Skip to main content

கோஷ்டி உருவாக்காத எழுத்தாளர், வெறுப்பை பரப்பாத பேச்சாளர்... - சாகித்ய அகாடெமி விருது பெற்ற எஸ்.ரா

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
s.r

 

 

“என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்” என்றுதான் எஸ்.ரா தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். நம் கோணத்தில் இருந்து பார்த்தாலும் இது உண்மைதான்... எஸ்.ரா எழுத்தில் உருவான நூல்களை படிக்கும்போது, அவருடைய உலகமான அவரது சிந்தனைக்குள் எழுத்துகள் எறும்புகளாகி அவரது உலகினுள் நம்மை அழைத்துச் செல்வதை உணரலாம். முடிந்தவரை தன்னை படிப்பவர்களுக்கு பாசிடிவிட்டியை பரப்புபவர் இந்த எஸ். ராமகிருஷ்ணன். 
 

எஸ். ராமகிருஷ்ணன், விரிந்திருக்கும் பொட்டல் நிலத்தில் இசையுடன் அலைந்து திரியும் நாதஸ்வர கலைஞர்களை பற்றி எழுதிய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இந்தாண்டின் சாகித்ய அகாடமி விருதை பெறுகிறார். இந்திய எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த விருதை பெற வேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக இருக்கும். இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளில் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை பெற்றது குறித்து எஸ்.ரா,  ‘இந்த விருது எனக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது. மீண்டும் எழுத்துலகில் ஓடவேண்டும் என்று தோன்ற வைக்கிறது. 25 வருடமாக எழுத்து பணியில் இருப்பவருக்கு, ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 

எஸ். ராமகிருஷ்ணன் என்பது இவருடைய பெயராக இருந்தாலும் பலரால் எஸ்.ரா என்றே அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் எழுத்துலகில் முதன் முதலாக சிறு கதைகள் மூலம் எழுத தொடங்கி, பிறகு தமிழ் நவீன எழுத்துலகில் தவிர்க்கமுடியாத எழுத்தாளராகியுள்ளார். சிறுகதை, நாவல் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பயணம் செய்து பல பயணக் கட்டுரைகள் எழுத வல்லவர். பலருக்கு தன் எழுத்துகளின் மூலம் உலக சினிமா, உலக இலக்கியங்கள் பலவற்றை பற்றி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
 

sancharam


கி.ராஜநாராயணன் மற்றும் கோணங்கி போன்ற தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பை சேர்ந்தவர் எஸ். ராமகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணர் கிராமம்தான் இவருடைய சொந்த ஊர், இக்கிராமம் முன்பு இராமநாதபுரம் . எஸ்.ராவின் தந்தை வழி தாத்தா திராவிட கொள்கையுடைவர், தாய் வழி தாத்தா தீவிர சைவ சமயத்தை பின்பற்றுபவர். சிறு வயதிலேயே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற சந்தேகம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பிறகு புத்தகங்கள் வாசிக்க அதிக ஆசை வந்துவிட்டதால் பல நூலகங்களில் உள்ள நூல்களை தேடி தேடி படிக்கும் பழக்கம் வந்திருக்கிறது. சிறு வயதில் இராமநாதபுரத்திலுள்ள அக்கம்பக்கம் கிராமத்தை சுற்றியே வளர்ந்ததால் என்னவோ, 18 வயதில் இருந்து மனம்போன போக்கிலேயே பல ஊர்களை சுற்றியிருக்கிறார். இலக்கிய வாசிப்புடன் இருந்தவர் தன்னுடைய கல்லூரி நாட்களில்தான் முதன் முதலாக எழுத தொடங்கியுள்ளார். எழுத்து பிரதியில் வெளியான முதல் கதை கபாடபுரம். அடுத்த கதை பழைய தண்டவாளம் கணையாழியில் வெளியானது.
 

 

 

ஆங்கில இலக்கியம் பயின்று அதில் முனைவர் பட்டம் வரை சென்று பாதியில் திரும்பி, தமிழ் எழுத தொடங்கியுள்ளார் எஸ்.ரா. 15 வருடம் சென்னையில் அழைந்து திரிந்திருக்கிறார். முழு நேர எழுத்தாளனாக இவர் மாற, இவருடைய குடும்ப சுமையை எஸ்.ராவின் மனைவி சுமந்தார். துணையெழுத்து தொடர் பரவலான வாசக கவனத்தை இவருக்கு அளித்தது. அதைத் தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி என்று வெளியானவை தமிழில் பரந்த வாசக தளத்தினை உருவாக்கியது.
 

இவர் எழுத்தில் மட்டும் வல்லவரா என்று பார்த்தால் அதுதான் இல்லை, யூ ட்யூபில் இவருடைய பேச்சுக்களை பார்த்தோம் என்றால் அப்படியே நாம் மூழ்கி விடுவோம். உதாரணம், மார்க்ஸ் ஜென்னியின் காதல் பற்றி அவ்வளவு அருமையாக பேசியிருப்பார். அவர் எழுதத்தை படிப்பவர்களை, அந்த உலகத்துக்கு அழைத்து செல்வதை போன்று தன்னுடைய பேச்சிலும் அழைத்து செல்வார்.
 

பாபா திரப்படத்தின் மூலம் சினிமா எழுத்தாளனாகவும் கால் பதிக்க தொடங்கினார். சண்டக்கோழி படத்தில் இவருடைய வசனங்கள் பலரால் பாராட்டப்பெற்றது. இவர் 9 நாவல்கள், 21 சிறுகதை தொகுப்புகள், 3 நாடகங்கள் மற்றும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறுகதைகள் ஆங்கிலம் ஜெர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதேபோல 14 திரப்படங்களில் வசனம் மற்றும் திரைக்கதைகளில் பங்காற்றியுள்ளார். கடந்த் ஆண்டு தேசாந்திரி என்னும் பப்ளிகேஷனையும் தொடங்கியுள்ளார். சாகித்ய அகாடமி விருதை சேர்ந்து 14 விருதுகள் தன்னுடைய எழுத்திற்காக பெற்றிருக்கிறார்.