதான் ஆண்களை உறுத்துகிறது. இதுவும்கூட ஒருவிதத்தில் ஆணாதிக்க மனோபாவம்தான். சரியாகச் சொல்ல  வேண்டுமென்றால், 90 ml சினிமா குறிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய படம். தங்கள் வீட்டிலுள்ள பெண்களும் ஆசைகளை அடக்கித்தான்  வைத்திருக்கிறார்கள் என்பதை தங்களுக்கு வசதியாக மறந்து, திரையில் காட்டும் பெண்கள் யாரோ நடிகைகள் என்னும் அளவிலேயே ரசிக்கின்ற கூட்டத்தால்,  இந்தப் படம் பெண்களைச் சென்றடையவில்லை.” என்றார்.
  

ganga film

கர்ணன் காட்டாத கவர்ச்சியா?  

90 ml சினிமா ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை குறித்து நம்மிடம் பேசிய அந்தக்கால சினிமா ரசிகரான கார்த்திகேயன் ”இந்த அழகிய அசுரா எம்மாத்திரம்? கவர்ச்சி காட்டி ரசிகர் கூட்டத்தை இழுக்கிறதுல பெரிய பெரிய ஜாம்பவானெல்லாம் இதே தமிழ் ஃபீல்டில் இருந்திருக்காங்க. எம்.கர்ணன்னு ஒரு டைரக்டர். ஒளிப்பதிவு மேதைன்னு அவரைச் சொல்லுவாங்க. அவர் வைக்கிற கேமரா கோணம் கவர்ச்சியை ரொம்ப தூக்கலா காமிக்கும். 1970-ல அவரு எடுத்த முதல் படம் காலம் வெல்லும்.” என சிலிர்த்து நின்று அவர் பாடிய கர்ண புராணம் இது -  காலம் வெல்லும் திரைப்படத்தில் ‘எல்லோரும் திருடர்களே..ஒரு பெண்ணைப் பார்க்கும்போது’ என்று பாடல்களில் மட்டுமே கவர்ச்சி காட்டிய கர்ணன், இரண்டாவது படமான கங்காவில் பெண்களிடம் கொள்ளையர்கள் அத்துமீறி  நடக்கும் காட்சியிலும், ஆற்றில் ஹீரோயின் ராஜ்மல்லிகா குதிரையைக் குளிப்பாட்டும் காட்சியிலும் அநியாயத்துக்கு கவர்ச்சியைத் திணித்தார். இத்தனைக்கும் இந்த இரண்டும் யு சர்டிபிகேட் படங்களே. அடுத்து அவர் இயக்கிய ஜக்கம்மா பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஏனென்றால், ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு கவர்ச்சி காட்சிகள் அதில் இல்லை.  அடுத்து ஈஸ்ட்மென் கலரில் எங்கள் பாட்டன் சொத்து என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தில்தான் முதன் முதலில், கடற்கரையில் ரேப் சீன் வைத்தார். படம்  பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இன்றுவரையிலும் பேசப்படும் கவர்ச்சிப்படம் என்றால், அது கர்ணனின் இயக்கத்தில் வெளிவந்த ஜம்புதான். 1970-ல் ஆரம்பித்த கர்ணனின் கலைப்பயணம், 1989-ல் வெளிவந்த ரெட்டைக்குழல் துப்பாக்கி வரை கவர்ச்சிகரமாக தொடர்ந்தது.  மேலும் அவர்,  “கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் அந்தமாதிரி காட்சிகள் வரும்போது, ரசிகர்கள் சத்தமில்லாமல் பார்த்து ரசித்தார்கள். காலம் மாறிவிட்டது. இப்போது,  செல்போன்லயே இன்டர்நெட் வச்சிக்கிட்டு, எல்லா கருமத்தையும் பார்த்துத் தொலைக்கிறாங்க.  அதனாலதான், வேற லெவல்ல யோசிச்சு 90 ml  மாதிரி படம் எடுக்கிறாங்க.  டபுள் மீனிங் வசனம் போய், டைரக்டாவே ஏ சமாச்சாரத்தை சினிமாவுல பேசுறாங்க. அந்தமாதிரி ஒரு படம்தான் 90 ml..” என்றார்.  
 

trisha ilana nayan

காதலும் காமமும் கலந்ததே வாழ்க்கை! 

காதல், காமம் இரண்டுமே இயல்பாக எழும் உணர்வுகள்தான். இரண்டும் வெவ்வேறில்லை. இவையிரண்டும் இணையாத இல்லற வாழ்க்கை  இனிப்பதில்லை. அதனால், காதல் தெய்வீகம், காமம் அருவருப்பு என்று கூறிவிட முடியாது. சர்க்கரை இனிப்பு, மிளகாய் காரம் என்பது அறிந்ததே. ஆனாலும்,  வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு சர்க்கரையையும், மிளகாயையும் அப்படியே தருவதில்லை. சர்க்கரை கலந்த ஜிலேபி, காரம் கலந்த பஜ்ஜிதான் தருகிறோம். ஜீவனோடு கலந்த உணர்வு காமம். அதைக் காதலோடு கலந்து தரும்போது, வாழ்க்கை என்ற பலகாரம் சுவைக்கிறது. ஆனாலும், திரையுலகில் கவர்ச்சி, ஆபாசம் என்று வரையறுத்துப் பேசும் நடைமுறை காலம் காலமாக இருந்து வருகிறது. கவர்ச்சியும் ஆபாசமும் ரசிகர்களின் தேவையாக இன்றும் இருக்கிறது என்பதை அறிந்தே, இருட்டு அறையில் முரட்டு குத்து, த்ரிஷா 
இல்லனா நயன்தாரா,  90 ml போன்ற படங்கள் வருகின்றன.  பொதுவெளியில் விமர்சனத்துக்கும் ஆளாகின்றன. அப்போதெல்லாம்,  கலாச்சாரம் என்ற நல்ல வார்த்தை பலராலும் உச்சரிக்கப்படுகிறது. 1944-ல் வெளிவந்து மூன்று தீபாவளிகளைக் கண்ட திரைப்படம் எம்.கே.தியாகராஜர் நடித்த ஹரிதாஸ். மன்மதலீலையை வென்றார் உண்டோ? என, 75 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பி,  இன்று வரையிலும் விடை தேடியபடியே இருக்கிறது தமிழ் சினிமா! 
 
-சி.என்.இராமகிருஷ்ணன்.