Skip to main content

எம்.ஜி.ஆரை கொல்லப் பார்த்தவர்...?!

Published on 07/03/2018 | Edited on 08/04/2018

மார்ச் – 7 நம்பியார் பிறந்த தினம்
 

நீண்டகாலமாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த வில்லன் நடிகர், திரைப்படத்தில் தான் விழிகளை மிரட்டும் வில்லன். தொலைக்காட்சி, இணையதளம், செல்போன் என டெக்னாலஜிகள் கோலோச்சாத காலம், படிப்பறிவு குறைந்த கிராமத்து மக்கள் நம்ம தலைவரை கொல்ல பார்த்த கொலைக்காரன் என படப்பிடிப்பு நடந்த இடத்தில் மக்களால் புறக்கணிக்கப்படும் அளவுக்கு திரையில் வில்லத்தனத்தில் கொடிக்கட்ட பறந்தவர். ஆனால், திரைக்கு வெளியே ஒரு குழந்தையை போன்றவர் எம்.என். நம்பியார்.
 

nambiar with mgr


1919 மார்ச் 7ந்தேதி கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மாஞ்சேரி என்கிற கிராமத்தில் வசித்த கேளு நம்பியார் என்பவரின் மகனாக நாராயணன் நம்பியார் பிறந்தார். தனது ஊர் பெயரை சேர்த்து மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என அழைத்தனர். ஒரு சகோதரன் ஒரு சகோதரியோடு பிறந்த நாராயணனின் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இதனால் இவரது அம்மா பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊட்டி வந்து நிரந்தரமாக தங்கினார்.

ஊட்டி நகராட்சி பள்ளியில் படிக்க துவங்கினார். படிப்பு ஏறவில்லை. குடும்பத்தில் கஷ்டம், இதனால் ஊட்டிக்கு வந்து நாடகம் போட்டுயிருந்த சென்னை நவாப் இராசமாணிக்கம் நாடககுழுவில் 13 வயதில் நாடக கம்பெனியில் சேர்த்துவிடப்பட்டார். நாடகக்குழுவில் உள்ளவர்களுக்கு சமைத்து தரும் சமையல் காரர்களுக்கு உதவியாளராக முதலில் சேர்க்கப்பட்டார் நாராயணன். அக்காலத்தில் சமையல் செய்பவர்கள் குளித்து முடித்து சுத்தபத்தமாக தான் சமையல் பணியை துவங்குவார்கள். இந்த நடைமுறை மற்றும் பழக்கத்தை தனது கொள்கையாகவே வைத்துக்கொண்டார் நாராயணன்.

1935ல் பக்தராமதாஸ் என்கிற திரைப்படத்தில் மாதண்ணா என்கிற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இதுதான் நாராயணனின் முதல் படம். அக்காலத்தில் திரைத்துறையில் பல நாராயணன்கள் இருந்ததால் இவரது பெயரை பெருக்கு எம்.என்.நம்பியார் என பெயர் வைத்தார்கள். அந்த பெயரே ரசிகர்களிடம் பிரபலமானது.
 

nambiar with wife


சினிமா வாய்ப்புகள் எப்போதாவதுதான் வந்தது. நாடக வாய்ப்போ அடிக்கடி வந்தது. இதனால் நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 1945ல் ஜுபிடர் பிக்ஸர் நிறுவனம் நம்பியாரின் நடிப்பை பார்த்து மகிழ்ந்து அவரை தங்களது நிறுவன நடிகராக சேர்த்துக்கொண்டார். ஜுபிடர் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த படங்களில் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். 

வேலைக்காரி, கல்யாணி உட்பட சில படங்களில் நாயகனாகவும் நடித்தார். அந்த பாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.இராமச்சந்திரனின் பூர்வீகம் கேரளா. எம்.என்.நம்பியாரின் பூர்வீகமும் கேரளா. மலையாளி பாசம் இருவரையும் திரைக்கு வெளியே ஒன்றிணைய வைத்தது. தனது அனைத்து படங்களிலும் எம்.என்.நம்பியருக்கு வேடங்கள் வாங்கிதந்தார். அதுவும் தனக்கு சரிசமமாக படம் முழுவதும் வரும் வகையிலான வில்லன் வேடம். அதன்பின் நம்பியாரின் திரை வாழ்க்கை உச்சத்துக்கு போய்க்கொண்டே இருந்தது. தமிழ் திரையுலகில் மற்றொரு ஜாம்பவானான சிவாஜிகணேசனும் தனது படங்களில் பெரும்பாலானவற்றில் நம்பியாரை வில்லனாக்கினார்.
 

nambiar


வில்லன் வேடத்தில் மாறுபட்ட தனது குரல் வளத்தால் புகழின் உச்சிக்கே சென்றார். வில்லனாக இருந்தவர் பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். 'சுதேசி' என்கிற திரைப்படம் தான் நம்பியார் நடித்த இறுதி திரைப்படம். அதன்பின் முழு ஓய்வுக்கு சென்றுவிட்டார்.

நாடகத்தில் நடித்தபோதும், பின்னர் சொந்தமாக நம்பியார் நாடகக்குழு வைத்திருந்தபோதும், திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற போதும் ஓழுக்கத்துடன் வாழ்ந்தவர்களில் நம்பியார் முக்கியமானவர். தொடர்ச்சியாக 67 ஆண்டுகள் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு மாலைப்போட்டு விரதம் இருந்து சென்றவர். 1946ல் குடும்ப உறவினரான ருக்குமணி என்பவரை நாராயணன்க்கு திருமணம் செய்து வைத்தார் நம்பியாரின் குடும்பம். பக்தி நிறைந்தது இவரது குடும்பம். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அதில் ஒரு மகன் கேரளா மாநில பாஜக தலைவர்களுள் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 2008 நவம்பர் 19ந்தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மறைந்தார் நம்பியார்.