Skip to main content

 “பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுங்கள்” - பா.ரஞ்சித் வேண்டுகோள்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
pa ranjith about pallaavaram dmk mla son issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த இளம்பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக புரோக்கர் ஒருவரின் மூலம் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் ஆண்டோ மெர்லின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், 'தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன். ஆனால் எனது செல்போனை பறித்து வைத்துக் கொண்ட அவர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தனர். மேலும் மிரட்டல் விட்டதோடு அவருக்கு பல்வேறு வகைகளில் காயங்களையும் ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் ஏதுமில்லை' என தெரிவித்து இருந்தார். இளம் பெண்ணின் பேட்டிகள் மற்றும் ஏற்பட்ட காயங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது நீலாங்கரை போலீசார் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.  

சார்ந்த செய்திகள்