Skip to main content

எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் உள்ள யாருக்கும்... எஸ்.ஜோயல் பதிலடி

Published on 15/10/2019 | Edited on 16/10/2019

 

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சியான திமுக அங்கு தீவிரப் பணியாற்றி வருகிறது. நாங்குநேரி களம் எப்படி உள்ளது என திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயலை தொடர்பு கொண்டோம்.

 

நாங்குநேரி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
 

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
 

காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்காரர் என எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறாரே?
 

அதுபோன்ற எண்ணம் பொதுமக்களிடையே இல்லை. ஆளும் கட்சி மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. அதனை மறைக்க எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் செல்வாக்கான தொகுதி நாங்குநேரி. திமுக தலைமையிலான கூட்டணியினர் ஒன்றிணைந்து பணியாற்றுவதால் ரூபி மனோகரனுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. 
 

joel



 

 

மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் என்றாலே திண்ணை பிரசாரம் தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசுகிறாரே?
 

தேர்தலுக்காக வருபவர் இல்லை ஸ்டாலின். இளைஞரணித் தலைவராக அவர் இருந்தபோது தமிழ்நாட்டில் அவர் செல்லாத ஊர்களே கிடையாது. இளைஞரணியினர் அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் சென்று திமுக கொடியை ஏற்றி வைத்துள்ளார். பட்டித் தொட்டி, கிராமங்கள் என எல்லா ஊர்களுக்கும் சென்ற இப்போதுள்ள ஒரே தலைவர் ஸ்டாலின்தான். எளிமையாக எல்லோருடனும் பேசுகிறார், பழகுகிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி பேசுகிறார்கள். 
 

திண்ணைப் பிரச்சாரம் எடப்பாடி பழனிசாமியால் பண்ண முடியாது. ஏனென்றால் அங்கு குறைகளை சொல்லுவார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியால் பதில் சொல்ல முடியாது. திண்ணைப் பிரச்சாரம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி கிடையாது. திண்ணைப் பிரச்சாரத்திற்கு அவர் வந்தால் மக்களே விரட்டிவிடுவார்கள்.
 

திண்ணைப் பிரச்சாரம் செய்வதற்கு ஸ்டாலினுக்கு முழு தகுதி உள்ளது. அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவும், திமுக ஆட்சியில் என்ன செய்தோம், இனி என்ன செய்வோம் என்று சொல்லக்கூடிய தகுதி எங்கள் தலைவருக்குத்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் உள்ள யாருக்கும் திண்ணைப் பிரச்சாரம் செய்யக்கூடிய தகுதி இல்லை. 


 

 

17315 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் வசந்தகுமார் வெற்றி பெற்றார். ரூபி மனோகரன் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்?

 

குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

திமுக இளைஞரணி பிரச்சாரம் எப்படி உள்ளது?
 

இளைஞரணியினர் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். உதயநிதி ஸ்டாலின் 17 மற்றும் 18ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவர் வருவது திமுகவினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும்.

 


 

சார்ந்த செய்திகள்