Skip to main content

நீதிபதி நினைத்திருந்தால் அவர்கள் இருவரையும் காப்பாற்றி இருக்க முடியுமா..? - வழக்கறிஞர் இளங்கோவன் பேட்டி!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
v

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாக சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு வழக்கறிஞர் இளங்கோவன் பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கையை அனைவரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு சிறை செல்ல அனுமதி அளித்த மாஜிஸ்திரேட் அனைவரின் கவனத்துக்கும் வருகின்றார். அவர் நினைத்திருந்தால் இறப்பை தடுக்க முடியவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் சிறை செல்வதை தடுத்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

சட்டம் அவர்களுக்கு எல்லா விதமான அதிகாரங்களையும் வழங்குகின்றது. தாங்கள் அந்த இடத்தில் இருப்பதால் தனக்கு எல்லா விதமான அதிகாரங்களும் இருக்கின்றது என்று அவர்கள் நினைத்துக்கொள்ளக்கூடாது. இந்த அறிவு முதலில் அவர்களுக்கு புகுத்தப்பட வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய காவல்துறை அப்படியான ஒரு நிலையில் இல்லை என்பதை பல ஆண்டுகளாக நாம் பார்த்து வருகின்றோம். இந்த நிகழ்வு முதலில் எப்படி ஏற்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இரவு எட்டு மணி வரை மட்டுமே கடை திறந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த கடை அதற்கு மேலும் திறந்திருந்தால் அவர்கள் செய்ய வேண்டியது என்ன, எதற்காக வழக்கு பதிவு செய்ய முயல்கின்றார்கள். பல்வேறு விதி மீறல்களை இவர்கள் ஆரம்பித்திலேயே செய்து விடுகிறார்கள். 

ஒரு எஸ்ஐ புகார் கொடுக்க மற்றொருவர் அதனை பதிவு செய்கின்றார். இவர்கள் கடை அதிகம் நேரம் திறந்திருந்தால்கூட ஒரு பொதுவான மனிதர்களை வைத்து புகாரை பதிவு செய்து இருக்கலாம். ஆனால் அதைகூட காவல்துறையினர் செய்யவில்லை. அனுபவம் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்படி ஒரு முதல் தகவல் அறிக்கை தேவையில்லை என்று. தேவையில்லாதவற்றை அனைத்தையும் அவர்கள் அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் கைது செய்துவிடுவார்கள் என்ற தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்த பார்க்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை கிடைக்கும் வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் கூட உடனடி கைது என்பது அவசியமில்லை. 

அவ்வாறு கைது செய்யப்பட வேண்டும் என்றால், அந்த கைதை செய்யக்கூடியவர் அதற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும். இந்த கைது அவசியமானதுதான் என்று அவர்களை விசாரணை செய்த அதிகாரி இதுவரை வெளியே சொன்னாரா என்று இதுவரை தெரியவில்லை. ஒருவரை கைது செய்தால் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படும். ஒன்று கைது செய்து பிணையில் விடுவிக்கப்படுவார்கள். மற்றொன்று நீதிபதி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நீதிமன்ற காவலில் வைப்பார். அதில் விசாரணை கைதிக்கு ஏதேனும் பாதிப்போ, உயிரிழப்போ ஏற்பட்டால் முதலில் நீதிபதிதான் பதில் சொல்ல வேண்டும். சிறைச்சாலை அரசாங்கத்தின் ஒரு இடமாக இருந்தாலும் அதன் முழு கண்ட்ரோல் நீதிபதியிடம் இருக்கும், இந்த விசாரணை கைதிகளை பொறுத்த வரையில். அப்படி இருக்கையில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடைபெறுகின்றது என்றால் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது அவசியமாகின்றது.