Skip to main content

'ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டுமல்ல... ஆப்கானிஸ்தானை கூட மீட்பார்கள்' வழக்கறிஞர் அருள்மொழி தடாலடி!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019


காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு நீக்கியது. இதற்கு பெரும்பாலான எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இருப்பதால் பாஜக அரசு அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதுதொடர்பாக வழக்கறிஞர் அருள்மொழியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அனைத்து கேள்விகளுக்கும் அவர் அதிரடியாக பதிலளித்தார். அவை வருமாறு,
 

arulmozhi




காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருபகுதியாக காஷ்மீர் இருந்துகொண்டு அதற்கு தனிச்சலுகை வழங்கப்படுவதில் நியாயம் இல்லை என்று, இதற்கான காரணமாக இந்த விவகாரத்தை ஆதரிப்பவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதை எப்படி பார்கிறீர்கள்?

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை என்று சொல்லப்படுவதே தவறு. அவர்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வதற்கு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி. இந்தியாவுடன் சேர்வதற்கு அவர்கள் விதித்த நிபந்தனைகளில் இது முக்கியமான ஒன்று. இப்போது அதை நீக்கி இருக்கிறார்கள். இதை யார் செய்ய வேண்டும். நாங்கள் இவ்வாறு மாற்ற இருக்கிறோம் என்று அந்த மக்களிடம் தெரிவித்து கருத்து கேட்டீர்களா? அந்த மாநிலத்தில் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறதா? அந்த மக்களிடம் இதை பற்றி தெரிவிக்காமலேயே உங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா.

இந்த சிறப்பு சலுகை தற்காலிகமாக வழங்கப்பட்ட ஒன்றுதான் என்று இதனை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்ளே?

அது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அதை யார் செய்ய வேண்டும். அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுகூடி சட்டமன்றத்தில் முடிவெடுக்க கூடிய விஷயம் இது. ஆனால், மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை தற்போது இல்லாத நிலையில், மாநில மக்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த முடிவை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது. இது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவமாகவே நான் இதை பார்கிறேன்.

இப்போது அங்கு யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற நிலையில், புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி காஷ்மீர் இளைஞர்கள் வேலை வாய்ப்பை அதிகம் பெருவார்கள் என்று கூறப்படுகிறதே?
 

அவர்கள் கேட்டார்களா? மக்கள் என்ன கேட்கிறார்களோ அதனை அரசுகள் செய்ய வேண்டும். தங்களிடம் பலம் இருக்கிறது என்று அத்துமீறில் ஈடுபட கூடாது. ஆனால், மக்களின் எண்ணங்களுக்கு விரோதமாக தற்போது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களின் இந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களுக்கு சந்தோஷத்தை தரபோவதில்லை. இன்னும் நாட்கள் செல்லசெல்ல அங்கு எந்தமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரியவில்லை. அதிகாரத்தை வைத்துக்கொண்டு மக்களின் உரிமைகளையும் பறிக்கலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் காலத்திடம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்பது மட்டும் உண்மை.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடம் இருந்து மீட்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளதே? 

ஆக்கிரமிப்பு காஷ்மீரை என்ன, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை மீட்பேன் என்று கூட சொல்வார்கள். யார் எதிர்த்து கேள்வி கேட்க முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இவ்வாறு கூறுகிறார்கள். இவர்கள் கூறுவதை எதையும் அந்த மாநில மக்கள் நம்ப போவதில்லை. இந்த முடிவுக்காக ஆளும் தரப்பினர் வருத்தப்படுவார்கள். எனெனில் மக்களின் எண்ணங்களுக்கு மாறாக அரசுகள் மேற்கொண்ட எந்த ஒரு நடவடிக்கையும் வெற்றிபெற்றது இல்லை.

அதிமுக இதனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்களே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது இதைதவிர. பாஜகவின் அடிமைகளாக மாறி போன அவர்களிடம் நீதி, நியாயத்தை எதிர்பார்ப்பது என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போல. அவர்கள் அடிமைகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.