Skip to main content

எல்லாம் ரொம்ப ஹேப்பியா தான் இருக்காங்க! எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்! அமைச்சர்கள் ஆதரவு ரகசியம்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

wwww

 

தேர்தல் தீர்ப்பை மக்கள்தான் வழங்குவார்கள் என்றாலும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளருக்கான ரேஸ் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். இடையே பலமாக உள்ளது. அ.தி.மு.க. வின் அதிகார மையம் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என பல அமைச்சர்கள் வெளிப்படையாகக் கூற தொடங்கியுள்ளனர். இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.சும் கூட்டறிக்கை வெளியிட்டாலும் இருவருமே தங்கள் ஆதரவாளர்கள் மூலம் முதல்வர் வேட்பாளருக்கான போஸ்டர் யுத்தத்தைத் தூண்டியபடியே இருக்கிறார்கள்.


 
கொங்கு பகுதி அமைச்சர் ஒருவர் தன் பங்குக்கு அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடியார் தான் என புகையைப் பற்ற வைத்துள்ளார். செப்டம்பர் 8 அன்று பவானி சட்டமன்றத் தொகுதி கவுந்தப்பாடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் தொகுதி எம்.எல்.ஏ.வும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பணன்.

 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, "அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில் மக்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள்'' என்றதோடு... "இப்போது தேர்தல் வந்தாலும் அண்ணன் எடப்பாடியார்தான் மீண்டும் முதல்வர் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை'' என உறுதிபட கூறினார். அமைச்சர் கருப்பணன் பேசியது துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி யுள்ள நிலையில் அ.தி.மு.க. சீனியர் எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேசினோம்.

 

"முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகலையோட சம்பந்தி அதாவது எடப்பாடியாருக்கும் சம்பந்தி முறைதான் அமைச்சர் கருப்பணன். அந்த உறவு என்கிற தகுதியில்தான் அமைச்சராக கருப்பணன் இப்போதும் இருக்கிறார். ஆக முதல்வர் எடப்பாடியின் கருத்தைத்தான் கருப்பணன் கூறியுள்ளார். திரும்பத் திரும்ப முதல்வர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிதான் என்ற கருத்து மிக ஆழமாகப் பதிய வேண்டும் என்பது தான் எடப்பாடியின் நிலைப்பாடு.

 

இதற்கெல்லாம் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்போ அல்லது யாருமே வாய்ப்பூட்டு போட முடியாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். இல்லை யென்றால் யாரும் தனிப்பட்ட கருத்தை கூறக் கூடாது என கட்சி சார்பில் அறிவிப்பு கொடுத்த பிறகும், கட்சி கட்டுப்பாட்டை மீறி ஒரு அமைச்சரே தைரியமாக மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் எனக் கூறுகிறார் என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மன உறுதிதான். இதற்காக அமைச்சர் கருப்பணன் மீது ஓ.பி.எஸ். தரப்பு எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பே இல்லை'' என்றார்.


"அமைச்சர் கருப்பணன் மட்டும் இல்லீங்க. எல்லா அமைச்சருமே ரொம்ப ஹேப்பியா தான் இருக்காங்க முன்பெல்லாம் வர்ற வருமானத்தை ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் கப்பம் கட்டுவாங்க, ஆனால் முதலமைச்சரா எடப்பாடி பழனிச்சாமி பொறுப்புக்கு வந்தபிறகு அந்தந்த அமைச்சர்கள் அவங்கவங்களுக்கு வர்ற வருமானத்தை நீங்களே வெச்சுக்குங்க, இது ஒரு பேக்கேஜ்னு எடப்பாடி சொல்லிட்டாரு அப்புறம் எந்த அமைச்சருங்க மகிழ்ச்சியா இல்லாம இருப்பாங்க? வருமானத்துல பங்கு பிரிக்காம மொத்த கொள்ளையும் அமைச்சர்கள் வூட்டுக்கு போகும் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு விசுவாசம் இல்லாமல் இருப்பாங்களா?

 

admk

 

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை வருமானம் குறைவில்லாமல் வர வேண்டும் அதோடு அவரது மகன், குடும்பம், உற்றார் உறவினர்கள், சம்பந்தி வகையறாக்கள் பெரும் செல்வத்தை சேர்க்க வேண்டும் அரசியலில் அதிகாரம் என்ற பவர் குறையக் கூடாது அவ்வளவுதான் அவரின் எதிர்பார்ப்பு. கட்சி நலன், கொள்கை நலன் என்பதெல்லாம் இப்போதுள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் யாருக்கும் இல்லை.

 

Ad

 

அ.தி.மு.க. அமைச்சர்கள் கொள்ளையடிப்பதை பா.ஜ.க. தலைமை வேடிக்கை பார்த்துக் கொண்டு, பண போதை, அரசியல் அதிகாரம் என்ற போதையில் இவர்களை வைத்துக் கொண்டு வருகிறது. இதே போதையில் வைத்து, அ.தி.மு.க. ஓட்டு வங்கியை பா.ஜ.க.வுக்கு திருப்பிவிடலாம் என்ற கணக்கை அவர்கள் போட்டுள்ளார்கள். எனக்கு தெரிந்து சில அமைச்சர்கள் உண்மையோடு பேசுகிறார்கள். அதாவது வர்ற தேர்தல்லே அ.தி.மு.க. இருபது முதல் அதிகபட்சம் முப்பது எம்.எல்.ஏ. சீட் தான் வெற்றி பெறும் என தெளிவாகக் கூறுகிறார்கள். இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மக்கள் ஆதரவு, தொண்டர்கள் பலத்தில் இப்போதும் அ.தி.மு.க. பலமாகத்தான் அதாவது இரும்பு கோடாரி போல் உள்ளது. ஆனால் அந்த கோடாரிக்கு தலைமை என்கிற கைப்பிடிதான் இல்லை. வெறும் கோடாரி இருந்து எந்தப் பிரயோசனமும் இல்லை'' என நம்மிடம் விரிவாக பேசினார் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி.

 

எது எப்படியோ, தனது பதவிக் காலம் முடியும் வரை முதல்வர் நாற்காலிக்கு எந்த காலும் முறியாமல் தெளிவாகக் கொண்டு போகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.