Skip to main content

சேந்தன்குடி ஜெயநகரம் பாலசுப்பிரமணியர் கோயில் வைரத் தேர் வெள்ளோட்டம் 

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

 

    சேந்தன்குடி ஜெயநகரம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோயில் வைரத் தேர் வெள்ளோட்டம் நடந்தது. தொடர்ந்து வானவேடிக்கைகளும் அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.


பழமையான கோயில் :
    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி ஜெயநகரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பழமையான தென்பழனிமலை பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வரை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை கொடிஏற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று தேரோட்ட திருவிழா தான். சுற்றியுள்ள கிராமங்களிலேயே மிக பழமையானதும், பெரிய தேரும் கொண்டது பாலசுப்பிரமணியர் கோயிலில் தான். 


வைரத் தேர் வெள்ளோட்டம் : 
    இந்த கோயில் தேர் சிதிலமடைந்திருந்ததால் தேர் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக தேர் திருப்பணிகள் நடத்தப்பட்டு முழுமையடைந்துள்ள நிலையில் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க அதிர்வேட்டுகளுடன் வைரத் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. வைரத் தேரை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேரோடு வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்ட தேர் மதியம் 2 மணிக்கு நிலைக்கு வந்தது.   வெள்ளோட்டத்தை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. வெள்ளோட்டத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர். 


சீரோடு வந்த கிராமங்கள் :
    முன்னதாக கிராமங்களில் உள்ள கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து பழம், தேங்காய், பட்டு, மாலை போன்ற பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக சீர் கொண்டு சென்று மரியாதை செய்வது வழக்கம். அதே போல பாலசுப்பிரமணியர் கோயில் வெள்ளோட்டத்தை முன்னிட்டு செரியலூர், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் மங்கள் இசை, வானவேடிக்கைகளுடன் கிராமத்தார்கள் ஊர்வலமாக சீர் கொண்டு வந்தனர்.

சார்ந்த செய்திகள்